Published : 20 May 2023 04:07 PM
Last Updated : 20 May 2023 04:07 PM

மக்களை மகிழ்வித்தவர்... கலங்கவும் வைத்திருக்கிறார்! - வடிவேலு எனும் ‘மாமன்னன்’ குரலில் மயக்கிய பாடல்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு பாடியிருக்கும் 'ராசாகண்ணு' பாடல்தான் சமீபத்திய டிரெண்டிங். சமூக வலைதளத்தை ஒரே நாளில் தன்வசப்படுத்துவது நடிகர் வடிவேலுவுக்குப் புதிதல்ல. 'மாமன்னன்' பாடல் இத்தகைய வரவேற்பை பெறுவதற்கு, வடிவேலுவின் குரலும், அப்பாடல் மக்களிசை வடிவிலான அதன் மெட்டமைப்பும்தான் முதன்மைக் காரணம். வடிவேலுவின் குரலில் "தந்தானா தானா தன தந்தானா தானா"வுடன் தமிழர் வரலாற்று மரபிலும் வாழ்விலும் நீக்கமற பொதிந்துக் கிடக்கும் நாட்டுப்புற இசை கருவிகளான தவிலும், உருமியும் ஒருசேர உரசிக்கொள்ளும் தொடக்க இசையில் வயிற்றுக்குள் அலையடிக்கும் கடலின் ஈரம் கண்களில் சொட்டுகிறது.

"மலையிலதான் தீப்பிடிக்குது ராசா என் மனசுக்குள்ள வெடி வெடிக்குதா ராசா... தவிலெடுத்து தாளம் அடி ராசா... நான் தன்னானா தன்னானா பாடுவேன் ராசா... குச்சிக்குள்ளே கெடந்த சனம் கோணி சாக்குல சுருண்ட சனம் பஞ்சம் பசி பார்த்த சனம் படையிருந்தும் பயந்த சனம் பட்ட காயம் எத்தனையோ ராசா அத சொல்லிபுட்டா ஆறிடுமோ ராசா" என்ற கவிஞர் யுகபாரதியின் வரிகளை மண் மனம் மாறாத வடிவேலுவின் குரலில் கேட்பது கனத்த மவுனத்தைக் கொடுக்கிறது.

எத்தனையோ இசை வடிவங்களை கேட்டு மகிழ்ந்தாலும், ஓர் அழுகை அல்லது ஓலம் நம் கவனத்தை எளிதில் ஈர்த்துவிடும். காரணம், அது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு தொடர்புடையது. ஒப்பாரி வடிவிலான தாலாட்டாக வந்திருக்கும் இந்தப் பாடல் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. வரிகளின் வழியே வலிகளை கடத்தும் பெரும்பணியை இப்பாடல் செய்திருக்கிறது. ஒரு சமுகத்தின் தொன்றுதொட்ட வாழ்வியல் வடிவேலுவின் குரலில் வாஞ்சை கொண்டிருக்கிறது.

நகைச்சுவை உலகின் புலிகேசி அரசனாக முடிசூட்டிக் கொண்ட அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிக்க வந்திருக்கிறார். அதுவரை மீம் கிரியேட்டர்ஸ்களின் கன்டென்ட் சோர்ஸாக மட்டும் வடிவேலு இருந்து வந்தார். அவரது ரீ என்ட்ரியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. இத்தகைய சூழலில்தான், 'மாமன்னன்' திரைப்படத்தில் வரும் அவரது தோற்றம் பேசுபொருளானது. அதைத்தொடர்ந்து அவரது குரலில் வந்துள்ள ராசாகண்ணு பாடல் தற்போது பேசப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் புதிதல்ல, ஆரம்பகாலத்தில் தன்னை திரைத் துறையில் நிலைநிறுத்திக்கொள்ள பயன்பட்ட அவரது பன்முகத் திறமையின் வெளிப்பாடுகள்தான்.

திரைப்படத்துக்கு வரும்முன், கருத்த தோலும் ஒடிசலான தேகமுமாக வலம்வந்த வடிவேலின் மூளைக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தவை எல்லாம் இதுபோன்ற தொன்மத்தை, மக்களை, மண்ணைப் பற்றிய வாழ்க்கையும், நாட்டுப்புற மற்றும் பழைய சினிமா பாடல்களின் திரட்டுகளும்தான். மண் சார்ந்த மக்களின் வாழ்வியலைப் பேசும் பாடல்கள்தான் திரைத்துறையில் தடம் பதிப்பதற்கு முன்னிருந்த பெரும்சொத்து. வடிவேலுவின் இந்த அசாத்தியமான திறமை, ஆரம்பக்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், அவரது நகைச்சுவைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அவரை அதிலிருந்து விலக்கிவிட்டது.

இருப்பினும், அவர் நடித்த பல படங்களில், தனக்குள் இருக்கும் பாடும் திறமையை அவர் வெளிக்காட்ட மறந்ததே இல்லை. குட்டுப்பட்டாலும் மோதிரக் கையில் குட்டுப்பட வேண்டும் என்பது போல மக்களிசைக்கு சொந்தமான வடிவேலுவின் குரலை முதன்முதலில் சினிமாவில் பயன்படுத்தியவர் இளையராஜா தான். "தொறந்திருக்கும் கேட்டு… அது என்னுடைய ரூட்டு… வெடிக்கிதொரு வேட்டு… அது பாவலரு பாட்டு" என்ற வரிகளைத்தான், இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தில் வரும் 'போடா போடா புண்ணாக்கு' பாடலை வடிவேலு பாடினார்.

அதன்பின்னர் வடிவேலு இளையராஜாவின் இசையில் 'எல்லாமே என் ராசாதான்' படத்தில் 'எட்டணா இருந்தா' பாடலை பாடியிருந்தார். பாடலை எழுதிய பொன்னடியான் என்ன நினைத்து எழுதினாரோ தெரியாது, அத்தனையும் பலித்தது.

"கால் வயித்துக் கஞ்சிக்காக கடலகூட தாண்டுவேன் ஓஒ... வானவில்ல வாங்க பேரம் கடவுளோட பேசுவேன் ஓஒ... இந்திரனும் கூட என்னோட ப்ரெண்டு என்று சொல்ல என்ன தவிர யாருடா அந்த லோகம் வாழும் சுந்தரிகள் கூட வந்து எனக்கு கால் அமுக்கும் பேருடா" - வடிவேலுவை அன்றே கணித்த வரிகள் இவை.

இப்படியாக தொடர்ந்த வடிவேலுவின் திரையிசை பயணத்தில் இசையமைப்பாளர் தேவாவுக்கு மிக முக்கிய பங்குண்டு. அவரது இசையில் வடிவேலுவின் குரல் சேரும் இடங்களெல்லாம் கொண்டாட்டமும் கூடிவிடும். தேவாவின் இசையில் 'காலம் மாறிப் போச்சு' படத்தில் வரும் 'வாடி பொட்டபுள்ள வெளியே' பாடல் வடிவேலு தேவா காம்பினேசனின் அல்ட்டி ரக பாடல். பொதுவாக மக்களிசை கலைகளை வரன்முறைக்குள் அடைக்க முடியாது. இலக்கண இலக்கிய பகுப்புகளிலோ ராக தாள வகைப்பாடுகளிலோ சிக்கிக் கொள்ளாது. இதுதான் அந்தக் கலை வடிவத்தை மக்கள் கொண்டாடித் தீர்க்க முக்கிய காரணியாக இருக்கிறது.

இந்தப் பாடலை பாடுவதற்கு வடிவேலுவைத் தவிர யாரையுமே யோசித்துப் பார்க்கவே முடியாது. இந்தப் பாடலை அவர் பாடியிருக்கும் விதம், கதையோட்டத்துக்கு அத்தனை வலு சேர்த்திருக்கும். இந்தப் பாடல் அவருக்கும் மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்ததுடன் திரும்பிய பக்கமெல்லாம் அவரைக் கொண்டு சேர்த்திருந்தது. தொடர்ந்து அவரும் வாய்ப்பு கிடைத்த படங்களில் எல்லாம் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிவந்தார். அதேநேரத்தில் எண்ணற்ற திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்தும் வந்தார். 'கட்டுனா அவள கட்டணும்டா', தொடங்கி அண்மையில் வந்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் வந்த 'அப்பத்தா' உள்ளிட்ட பாடல்கள் வரை அவர் பாடியுள்ளார்.

வடிவேலுவின் நாடி நரம்பெல்லாம் ஆரம்பக்காலத்தில் இருந்தே ஊறிப்போயிருந்த மண் சார்ந்த மக்கள், இசை கலந்த 'ராசாகண்ணு' பாடலைக் கேட்கும்போது, எத்தனையோ நாட்கள் எத்தனையோ கோடி பேரை சிரிக்க வைத்திருந்த அவரது குரல், இன்று எத்தனையோ கோடி பேரை அழவும் வைத்திருக்கிறது. மனசாட்சியைப் புரட்டிப் பார்த்து, உள்ளக்கிடக்கைகளில் ஊடுருவும் இதுபோன்ற மக்களிசை கமழும் பாடல்களை அவர் தொடர்ந்து பாட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x