

சிறுவயதிலேயே குற்ற உலகில் நுழைந்து அதன் உச்சத்தை அடைந்த இளைஞன், இறுதியில் சமூகத்தின் ‘பொது எதிரி’யாக வீழ்ந்து மடிவதே ‘த பப்ளிக் எனிமி’ (THE PUBLIC ENEMY 1931) படத்தின் ஒருவரிக் கதை.
1909: சிகாகோ நகரம். நெரிசலான சாலைகள், பரபரப்பான ரயில் நிலையங்கள். ஒரு தூக்குவாளியில் மதுவைச் சுவைக்கும் சிறுவன் டாம் பவர்ஸின் அறிமுகத்தோடு கதை தொடங்குகிறது; அவனது நண்பன் மேட். இருவரும் திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். திருடிய பொருளை வாங்கும் ‘புட்டி நோஸ்’ அவர்களைக் குற்ற உலகுக்குள் நுழைக்கிறான்.
1915: புட்டி நோஸ் கொடுத்த திருட்டு வேலையில் ஈடுபடும்போது, போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இவர்களது நண்பன் இறக்கிறான். தப்பித்து, புட்டி நோஸைத் தேடிச் செல்ல, அவன் தலைமறைவாகி றான். அதன்பின் சிகாகோ தாதா ‘பேடி ரேயான்’ என்பவனிடம் சேர்ந்து பெரும் பணம் சம்பாதிக்கின்றனர். டாமின் சகோதரன் மைக் ராணுவத்தில் சேர்கிறான்.
1920: மதுவிலக்கு சட்டம் அமலுக்கு வருகிறது. “நாளை முதல் மது கிடைக்காது” என்ற அறிவிப்பால் ஊரே வாகனங்களில் மதுப்புட்டிகளை ஏற்றிக்கொண்டு அல்லோலகல்லோலப்படுகிறது. ரேயான் உத்தரவின்பேரில் அரசு மதுக் கிடங்கிலிருந்து டாமும் மேட்டும் டேங்கர் லாரியில் மது கடத்துகிறார்கள். கார், பணம் என்று ஆடம்பர வாழ்க்கைக்கு மாறும் இவர்களுக்கு காதலிகளும் கிடைக்கின்றனர்.
ரேயான் மூலம் கேங்ஸ்டர் ‘நெயில்ஸ் நேதன்’ அறிமுகமாகிறான். அவனது ஆதரவில், எதிரி கேங்கான ‘பர்ன்ஸ் கேங்’கிடம் மது வாங்கும் கடைகளைத் துவம்சம் செய்து தங்கள் வசப்படுத்துகின்றனர்.
ராணுவத்திலிருந்து திரும்பிய மைக்கிற்கு டாம் பார்ட்டி கொடுக்க, “இது மதுவல்ல, ரத்தம்!” என மைக் கோபத்துடன் மதுவைக் கொட்டுகிறான். பழைய எதிரி புட்டி நோஸ் வந்திருப்பதை நேதன் மூலம் அறிந்த டாம் அவனைத் தேடிச் சென்று இரக்கமின்றி சுட்டுக் கொல்கிறான்.
இதற்கிடையே தாதா நேதன் குதிரையிலிருந்து விழுந்து இறக்க, கோபத்தில் டாம் அக்குதிரையை விலைக்கு வாங்கிச் சுடுகிறான். நேதன் இறந்ததால், எதிரியான ‘பர்ன்ஸ் கேங்’ இவர்களின் கம்பெனிகளை உடைக்கின்றனர். பதிலடி கொடுக்கக் கிளம்பியவர்களை தடுக்கும் ரேயான், ‘இப்போது வேண்டாம்’ என்கிறான்.
அங்கு தன்னிடம் அத்துமீறும் ரேயானின் காதலியை அறைந்துவிட்டு டாம் வெளியேற, மேட்டும் பின்தொடர்கிறான். வெளியே ‘பர்ன்ஸ் கேங்’ தாக்குதலில் டாமின் கண்முன்னே மேட் சுடப்பட்டு இறக்கிறான்.
கொந்தளிக்கும் டாம், எதிரிகளின் கோட்டைக்குள் தனி ஆளாக நுழைந்து அனைவரையும் சுட்டு வீழ்த்துகிறான். இந்தத் தாக்குதலில் அவனும் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடுகிறான். அவனை குடும்பத்தினர் பார்க்கின்றனர். மைக்கிடம் மன்னிப்பு கேட்கிறான் டாம். பிறகு டாமை, எதிரி கும்பல் ரகசியமாகக் கடத்துகிறது.
இரவு டாம் வருவதற்காக வீட்டில் எல்லோரும் காத்திருக்க, கதவைத் திறக்கும் மைக்கின் காலடியில், டாமின் சடலம் சரிந்து விழுகிறது! எந்தவிதமான வசனங்களும் இன்றி, வன்முறைப் பாதை ஒரு மனிதனை எவ்வளவு இழிவான மரணத்துக்கு இட்டுச் செல்லும் என்பதை இந்த இறுதிக் காட்சியின் மூலம் ஆழமாகப் பதிவு செய்து முடிகிறது படம்.
“டாம் பவர்ஸின் முடிவுதான் ஒவ்வொரு ரவுடியின் முடிவும். ‘த பப்ளிக் எனிமி’ ஒரு மனிதனோ, கதாபாத்திரமோ அல்ல; சமூகம் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை” என்பதை உணர்த்தியபடி திரை இருள்கிறது.
வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில், கியூபெக் கிளாஸ்மன், ஜான் பிரைட் ஆகியோரின் கதையை ஹார்வி எப்.தியூ திரைக்கதையாக்க, இயக்குநர் வில்லியம் ஏ. வெல்மேன், 1930-களின் மதுவிலக்கு கால குற்ற உலகை யதார்த்தத்தின் வலிமை குறையாமல் பதிவு செய்துள்ளார். கேங்ஸ்டர் வாழ்க்கையை மகிமைப்படுத்தாமல், அதன் இறுதி அழிவை வலியுறுத்தியதாலேயே இந்தப் படம் கேங்ஸ்டர் பட வரலாற்றில் மைல்கல்லாகப் போற்றப்படுகிறது.
ஒளிப்பதிவு – டேவ் ஜென்னிங்ஸ்: 1930-களின் நகர்ப்புறச் சூழலை இயல்பான ஒளி–நிழல்களுடன் பதிவு செய்து, பின்னாளில் உருவான ஃபிலிம் நோயர் பாணிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.
படத்தொகுப்பு -எட்வர்ட் எம். மெக்டெர்மாட்: வேகமான காட்சி மாற்றங்கள் கதையின் துடிப்பையும், குற்ற உலகின் பரபரப்பையும் வலுப்படுத்துகின்றன.
ஜேம்ஸ் காக்னி (டாம் பவர்ஸ்): கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய துடிப்பும், ஆக்ரோஷமும், இயல்பான உடல்மொழியும் ஹாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக அவரை உயர்த்தியது. முஷ்டியை மடக்கி செல்லக் குத்து குத்தும் மேனரிசம் ரசனை. கிளைமாக்சில் அவர் மரக்கட்டைபோல் குப்புற விழும் காட்சிப் பதற வைக்கிறது.
எட்வர்ட் வுட்ஸ் (மேட் டாயில்): குற்ற உலகில் நண்பர்களின் விசுவாசம், பேராசை மற்றும் அபாயத்தை இவரது நடிப்பு இயல்பாக வெளிப்படுத்துகிறது.
மே கிளார்க் (கிட்டி): இவருடைய முகத்தில் டாம் பழத்தை எறியும் காட்சி, உலக சினிமாவின் மறக்க முடியாத தருணம். படத்தின் பிரதான டைட்டில் கார்டில் இவரது பெயர் இடம்பெறவில்லை என்பது ஹாலிவுட்டின் விசித்திரமான முரண்.
ஜீன் ஹார்லோ (க்வென் ஆலன்): குறுகிய திரைநேரத்திலேயே தனது கவர்ச்சியான திரை இருப்பால் கவனம் ஈர்க்கிறார்.
டொனால்ட் குக் (மைக் பவர்ஸ்): டாமின் நேர்மையான சகோதரராக சட்டத்தை மதிக்கும் மனிதனின் குரலாகத் திகழ்கிறார். அமைதியான, அதேநேரம் அழுத்தமான நடிப்பு.
பேரில் மேர்சர் (மா பவர்ஸ்): ஒரு மகன் குற்ற உலகில், இன்னொரு மகன் நாட்டிற்காக ராணுவத்தில். இந்த இரு எதிர்துருவங்களுக்கிடையில் எந்த மகனையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தாயாக அவர் தவிக்கும் வேதனையை மிகுந்த நுட்பத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்படத்தின் யதார்த்தமும், வன்முறையும் அன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால், ஹாலிவுட் தணிக்கைத் துறை விழித்துக்கொண்டு தனது விதிகளை கடுமையாக்கத் தொடங்கியது.
காலம் மாறலாம். குற்றத்தின் வடிவம் மாறலாம். ஆனால் குற்றத்தின் முடிவு ஒருபோதும் மாறாது. எவ்வளவு பெரிய குற்றச் சாம்ராஜ்யமாக இருந்தாலும், அதன் இறுதி, வீழ்வதுதான் என்பதை 90 ஆண்டுகளுக்கு முன்பே துணிச்சலுடனும், யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கும் இப்படத்தை ரசித்து மகிழலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்க்கலாம்)
- ramkumaraundipatty@gmail.com