Last Updated : 19 Nov, 2022 02:03 PM

1  

Published : 19 Nov 2022 02:03 PM
Last Updated : 19 Nov 2022 02:03 PM

நான் மிருகமாய் மாற Review: சசிகுமார் மட்டும்தான் மிருகமாய் மாறினாரா?

ரவுடிக் கூட்டத்திடம் இருந்து குடும்பத்தைக் காக்க போராடும் ‘காமன்’ ஒருவனின் தற்காப்பு ஆட்டங்கள்தான் ‘நான் மிருகமாய் மாற’ படம். சவுண்ட் இன்ஜினியரான அண்ணன் பூமிநாதனை (சசிகுமார்) பிக்அப் செய்ய செல்லும் அவரது தம்பி, பாதி வழியில் ரவுடிகளால் பலியாக்கப்படுகிறார். தன் கண் முன்னே தம்பியை இழந்த வருத்தத்தில் செய்வதறியாது திகைக்கும் பூமிநாதன் பொறுமையிழந்து வேட்டைக்குத் தயாராகிறார். அந்த வேட்டையின் முடிவுகள் அவர் குடும்பத்தை குறியாக்க, காமன் மேன் ஒருவர் மிருகமாய் மாற, இறுதியில் பலிகேட்கும் கூலிப்படைக் கூட்டத்திடமிருந்து குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? - இதுதான் ‘நான் மிருகமாய் மாற’.

‘கழுகு’, ‘சவாலே சமாளி’, ‘கழுகு 2’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சத்ய சிவா இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். சாதாரண மனிதன் ஒருவன் தன் குடும்பத்தைக் காக்க எப்படி மிருகமாய் மாறுகிறான் என்ற கதைக்கருவை திரைக்கதையாக்கி இருக்கிறார். படத்தின் மையக் கதாபாத்திரம் அதனளவில் நிற்கவே தடுமாறிகிறது. நாயகன் சசிகுமார் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் பொருந்தப் போராடுகிறார். கோபத்துடன் எதிரியிடம் பேசுகையில் ‘உன்ன துண்டு துண்டா வெட்டிருவேன் டா’ என்ற ரீபிட் வசனத்தைத் தாண்டி ஆக்ரோஷம் காட்டும் முகபாவனைகள், அழுகை, விரக்தி, இயலாமை வெளிப்படுத்தும் இடங்களில் ஏதோ மிஸ்ஸிங்!.

அதிலும் அமைதி டூ ஆக்ரோஷ உருமாற்றக் காட்சிகளில் அடர்த்தியின்மையால் அதீத செயற்கைத்தனம் துருத்தி நிற்கிறது. அதனால் சசிகுமார் பாத்திரம் பார்வையாளர்களுடன் ஒட்டவில்லை. எதிர்மறை கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அவரை வெயிட் ஏற்றிக்காட்ட குரலை மட்டும் மாற்றியிருப்பதும், இறுதிக் காட்சியில் டம்மியாக்கியிருப்பது அதன் எழுத்தில் பலவீனத்தை உணர்த்துகிறது. ஹரிப்ரியா, துளசி, மதுசூதன ராவ் என பெரிய பங்களிப்பை செலுத்தவில்லை. மிகச்சொற்ப கதாபாத்திரங்களைத் தாண்டி மற்றவர்களுக்கு பெரிய அளவில் வேலையில்லை. அது திரைக்கதைக்கு பலமும் கூட.

படத்தின்தொடக்கம் ஒரு கேங்க்ஸ்டர் ட்ராமாவுக்கான மூட்-ஐ ஏற்படுத்தி கொடுக்க அதன் அடுத்தடுத்த காட்சிகள் அதிலிருந்து விலகிச் செல்வது ஏமாற்றம். அதன் மிகப்பெரிய பிரச்சினை, திரையில் காட்சிப்படுத்தப்படும் வன்முறையும், அதற்கான ஆக்ரோஷமும், வலியும் திரையுடன் நீர்த்துப்போகிறதே தவிர, அது முழுமையாக பார்வையாளர்களுக்கு கடத்தப்படாமல் தனித்து நிற்கிறது.

முன்பின் அறிமுகமில்லாத பாத்திரத்தின் கொலையும், அதைத்தொடர்ந்து நடக்கும் எதிர்கொலைகளும், உணர்வு ரீதியாக பார்வையாளர்களிடம் அதற்கான இடத்தை கட்டியெழுப்பத் தவறுகிறது. விக்ராந்த் வருகை ஆறுதலை கொடுத்தாலும், தர்க்கப் பிழைகளாலும், தொடர் கேள்விகளாலும் அது நீட்சிப் பெறவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவம் முறையாக கொடுக்கப்படாமல் சிறப்புத் தோற்றமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிக்கல். அதேபோல எமோஷனல் காட்சிகளுக்கான ஸ்கிரீன்ப்ளே ட்ரீட்மென்டும் எடுபடவில்லை.

இதையெல்லாம் தாண்டி ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பாசிட்டிவாகும் பலம் கூட்டவும் உதவியிருக்கிறது. ஸ்டன்ட் சீக்வன்ஸ்கள் கவனம் பெறுகின்றன. ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவில் ஓரிடத்தில் வரும் சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி, டாப் ஆங்கிள் ஷாட்ஸ்கள், லைட்டிங்கில் ஒளிரும் இரவுக் காட்சிகள் ஈர்க்ககின்றன.

வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதால் நிச்சயம் குழந்தைகள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் கேங்க்ஸ்டர் ட்ராமாவுக்கான அவுட்லைனை எடுத்து, அதை திரைக்கதையாக்கிய விதத்தில், அதீத பலவீனங்கள் நிரம்பியதால் இலக்குக்கான குறி தவறியிருக்கிறது. படம் முடித்த பிறகு சசிகுமார் மட்டும்தான் ‘மிருகமாய் மாறினாரா?’ என்ற கேள்விக்கு பார்வையாளர்களிடம் பதில் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x