Published : 22 Jul 2022 09:11 PM
Last Updated : 22 Jul 2022 09:11 PM

‘பாபா’ படத்தின் காத்தாடி காட்சிக்குப் பின்னால்... - ரஜினி பகிர்ந்த பின்புலம்

சென்னை: ஸ்ரீராகவேந்திரா, பாபா படங்கள் தனக்கு மிகவும் மனநிறைவைத் தந்த படங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று யோகதா சத்சங்கசத்தினுடைய தமிழாக்கம் செய்யப்பட்ட நூல் ஒன்றை வெளியிட்டுப் பேசிய ரஜினி, பாபா படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

விழாவில் ரஜினி பேசியது: “ஸ்ரீ ராகவேந்திரா படத்திற்கு பிறகு தான் நிறைய பேருக்கு அவரைப் பற்றித் தெரியும். அதேபோல மகா அவதாரமான பாபாஜியின் சக்தி பற்றியும், அப்படி ஒரு யோகி இருக்கிறார் என்பதும் பலருக்குத் தெரியாது. பாபா படம் வந்த பிறகு தான் நிறைய பேருக்குத் தெரிய வந்தது. பாபா படம் படத்தைப் பார்த்து யோகதா சத்சங்கத்தில் நிறைய பேர் சேர்ந்திருப்பதாக சங்கத்தினர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அந்தப் படத்திற்கு பிறகு நிறைய பேர் காஞ்சிக்கு போயிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பேர் இமையமலையில் உள்ள ராணிகேட் குகைக்கே போயிருக்கிறார்கள் என்பது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அங்கே ஒரு சின்ன குகை உண்டு. இப்போது அங்கே நிறைய பேர் போய் வருவாதாலும், அவர்கள் அந்த குகைக்குள் போய் வருவதாலும், அதனால் யாருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்று அதை மூடிவிட்டார்கள். எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் என்னுடைய ரசிகர்கள் இரண்டு பேர், யோகதா சத்சங்கத்தில் சந்நியாசி ஆகியிருக்கிறார்கள். நான் இப்போதும் ஒரு நடிகனாக இங்கே வந்து நிற்கிறேன்.

பாபா படம் எடுக்கும்போது ஏற்பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் எதற்கு என்று இப்போது எனக்கு புரிகிறது. பரமஹம்சா யோகானந்தா பற்றி நீங்கள் நிறைய பேர் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். நிறைய பேருக்கு அவரைப் பற்றித் தெரியாது. சிறுவயதில் இருந்தே அவருக்கு ஒரு சிறப்பு சக்தி இருந்தது. பாபா படத்தில் ஒரு காத்தாடி கைக்கு வரும் காட்சியை நீங்கள் பார்த்திருபீர்கள். அது அந்த புத்தகத்தில் இருந்து எடுத்ததே.

ஒருநாள் காத்தாடி ஒன்று போய்க்கொண்டிருக்கும் போது யோகானந்தா அவருடைய சகோதரியிடம் அந்த காத்தாடியை என் கைக்கு வரவைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது அவர் பெயர் முகுந்தா. அதற்கு அவரது சகோதரி அது எப்படி முடியும் எனக் கேட்க, யோகானந்தா அந்த காத்தாடியை அப்படியே பார்க்கும்போது காத்தாடி தானாக அவர் கைகளில் வந்து விழுகிறது. அதைப் பார்த்த அவரின் அக்கா, "அது ஏதோ தற்செயலாக நடந்தது. நீ மறுபடியும் இன்னொரு காத்தாடியை வர வைத்துக் காட்டு பார்க்கலாம்" எனக் கூறுகிறார். இரண்டாவது ஒரு காத்தாடியும் அவரின் கையில் வந்து உட்காரும். அதைத் தான் பாபா படத்தில் வைத்திருந்தேன்.

அதே போல அவரை ஒரு நாள் அடிக்கும் போது முகுந்தா சொல்கிறார்கள் உனக்கு ஒரு பரு வரும் பார். அது போகாது என்று சொல்கிறார். அதேமாதிரி அடுத்த நாள் ஒரு பரு வந்து அது பெரிய காயம் ஆகிறது. உடனே அக்கா பயந்து விடுகிறார்கள்.

இந்த மாதிரி சிறுவயதிலேயே அவரிடம் ஒரு சக்தி இருந்தது. அவரது மனது எப்போதும் இமையமலைக்குப் போக வேண்டும். அங்குள்ள குகையில் சென்று சென்று தியானம் செய்ய வேண்டும் என்றுதான் யோசித்துக் கொண்டே இருந்தது. ஒருமுறை யோகானந்தா அவருடைய அண்ணாவிடம் கூட சொல்லாமல் இமயமலை போய் விடுகிறார். அப்போது அவருக்கு பத்து அல்லது பதினைந்து வயது தான் இருக்கும். அதன் பிறகு அவரது அண்ணன் இமையமலை போய் அவரை அழைத்துக் கொண்டு வருகிறார். பரமஹம்ச யோகாந்தா அவர்களுக்கு இமயமலை அங்குள்ள குகைகள் பற்றிய எண்ணம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது” என்று ரஜினிகாந்த் பேசினார்.

கடந்த 1917 ம் ஆண்டு யோகானந்தரால் யோகாதாஸ் சத்சங்தத் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. ஒரு யோகியின் சுயசரிதை என்பது அவருடைய புகழ்பெற்ற நூல். இந்த நூலை பலருக்கும் பரிசளித்திருக்கும் ரஜினிகாந்த், கடந்த 2017ல் யோகானந்த சத்சங்கத்தின் தெய்வீக காதல் என்ற நூலையும் வெளியிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x