

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான ‘கே.ஜி.எஃப்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். அவருடைய ராக்கி பாய் கதாபாத்திரம் பேசப்பட்டது. இதையடுத்து வெளியான ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் சூப்பர் ஹிட் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களின் வெற்றி அவரை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்தியது.
அடுத்து அவர் கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் நடித்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை அடுத்து, ‘ராமாயணா’ படத்தில் ராவணனாக நடித்துள்ளார். ‘ராமாயணா’ திரைப்படம் தீபாவளிக்கு சர்வதேச அளவில் வெளியாக இருக்கிறது.
இதற்கான புரமோஷன் அமெரிக்காவில் நடைபெற்ற சினிமாகான் 26 விழாவில் நடைபெற்றது. அங்கு அவர் பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் ‘கே.ஜி.எஃப் 3’ படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நானும் இயக்குநர் பிரசாந்த் நீலும் தொடர்ந்து இது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். சரியான திரைக் கதையை உருவாக்க வேண்டும்; பிறகு, நிச்சயமாக அந்தப் படத்தை உருவாக்குவோம். அது உடனடியாக நடக்காது. இன்னும் சிறிது காலம் ஆகும்” என்று கூறியுள்ளார்.