Published : 28 Sep 2022 05:36 PM
Last Updated : 28 Sep 2022 05:36 PM

பொன்னியின் செல்வனை ஆங்கிலப் படங்களோடு ஒப்பிடாதீர்: கார்த்தி

''பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆங்கில திரைப்படங்களோடு ஒப்பிட வேண்டாம். நாம் அவர்களுக்கு மேல் இருக்கிறோம். நம் புகழைப் பேசுவோம்'' என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையை ‘பொன்னியின் செல்வன்’ பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், வெளிமாநிலங்களில் படத்தின் ப்ரமோஷன் பணிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய கார்த்தி, ''பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டின் பெருமை. முதல் முறையாக நம் படத்தை இந்தியா முழுவதும் சென்று ப்ரொமோட் செய்து வந்தது மிகுந்த மகிழ்ச்சி.

கேரளாவில் தொடங்கி பெங்களூர், ஹைதராபாத், டெல்லி என சென்ற இடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு. படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறோம். படத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக நிறைய பேர் நாவலை படிக்கத் தொடங்கியுள்ளனர். சோழர்கள் வரலாறு குறித்தும், கல்கி குறித்தும் படித்துள்ளனர். நம் ஊர் பெருமையை தெரிந்துகொள்ள அவர்கள் ஆசைப்படுகிறார்கள். படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவரின் மனநிலையில் இருக்கிறோம்.

மணிரத்னம்தான் முதல் பான் இந்தியா படத்தை எடுத்துக் காட்டியவர். அதனால், வடநாட்டில் இருப்பவர்களுக்கு அவரை நன்கு தெரியும். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆங்கில திரைப்படங்களோடு ஒப்பிட வேண்டாம். நாம் அவர்களுக்கு மேல் இருக்கிறோம். நம் புகழை பேசுவோம்'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x