Last Updated : 23 Jun, 2023 10:33 AM

1  

Published : 23 Jun 2023 10:33 AM
Last Updated : 23 Jun 2023 10:33 AM

கரோனா முதல் டைட்டன் விபத்து வரை.. ‘The Simpsons' முன்கூட்டியே கணித்த நிகழ்வுகள்

டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக ஆழ்கடலுக்குச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே ‘தி சிம்ப்ஸன்ஸ்; தொடர் கணித்திருப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏதாவது ஒரு மிகப்பெரிய விபத்து அல்லது நிகழ்வு நடக்கும்போது சிம்ப்ஸன்ஸ் தொடரின் பெயரும் அடிபடுவது இது முதல் முறையல்ல. கரொனா வைரஸ் தொடங்கி உக்ரைன் போர் வரை ஏராளமாக விஷயங்களை ஆச்சர்யமூட்டும் வகையில் ‘தி சிம்ப்ஸன்ஸ்’ தயாரிப்பாளர்கள் கணித்துள்ளனர்.

ஸ்மார்ட்வாட்ச்: இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் ஸ்மார்ட்வாட்ச் இருக்கின்றது. ஆனால் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாவதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்மார்ட்வாட்ச் போன்ற ஒரு சாதனம் ‘தி சிம்ப்ஸன்ஸ்’ தொடர் அறிமுகப்படுத்தியது. ஆறாவது சீசனின் ‘Lisa's Wedding' என்ற எபிசோடில், எதிர்கால தொழில்நுட்பம் குறித்த வசனங்களுடன் இந்த வாட்ச் இடம்பெற்றுள்ளது.

டேவிட் சிலைக்கு சென்சார்: மைக்கேலேஞ்சலோவின் டேவிட் சிலை உலகப் புகழ் பெற்றது. நிர்வாணமாக இருக்கும் இந்த சிலைக்கு அரசாங்கம் ஆடை அணிவிப்பது போல ஒரு காட்சி சிம்ப்ஸன்ஸ் தொடரின் 2வது சீசனின் 9வது எபிசோடில் இடம்பெற்றிருக்கும். 2016ஆம் ஆண்டு, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ள டேவிட் சிலை குழந்தைகளுக்கு காட்ட முடியாத அளவுக்கு ஆபாசமாக இருப்பதாகவும், அந்த சிலைக்கு ஆடை அணிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.

வால்ட் டிஸ்னி - ஃபாக்ஸ் நிறுவனங்கள் இணைப்பு: கடந்த 2019ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நிறுவனமான 20th சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் பெரும் தொகைக்கு கைப்பற்றியது. ஆனால் இதனை 1998ஆம் ஆண்டே ‘தி சிம்ப்ஸன்ஸ்’ தயாரிப்பாளர்கள் கணித்துள்ளனர். 10வது சீசனின் 5வது எபிசோடில் வால்ட் டிஸ்னி - ஃபாக்ஸ் நிறுவனங்கள் இணைக்கப்பட்டதைப் போல ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது.

டொனால்டு ட்ரம்ப்: 2016ஆம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். ஆனால் அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே 2000ஆம் ஆண்டு வெளியான ஒளிபரப்பான 11வது சீசனின் 17வது எபிசோடில் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்பார் என்று காட்டப்பட்டிருக்கும்.

இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த காட்சி நிஜத்திலும் அப்படியே நடந்ததுதான் அந்த எபிசோடில், டொனால்டு ட்ரம்ப் ஒரு எஸ்கலேட்டரில் இறங்கும்போது அவரை சுற்றி நின்று மக்கள் கூட்டம் கையசைப்பது போல வைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சி அப்படியே உண்மையிலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. அதனை கீழே இருக்கும் விடீயோவில் பார்க்கலாம்:


வீடியோ கால்: 1995ல் வெளியான 6வது சீசனின் 19வது எபிசோடில் லிசா என்ற கதாபாத்திரம் தன் தாய்க்கு வீடியோ கால் செய்து பேசுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஸ்மார்ட்போன்களே இல்லாத ஒரு காலத்தில் சிம்ப்ஸன்ஸ் தயாரிப்பாளர்கள் இப்படியொரு காட்சியை வைத்துள்ளனர். 2010ஆம் ஆண்டில் தான் ஆப்பிள் நிறுவனம் முதன்முறையாக வீடியோ காலில் பேசும் ‘ஃபேஸ்டைம்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ்: 2019ஆம் ஆண்டு உருவான கொரொனா வைரஸ் உலகையை புரட்டிப் போட்டதை அறிவோம். ஆனால் இதே போன்ற வைரஸ் குறித்து 1993ஆம் ஆண்டு வெளியான சிம்ப்ஸன்ஸ் தொடரின் 4வது சீசனில் ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளது. 21வது எபிசோடில் காட்டப்படும் ஒசாகா வைரஸ் கிட்டத்தட்ட கரோனா வைரஸின் அறிகுறிகளுடனே இருக்கும்.

டைட்டன் விபத்து: தற்போது நடந்த ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்தும் சிம்ப்ஸன்ஸ் தொடர் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளது. 2006ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ தொடரின் 17வது சீசனின் 10வது எபிசோடில் பல ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கிய 'Piso Mojado' என்ற கப்பலில் இருக்கும் பொக்கிஷங்களை எடுப்பதற்காக நாயகன் ஹோமர் சிம்ப்ஸன் தனது தந்தையுடன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணிக்கிறார். பவளப் பாறை ஒன்றில் சிக்கிக் கொள்ளும் நீர்மூழ்கிக் கப்பலில் ஆக்ஸிஜன் குறைந்து ஹோமர் அதில் மாட்டிக் கொள்வது போல காட்டப்பட்டுள்ளது. ஆச்சர்யமூட்டும் இன்னொரு விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானில் இருந்து இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட ஷாஜதா தாவூத் மற்றும் மகன் சுலேமான் தாவூத் இருவரும் தந்தையும் மகனும் ஆவர்.

இது போல இன்னும் ஏராளமான விஷயங்கள் ‘தி சிம்ப்ஸன்ஸ்’ தொடரில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எதேச்சையாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு எடுக்கப்பட்டவையா என்று தொடர்ந்து இணையத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x