Published : 21 May 2019 09:59 AM
Last Updated : 21 May 2019 09:59 AM

‘நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை’ - ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ எமிலியா க்ளார்க் உருக்கமான பதிவு

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் நேற்றோடு (20.05.19) முடிவடைந்ததையடுத்து அதில் நடித்த  எமிலியா க்ளார்க் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1991-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டதே ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர். இத்தொடரின் முதல் எபிஸோட், கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், நேற்றோடு (20.05.19) முடிவுக்கு வந்தது. இதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று டேனேரிஸ் டார்கேரியன். அதிகாரமும், கம்பீரமும் நிறைந்த இந்த பாத்திரத்தை ஏற்று நடித்தவர் எமிலியா க்ளார்க். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடங்கியது முதலே இவரது கதாபாத்திரம் பரபரப்புடன் பேசப்பட்டது. தற்போது இத்தொடர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், எமிலியா க்ளார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

”இந்த தொடரும் டேனி கதாபாத்திரமும் எனக்கு எப்படிப்பட்டவை என்று என்று விவரிக்க வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். ட்ராகன்களின் தாய் அத்தியாயம் என்னுடைய பதின்பருவத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது. இந்த பெண் என் உள்ளம் முழுவதும் நிறைந்திருக்கிறாள். ட்ராகனின் நெருப்பு ஜுவாலையில் நான் நனைந்திருக்கிறேன்.

இந்த குடும்பத்தை விட்டு சீக்கிரமாகவே சென்றவர்களை நினைத்து நிறைய கண்ணீர் விட்டிருக்கிறேன். கலீஸியாக, அதிகாரமிக்க வார்த்தைகளுக்காக, நடிப்புக்கு நியாயம் செய்ய என்னுடைய மூளையை பிழிந்து முயற்சி செய்திருக்கிறேன். ஒரு பெண்ணாகவும், நடிகையாகவும், மனிதியாகவும் என்னை கேம் ஆஃப் த்ரோன்ஸ் உருவாக்கியுள்ளது.

நாங்கள் இவ்வளவு தூரம் வந்ததைக் காண என் அன்பு அப்பா இப்போது இங்கே இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அன்பான ரசிகர்களுக்கு, நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு கதாபாத்திரம் மூலம் நாங்கள் என்ன செய்தோம் என்ன உருவாக்கினோம் என்பது ஏற்கெனவே பல இதயங்களில் இடம்பெற்று விட்டது. நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை. எங்களுடைய காவல் முடிந்து விட்டது.” இவ்வாறு எமிலியா க்ளார்க் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x