Last Updated : 18 Feb, 2023 10:08 PM

 

Published : 18 Feb 2023 10:08 PM
Last Updated : 18 Feb 2023 10:08 PM

‘தனிப்பட்ட சமுதாயத்துக்காக படம் எடுக்கவில்லை’ - ‘பகாசூரன்’ இயக்குநர் மோகன்.ஜி

புதுச்சேரி: ஒவ்வொரு பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்காகத்தான் படம் எடுக்கின்றேன். தனிப்பட்ட சமுதாயத்துக்காக நான் படம் எடுக்கவில்லை என்று பகாசூரன் திரைப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.

பகாசூரன் படத்தின் இயக்குநர் மோகன்.ஜி இன்று மாலை புதுச்சேரி வந்தார். அவர் காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் மக்களுடன் அமர்ந்து படத்தை கண்டு ரசித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா காலக்கட்டத்தில் பெண்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி அவர்களை ஆன்லைன் பாலியல் உள்ளிட்ட பல வகையானவைகளுக்குள் கொண்டு போய்விட்டனர்.

செல்போனுக்குள் என்னென்ன மாதிரியான ஆப்ஸ்கள் இருக்கின்றன. அதனை இளைஞர்கள் பார்க்க ஆரம்பித்து வருவாய்க்காக ஆசைப்பட்டு சிக்கிக்கொண்டால் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும், இதில் விழிப்புணர்வு இல்லாவிட்டால் குடும்பத்தை எப்படி பாதிக்கும் என்ற ஆழமான கருத்துடன் பகாசூரன் படம் வெளிவந்துள்ளது.

ஆன்லைனில் வந்துள்ள விமர்சனங்கள் அத்தனையும் பாசிட்டீவாக வந்துள்ளது. படத்தை பார்த்த அனைவரும் எனக்கு நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். எந்நேரமும் நம்மையொட்டியுள்ள செல்போன் அனைத்து குடும்பத்துக்கும் எவ்வளவு அபாயகரமானது, செல்போனில் எந்தளவுக்கு நல்லது இருக்கின்றதோ, அந்தளவுக்கு ஆபத்தும் இருக்கிறது, குழந்தைகளை எந்தளவுக்கு கண்காணித்து பார்க்க வேண்டும் என்பதையும் சொல்வது தான் இந்த படம்.

அடுத்த 10 ஆண்டுகள் இந்த படத்தின் தாக்கம் ஒவ்வொருவருடைய மனதிலும் இருக்கும். ஒவ்வொரு பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்காகத்தான் நான் படம் எடுக்கின்றேன். தனிப்பட்ட சமுதாயத்துக்காக எடுக்கவில்லை. நான் சார்ந்த சமுதாயத்தின் பின்னணியை கதைக்களமாக வைத்துக்கொள்கிறேன்.

பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்காக தேடி பிடித்து புதிய கருத்துக்களை சொல்கிறேன். குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் நான் படம் எடுக்கிறேன் என்ற குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் எடுக்கும் படத்தின் மூலம் என்மேல் தனிப்பட்ட பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.

இவைற்றையெல்லாம் மாற்றி வெகுவிரைவில் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவேன். திரௌபதி, ருத்ரதாண்வடம் படங்களில் நல்ல கருத்துக்களை சொல்லியுள்ளேன். பகாசூரன் படத்துக்கு இதுவரை சின்ன சர்ச்சை கூட எழவில்லை. அனைவரும் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க வேண்டும். புதுச்சேரியில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை பார்க்கின்றனர். நல்ல வரவேற்பு உள்ளது. எல்லா மக்களுக்கும் சென்று சேரக்கூடிய வகையில் தான் படத்தை எடுத்து வருகிறேன். ஆனாலும் சிலர் என்னுடைய படங்களை எதிர்த்து பேசி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x