

குத்துப்பாடல்களில் வரும் சில வரிகள் சங்கடத்தை ஏற்படுத்துவதாகப் பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமா என்பது பிம்பங்களால் வரையறுக்கப்படுகிறது.
எனவே, ஒரு பெண்ணின் உடலை ஒவ்வொரு பகுதியாகக் காட்டும்போது,கேமரா அந்த உடலைச் சுற்றி எப்படி நகர்கிறது என்பதை வைத்தே இயக்குநரின் நோக்கம் என்ன என்பது முடிவாகிறது. குத்துப்பாடலில் வரும் நாயகி, தன் மீதான அனைத்து கட்டுப்பாட்டையும் இழந்து, ‘ஆணின் பார்வைக்கு’ தன்னை ஒப்புக்கொடுப்பதுபோல நான் உணர்கிறேன்.
பெரும்பாலான பாடல்களில் அப்படித்தான் இருக்கிறது. அங்கே அவள் ஒரு பொருளாக மாறிக்கொள்கிறாள். அப்பாடல்களில் வரும் சில வரிகள் எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஆண்கள் இதைச் செய்யும்போது பெண்கள் ஏன் செய்யக்கூடாது?’ என்று பல பெண்கள் கேட்கிறார்கள். ஆனால், ஆண்கள் தங்களைப் பொருளாகக் காட்டிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்காக, நீங்களும் ஏன் அதற்குச் சம்மதிக்க வேண்டும்? என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
பெரும்பாலும் குத்துப்பாடல்களுக்கும் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதில்லை. அது தனித்த விஷயமாகவே இருக்கிறது. அப்பாடல்களுக்கான சமூகத்தின் எதிர்வினையும் எனக்குக் கவலையளிக்கிறது. திருமண விழாக்களுக்குச் சென்றால், அங்கே சிறு குழந்தைகள் ‘சோலி கே பீச்சே க்யா ஹை’ போன்ற பாடல்களைப் பாடி ஆடுகிறார்கள். அங்கிருப்பவர்கள் அதைப் பார்த்து சிரிக்கிறார்கள். யாரும் அந்த வரிகளைக் கவனிப்பதில்லை. இவ்வாறு ஷபானா ஆஸ்மி தெரிவித்துள்ளார்.