Last Updated : 07 Jan, 2023 05:19 PM

 

Published : 07 Jan 2023 05:19 PM
Last Updated : 07 Jan 2023 05:19 PM

திரைகள் ஒதுக்கீட்டில் குழப்பம் - ‘வாரிசு’, ‘துணிவு’ முன்பதிவு தள்ளிப்போவதன் பின்னணி

அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ இரண்டு படங்களுக்குமான திரைகள் ஒதுக்கீடு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலையொட்டி ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இரண்டு படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாவதால் படங்களுக்கு திரைகளை பிரிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. மேலும் படம் வெளியாவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம்.

திரைகள் ஒதுக்கப்படுவது குறித்து பேசிய அவர், “இன்னும் மல்டிப்ளக்ஸ்களிலும் ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களில் முன்பதிவுகள் தொடங்கப்படவில்லை. ஆரம்பத்தில் 12-ம் தேதி படம் வெளியாகும் என்று கூறினர். பின்னர் 14-ம் தேதி என மாற்றினர். இப்போது 11-ம் தேதி என அறிவித்ததும் எப்படி காட்சிகளை பிரித்து கொடுப்பது எந்தெந்த திரையரங்குகளில் படத்தை வெளியிடுவது என திரையரங்கு உரிமையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இன்னும் திரையரங்குகள் முறையாக ஒதுக்கப்படவில்லை; அது தொடர்பான பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்று வருகிறது.

இரண்டு படங்களையும் சமமாக வெளியிடும் முனைப்பில் படக்குழுவினர் உள்ளனர். ஆனால், திரையரங்கைச் சேர்ந்தவர்கள் இந்தப் படம் வேண்டும், அந்தப் படம் வேண்டும் என குழப்பிக் கொண்டிருக்கின்றனர். அதனால் நாளை (ஞாயிறு) மதியம் வரை யாரும் முன்பதிவை தொடங்க வேண்டாம் என திட்டமிட்டு, திரையரங்குகள் முறையாக ஒதுக்கப்பட்ட பின்னர் முன்பதிவு தொடங்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.

நாளை இரவுக்குள் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுவிடும். திங்கள்கிழமை எந்தப் படத்திற்கு எத்தனை திரைகள் என்பது முழுமையாக ஒதுக்கப்பட்டு, முன்பதிவு தொடங்கிவிடும். மதுரையில் மட்டும் முன்பதிவு தொடங்கியுள்ளது. மற்ற எந்த மாவட்டத்திலும் முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை” என்றார்.

இரண்டு படங்களின் திரைப் பகிர்வு குறித்து கேட்டபோது, “உறுதியாக இரண்டு படங்களுக்கும் சமமான திரைகள் தான் ஒதுக்கப்படும். அதேபோல முதல் வாரம் எந்த மாற்றமும் இருக்காது. படம் நன்றாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் முதல் வாரம் எந்த திரையரங்கில் என்ன படம் ஓடுகிறதோ அதை அப்படியே தொடர வேண்டும் என்ற கன்டிஷனுடன் தான் படமே கொடுக்கிறார்கள்.

திருப்பூர் சுப்ரமணியம்

அதனால் படம் நன்றாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் முதல் வாரம் அதையே ஓட்டியாக வேண்டும். அதனால் மாற்றம் இருக்காது” என்றார்.

நள்ளிரவு காட்சிகள் குறித்து கேட்டதற்கு, “பெரும்பாலும் நகரத்தின் எல்லைப் பகுதிகளிலுள்ள திரையரங்குகளிலேயே நள்ளிரவுக் காட்சிகள் திரையிடப்படும். நகரத்தின் முக்கியமான பகுதிகளில் யாரும் நள்ளிரவுக் காட்சிகள் இருக்க வாய்ப்பில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x