Last Updated : 14 Feb, 2023 01:27 PM

2  

Published : 14 Feb 2023 01:27 PM
Last Updated : 14 Feb 2023 01:27 PM

Valentine's Day ஸ்பெஷல் | தமிழ் சினிமா பதிவு செய்த 40+ காதலில் கவனம் ஈர்த்தவை!

எக்ஸ்பைரி டேட் இல்லாத விஷயங்களுள் ‘காதல்’ முதன்மையானது. அதற்கென வயதோ, மதமோ, சாதியோ, தேசமோ எந்த எல்லைக்கோடுகளும் இருப்பதில்லை. காலாவதியாகா இந்த காதலை 1985-லேயே ‘முதல் மரியாதை’ படத்தின் வழியே தமிழ் சினிமா சொல்லிவிட்டது. 40+ கொண்ட ஒருவருக்கும் 20+ கொண்ட ஒருவருக்குமான அந்தக் காதல் புனிதங்களை உடைத்து, வயதுக்கான எல்லைக் கோடுகளை அழித்தது. பொதுவாக இளம் வயதில் வரும் காதல்கள் அந்த வயதிற்கான வேகத்துடன் பரிணமிப்பவை. நீருற்றைப்போல பொங்கும் அந்தக் காதல் இளமையைத் தாண்டி நீடித்திருப்பது பெரும் சவால். ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ரங்கன் வாத்தியார் சிறைக்குச் சென்று வந்த பின்னர் அவருக்கு உணவு உபசரிக்கும் மனைவியிடமிருந்து அவர் பெறும் சிறிய தீண்டல் ஒட்டுமொத்த காதலையும் பேசிவிடும்.

ஜெரீனாவின் பழைய காதல் நினைவுகள் குறுக்கிட்டாலும், ஏன் ஜெரீனாவே குறுக்கிட்டாலும் கூட செல்விக்கு ‘காலா’ தரும் ‘லவ் யூ’க்கள் போதுமானது. செல்விக்கு கூட முந்தைய பெருமாளின் காதல் இருக்கலாம். ஆனாலும் செல்விக்கும் காலாவுக்குமான புரிதலும் நம்பிக்கையும் தான் அவர்களின் காதலை தாங்கி நிற்கும். விரவிக் கிடக்கும் இளம் காதல்களுக்கு இடையே முத்தாய் ஜோலிக்கும் 40+ காதலை தமிழ் சினிமா அழகாகவே பதிவு செய்திருக்கிறது.

அதற்குப் பொருத்தமான உதாரணமாக ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் ஜெயபிரகாஷ் - துளசி காதலைக் காண முடியும். படத்தில் வரும் ஒரு காட்சியில் ‘உனக்கு மொத வண்டி ஓட்ட தெரியுமா? வண்டி ஒட்ட பழகிட்டு கூப்டு அப்றம் நான் ஏறலன்னா என்னன்னு கேளு’ என துளசி சொல்லி நகரும் காட்சியில், அவருக்கு முன்பாக மூவ் ஆகும் கேமராவில் ஒருவித சிரிப்புடன் நடந்து செல்வார். துளசியிடம் எப்போதும் தொற்றியிருக்கும் ஒருவித ‘நக்கல்’ படம் முழுக்க ரசிக்கும்படியாகவே இருக்கும்.

மனைவிக்காக ஜெயபிரகாஷும் காரை ஓட்டியாகவேண்டும் என கங்கணம் கட்டி நிற்பார். கல்யாண நாளுக்குள் காரை ஓட்டி கற்றுகொள்ள அவர் மெனக்கெடல்கள் அவர்களுக்கிடையே நீர்த்துப்போகாத காதலை மேலும் கெட்டிபடுத்தியிருக்கும். இருவருக்குமான உரையாடல் ஒன்றில், ‘நான் போய்டா நீ என்ன பண்ணுவ? என்ன மாதிரி உன்ன யாராலும் பாத்துக்க முடியாது தெரியும்ல’ என சொல்லிக்கொண்டிருக்கும்போதே துளசி கண்களில் நீர் ஓடும். இதையெல்லாம் கேட்காதபடி கட்டிலில் படுத்திருக்கும் ஜெயபிரகாஷ் தூங்குவது போல பாவனை காட்டியிருப்பார். கேமரா நகராமல் அவர்களின் காதல் சாட்சியாக ஆச்சரியப்பட்டு அப்படியேயிருக்கும். மௌனப் பெருவெளிக்குப் பின் ஜெயபிரகாஷ் எழுந்து துளசியைப்பா ர்க்கும் காட்சி போதுமானது. அது ஒரு பெருங்காதலை அனாயசமாக சொல்லிக் கடந்திருக்கும். இருவருக்குமான காதல் பெரும்பாலும் வெளிக்காட்டப்படாமலிருந்தது அதன் அழகு.

ஜெயப்பிரகாஷுக்கும் துளசிக்கும் இடையேயான காதலை ஒருவரிடம் மற்றொருவர் வலிந்து வெளிக்காட்டிருக்க மாட்டார்கள். அது அதன் போக்கில் படத்தில் வரும் காரைப் போல சென்றுகொண்டிருக்கும். காரை ஓட்ட முடியுமா என சவால் விட்டுக்கொண்டு மறுபுறம் ‘அவர எப்படியாவது கார ஓட்ட வைச்சிடுப்பா’ என விஜய் சேதுபதியிடம் துளசி பேசுவது தன் கணவர் தோற்றுப்போய்விடக் கூடாது என்ற கண்ணியக் காதலின் வெளிப்பாடு.

அதைத் தொடர்ந்து ஜெயபிரகாஷ், ‘நீ ஓட்டு நான் ஸ்டேரிங் மட்டும் பிடிச்சுக்குறேன். நானே ஓட்றேன் நெனைச்சுப்பா. அவ ஆசைய தீர்த்திடலாம். சின்ன புள்ள மாதிரி ஆசப்பட்டாடா’ என விஜய் சேதுபதியிடம் பேசும் காட்சி துளசிக்கும் ஜெயபிரகாஷுக்குமிடையே இழையோடும் காதலை அழுத்தமாக்கியிருக்கும்.

‘உனக்காக பொறந்தேனே எனதழகா’ பாடலை கண்களை மூடிக்கொண்டு கேட்டால் அது ஒரு ஹீரோ- ஹீரோயினுக்காக எழுத்தப்பட்ட காதல் பாடலுக்கான அத்தனை அம்சங்களை அச்சுபிசகாமல் ஏந்தியிருக்கும். ஆனால், அது உண்மையில் எழுதப்பட்டிருப்பது துளசி - ஜெயபிராஷ் என்ற 40+ காதலர்களுக்காக. தமிழ் சினிமாவில் இப்படியான ஒரு காதல் வார்ப்பு பாடல் அரிது. அந்த மொத்தப் பாடலிலும் இருவருக்குமான பிணைப்பு காட்சிகளின் வழியே இறுக்கமாக்கி படிமங்களாக்கப்பட்டிருக்கும்.

‘உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன? போகாது உன்னோட பாசம்’ என்ற வரியைத் தொடர்ந்து வரும் காட்சியில் ‘கால்ல விழு’ என ஜெயபிரகாஷ் சொல்ல ஒரு முறைப்புடன் துளசி கடந்து செல்வது சுயமரியாதைக் காதலின் வேறொரு வடிவம். இருவருக்குமிடையே தீராமல் ஒட்டியிருக்கும் எலி - பூனை சண்டை வெகுவாக ரசிக்க வைப்பதோடு கச்சிதமான மீட்டரில் காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கும்.

படத்தின் இறுதியில் ‘கோயிலுக்கு கார்ல கூப்டு போகலன்னு வருத்தமா இருக்கியா’ என ஜெயப்பிரகாஷ் கூறும்போது, தூங்குவது போல நடித்திருப்பார் துளசி. அவரில் காதலைக் கண்டு மீண்டும் நிலைமாறாமல் இருக்கும் கேமரா லென்ஸ் க்ளோசப் செல்லும்போது இடையில் சிக்கியிருக்கும் காதல் கசிந்துருகும்.

ஜெயபிரகாஷின் சங்கடத்தை புரிந்துகொண்ட துளசி, ‘எனக்கு உன்கூட போகணும் கார்ல போணா என்ன மாட்டுவண்டியில ஏறுணா என்ன?’ என்ற புரிதல்கள் அத்தனை அழகு.படம் இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க புரிதல்கள் கூடிக்கொண்டே சென்று இருவருக்குமான காதல் நெருங்கி வரும். இளமைக் கடந்து ஈகோயின்றி ஒருவரையொருவர் புரிந்து காதலின் வழி வாழும் இருவரின் காதலை பதிவு செய்ததில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படம். ‘வயசாகி என்ன காதல் வேண்டி கிடக்கு’ என கருதுபவர்கள் காதலர் தினத்தன்று படத்தையும் அதன் வழி உலவும் காதலையும் கண்டு ‘கலாவதியில்லாதது காதல்’ என்பதை நிச்சயம் உணர முடியும். | வாசிக்க > Valentine's Day ஸ்பெஷல் | தமிழ் சினிமாவின் ‘க்ளாஸிக்’ லவ் புரபோசல்ஸ்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x