

நடிகை ருக்மணி வசந்த்
கன்னட நடிகையான ருக்மணி வசந்த் தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் மூலம் பிரபலமான இவர் இப்போது ‘டாக்ஸிக்’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர், பச்சை நிற பிகினி உடையில் காணப்படும் நீச்சல் குள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவின. இந்நிலையில் அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப் பட்டவை என்றும் அதைப் பகிர வேண்டாம் என்றும் ருக்மணி வசந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட என்னுடைய சில புகைப் படங்களை இணையத்தில் நானும் என் குழுவினரும் பார்த்தோம். அவை முற்றிலும் போலியானவை, ஜோடிக்கப் பட்டவை. இதுபோன்ற உள்ளடக்கங்களை உருவாக்குவதும், பரப்புவதும் முற்றிலும் பொறுப்பற்ற செயல். இது தனிமனித சுதந்திரத்தின் கடுமையான மீறல்.
இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இப் புகைப்படங்களை உருவாக்கியவர்கள், பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கி வருகிறோம். அப்புகைப் படங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ருக்மணி தெரிவித்துள்ளார்.