Last Updated : 11 Dec, 2018 01:15 PM

 

Published : 11 Dec 2018 01:15 PM
Last Updated : 11 Dec 2018 01:15 PM

மார்டல் என்ஜின்ஸ் - ஒரு பார்வை

நமது உலகம் எப்படி வேண்டுமானாலும் அழியலாம். இயற்கைப் பேரிடர்களால் ஒவ்வொரு பகுதியாக அழியலாம். அல்லது போர், அணு ஆயுதங்களால் மொத்தமாக அழிக்கப்பட்டலாம். இப்படியான அழிவுக்குப் பிறகான உலகம் எப்படியிருக்கும், அங்கு இருக்கும் சமூக கட்டமைப்பு, நன்மை தீமைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் தொடர்ந்து ஹாலிவுட்டில் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை  post-apocalyptic படங்கள் என்று வகைப்படுத்துகிறார்கள்.

'மேட்ரிக்ஸ்', 'ஐ அம் லெஜெண்ட்', 'மேட் மேக்ஸ்' போன்ற படங்கள் இந்த வகை தான். ஏன் அனிமேஷனிலும் கூட பிக்சாரின் வால்-இ படத்தில் கூட அழிந்து போன, மனித நடமாட்டம் இல்லாத பூமி எப்படி இருக்கும் என்பதைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். இந்த வகைப் படங்களில் சமீபத்திய சேர்க்க 'மார்டல் என்ஜின்ஸ்'.

பிலிப் ரீவ் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தின் திரைக்கதாசிரியர்களில் 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' புகழ் பீட்டர் ஜாக்சனும் ஒருவர். பீட்டர் ஜாக்சனின் பல படங்களில் கிராபிக்ஸ் பணிகளை மேற்பார்வையிட்ட கிறிஸ்டியன் ரிவர்ஸ்தான் இந்தப் படத்துக்கு இயக்குநர்.

எதிர்காலத்தில் உலகின் பெரும்பாலான வளங்கள் அழிந்திருக்க, நகரங்கள் பெரிய கட்டுமானங்களில் உருவாக்கப்பட்டு அவை வாகனங்களாக, வளங்களைத் தேடி சக்கரத்தில் நகர்ந்து வருகின்றன. இப்படி நகரும் நகர வாகனங்கள், எரிபொருள், உணவு என அத்தியாவசிய தேவைகளுக்காக மற்ற சிறு (நகரும்) நகரங்கள் மீது போர் தொடுத்து, அவற்றை ஆக்கிரமித்து, வளங்களை எடுத்துக் கொள்கின்றன.

imagesjpg

ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாடாகச் சென்று படையெடுத்து, அந்த நாட்டின் வளங்களைத் திருடிச் சென்றது இந்த கதையின் ஆசிரியரை அதிகமாக பாதித்திருக்கும் போல. தனது கதையில் முக்கிய வில்லன் நகரமாக லண்டனை வைத்திருக்கிறார்.

மார்டல் என்ஜின்ஸ் படத்தின் ஆரம்பித்திலேயே லண்டன் நகரம், இன்னொரு சிறு நகரத்தை துரத்திப் பிடித்து சண்டையில் வெல்கிறது. அந்த சிறு நகரம் லண்டனால் விழுங்கப்படுகிறது. அதிலிருந்து ஹெஸ்டர் ஷா என்ற பெண், முகத்தை மூடிக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட நபரைத் தேடி வருகிறாள்.

அந்த நபர், லண்டனின் வரலாற்றாசிரியர்கள் குழுவின் தலைவர், அதிக செல்வாக்குள்ள தாடியஸ் வாலெண்டைன்.  தாடியஸை கண்ட மாத்திரத்தில் அவனைக் கொல்ல முயற்சிக்கிறாள் ஹெஸ்டர். முயற்சி தோல்வியடைகிறது. தாடியஸைக் காப்பாற்றும் டாம் அதே லண்டனில் இருக்கும், இன்னொரு இளம் வரலாற்றாசிரியன். டாம் ஹெஸ்டரைத் துரத்த, லண்டன் காவலாளிகளும், தாடியஸும் இவர்களைத் துரத்துகின்றனர்.

அந்த பிரம்மாண்ட நகரும் நகர வாகனத்திலிருந்து குதிப்பதற்கு முன் ஹெஸ்டர், டாமிடம் ஏதோ சொல்லிவிட்டு தப்பிக்கிறாள். இவர்களைத் துரத்தி வரும் தாடியஸிடம் டாம், ஹெஸ்டர் சொன்னதைக் கேட்க, தாடியஸ் டாமையும் வெளியே தள்ளிவிடுகிறான்.

ஹெஸ்டர் யார், அவள் ஏன் தாடியஸைக் கொல்ல வந்தாள், இதற்கிடையே, லண்டன் நகரத்துக்குள் தாடிய்ஸ் ரகசியமாக உருவாக்கி வரும் ஆயுதம் என்ன? இப்படியான கேள்விகளோடு இன்னும் பல உப கதைகளை, தகவல்களைச் சொல்லும் படம் தான் மார்டல் என்ஜின்ஸ்.

கிராபிக்ஸில் ஹாலிவுட் உச்சம் தொட்டு பல காலம் ஆனாலும் அதில் புதிதாக ஏதாவது செய்தால் மட்டுமே தனித்துத் தெரிகிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் அற்புதமே. நகரும் நகரங்கள், நகரங்களிடையே நடக்கும் போர், அழிந்து போன உலகின் வெட்டவெளி பிரதேசங்கள் என படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு அட்டகாசமாக இருக்கிறது. ஐமேக்ஸ் திரையில் பார்க்க உகந்த பிரம்மாண்டமும் படத்தின் பெரிய சாதகம். படம் வீழ்வது அதன் திரைக்கதை அமைப்பில் தான்.

தொடர்ந்து பல ஹாலிவுட் படங்கள் பார்த்து வரும் எவரும் எளிதில் யூகிக்கக்கூடிய கதை + திரைக்கதை. மனதில் நிற்காத கதாபாத்திரங்கள். தேவையற்ற கிளைக் கதை(கள்), தகவல்கள் என ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது படம். அடிப்படைக் கதை மிக எளிமையாக இருந்தாலும் அது சொல்லப்படும் விதத்தில் சுவாரசியப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதையும் எளிமைப்படுத்தி எல்லா தரப்புக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தினாலோ என்னவோ, நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள்.

அமெரிக்காவில் வரும் வாரம் தான் படம் வெளியாகவுள்ளது. ஆனால் இந்திய உள்ளிட்ட சில நாடுகளில் ஏற்கனவே வெளியாகி, எதிர்மறையான விமர்சனங்களையே சந்தித்துள்ளது. பசிபிக் ரிம், டூம்ப் ரைடர், ப்ரிடேட்டர் என இந்த வருடம் வந்த, கிராபிக்ஸ் / ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு சில ஹாலிவுட் படங்கள் தோல்வியையே சந்தித்திருகின்றன. படம் ஜெயிக்க கிராபிக்ஸ் மட்டுமே போதாது, சுவாரசியமான திரைக்கதையும் வேண்டும் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாக இந்த மார்டல் என்ஜின்ஸும் சேர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x