Published : 02 Jan 2023 06:44 PM
Last Updated : 02 Jan 2023 06:44 PM

‘பெண்களின் எழுச்சி’ - வைரலாகும் பெண் மைய திரைப்பட போஸ்டர்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் வெளியான பெண்களை மையப்படுத்திய படங்களின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் ‘கனெக்ட்’ திரைப்படம் வெளியானது. தொடர்ந்து டிசம்பர் 30-ம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடிப்பில் ‘செம்பி’, இயக்குநர் கிங்க்ஸிலீன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘டிரைவர் ஜமுனா’ மற்றும் எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்த ‘ராங்கி’ திரைப்படங்கள் வெளியாகின. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 4 படங்கள் பெண்களை மையப்படுத்திய படங்களாக இருந்தது ஆண்டின் இறுதியில் ஆரோக்கியமான நகர்வாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கின் வாயிலில் நயன்தாராவின் ‘கனெக்ட்’, கோவை சரளாவின் ‘செம்பி’, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’, த்ரிஷாவின் ‘ராங்கி’ பட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை ஷேர் செய்யும் பலரும், ‘தமிழ் சினிமா முன்னேறி வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதை கற்பனைக்கூட செய்திருக்க முடியாது’ என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை சமந்தா அதில் ஒரு பதிவை ஷேர் செய்து, ‘பெண்களின் எழுச்சி’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருவர் ‘ஆமாம்! பெண்கள் எழுவது விழுவதற்காகதான்’ என நெகட்டிவாக கமெண்ட் செய்ய, அவருக்கு நடிகை சமந்தா பதிலடி தந்திருந்தார். அந்த பதிலில், ’விழுந்து மீண்டும் எழுவது, இன்னும் வலிமையாக்கும் என் இனிய நண்பரே’ என சமந்தா தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x