

நடிகை ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிப்.26-ல் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்வு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ராஷ்மிகா மந்தனாவுக்கும், கன்னட நடிகர் ரக் ஷித் ஷெட்டிக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்பு அது நின்றது. அந்த நேரத்தில் ராஷ்மிகாவின் தாயார் பேசிய ஆடியோ, இப்போது சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆடியோ வைரலானதை அடுத்து ராஷ்மிகா காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘‘என்னைப் பற்றி தவறான தகவல்களும் என் மீதான துன்புறுத்தல்களும் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகின்றன. நான் சொல்லாத வார்த்தைகளைத் தவறான கதைகளாக மாற்றியதையும், வெறும் ‘வியூஸ்’ மற்றும் சமூக வலைதள ஈடுபாட்டுக்காக என் மீது வெறுப்பைப் பரப்பியதையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பொதுவாழ்வில் இருக்கும்போது சில நேரங்களில் நியாயமற்ற விமர்சனங்கள் வரும் என்பதை ஏற்றுக்கொண்டேன். நான் எனக்கு உண்மையாக இருக்கும் வரை, மகிழ்ச்சியைப் பரப்பும் வரை எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினேன். ஆனால், இப்போது நடந்தவை இனி புறக்கணிக்க முடியாத எல்லையைத் தாண்டி விட்டன.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக நம்பப்படும் பழைய, தனிப்பட்ட உரையாடல்களைச் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இல்லாமல் பரப்பி வருகிறார்கள். அந்த உரையாடலில் சிறிய பகுதி வேண்டு மென்றே நீக்கப்பட்டு, சர்ச்சையை உருவாக்கியுள்ளார்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அண்மையில் நடந்த சம்பவத்தை நோக்கமாகக் கொண்டு இவை பரப்பப்படுகிறது.
என் குடும்பத்தினரையும், நலம் விரும்பிகளையும், நண்பர்களையும், இந்த விஷயத்தில் தொடர்பு இல்லாதவர்களையும், அசவுகரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இது முழுவதும் ஒருவரின் தனியுரிமை மீதான தாக்குதல். தவறான தகவல்களையும், அவதூறான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள். இந்த ஆடியோவை பகிரும் அனைத்து ஊடக தளங்கள் மற்றும் தனிநபர்கள் உடனடியாக அவற்றை 24 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.