Published : 22 Jul 2022 07:00 PM
Last Updated : 22 Jul 2022 07:00 PM

முக்கியப் பிரிவுகளில் தேசிய விருது - ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் சிறப்பு என்ன?

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் சினிமா ஆதிக்கம் செலுத்தியுள்ளதை கவனிக்க முடிகிறது. குறிப்பாக, ‘சூரைரப்போற்று’, ‘மண்டேலா’ படங்களுடன் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ கவனம் ஈர்த்துள்ளது.

சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது, லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு சிறந்த உறுதுணை நடிகர் (பெண்) விருது மற்றும் சிறந்த எடிட்டிங்குக்காக ஸ்ரீகர்பிரசாத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அப்படியென்ன ஸ்பெஷல்? -

இதோ ஒரு மறுபகிர்வு கட்டுரை:

பெண்களை வைத்து உருவாகும் வணிகத் திரைப்படங்களை இரு வகைக்குள் அடக்கிவிடலாம். ஒன்று பெண்ணை ஆணின் கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்துவது அல்லது குணக்கேடு கொண்டவளாகச் சித்தரிப்பது. மற்றொன்று பெண்ணை மையமாக வைத்துப் படமெடுப்பதாகச் சொல்லி, பிறரது முடிவையும் தானே எடுக்கிற தற்குறியாகவும் கெட்ட வார்த்தைகளைப் பேசி அதன்மூலம் ஆணுக்குச் சளைத்தவள் இல்லை என்று உணர்த்துகிறவளாகவும் காட்டுவது.

முக்கியமாக, கதாநாயகனின் சாகசங்களைத் தானும் செய்கிறவளாக வடிவமைத்துக் கொடுமைப்படுத்துவது. என்னதான் காவிய முலாம் பூசி கருத்து ஜிகினாவைச் சுற்றினாலும் உள்ளிருந்து பல் இளிப்பவை பெரும்பாலும் இப்படிப்பட்ட கட்டமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான்.

காரணம், இவையெல்லாம் பெண்கள் குறித்து ஆண்களால் வரையப்படும் சித்திரங்கள். இப்படியான படங்களுக்கு நடுவே சில நேரம் அத்தி பூத்ததுபோல் அற்புதங்கள் நிகழாமல் இல்லை. வஸந்த் எஸ் சாய் 2018-ல் இயக்கி ‘சோனி லிவ்’ தளத்தில் வெளியான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் அப்படியொரு அத்திப்பூ.

பெண்ணுரிமை என்பதே பேராசையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இந்தச் சமூகத்தில் பெண்ணின் தேவையெல்லாம் தன் இருப்புக்கான குறைந்தபட்ச அங்கீகாரமாகச் சுருங்கிவிட்டதைக்கூட உணராமல்தான் நாம் இருக்கிறோம்.

மூன்று கதைகள் மூன்று பெண்கள்: வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்களின் கதைதான் இந்த ஆந்தாலஜி வகைப் படம். எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூவரும் எழுதிய சிறுகதைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் வஸந்த்.

சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி மூவரும் காலத்தால் வேறுபட்டாலும் இரண்டாம்பாலினமாக ஒடுக்கப்படுவதில் ஒரே கோட்டில் நிற்கிறார்கள். காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறை மட்டுமல்ல, பெண்களின் மீதான வன்முறையும் நவீனத்துக்குள் புகுந்துகொள்கிறது. பாதுகாப்பு, உரிமை, பண்பாடு, கலாச்சாரம் என்பது போன்ற சப்பைகட்டுகளால்தான் இந்த வன்முறை ஆண்களாலும் சிலநேரம் பெண்களாலும் அரங்கேற்றப்படுகிறது. அதைத்தான் இந்தப் படம் துலக்கமாக்குகிறது.

நாயகியர் என்பதாலேயே இவர்கள் மூவரும் வானத்தை வில்லாக வளைத்துவிடுகிற சாகசத்தைப் படைக்கவில்லை. தனக்குப் பிடித்த துறையில் சாதித்து வெற்றிக்கொடி நாட்டவில்லை. பெரும்பாலான இந்தியப் பெண்களைப் போலத்தான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறார்கள். அதனால்தான் இந்தப் படம் பெண்களின் மனத்துக்கு நெருக்கமாகிவிடுகிறது; மனசாட்சியுள்ள ஆண்களைச் சற்றே கூசிப்போகச் செய்கிறது.

ஆண்மை, பெண்மை என்று இந்தச் சமூகம் வகுத்துவைத்திருக்கிற கற்பிதங்களை இந்தப் படம் கேள்விக்குட்படுத்துகிறது. எதை ஆண்மை என நாம் கொண்டாடுகிறோமோ அது இவ்வளவு கேவலமானதா என்பதைப் பொட்டில் அடித்ததுபோல் இயல்பாகச் சொல்கிறது. ஆனால், எந்த இடத்திலும் துளிக்கூடச் செயற்கைத்தனம் இல்லை. மெதுவாக நகர்கிற படங்களைக் கலைப்படங்கள் என ஒதுக்கிவிடுவோர் உண்டு. உண்மையில் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை இதைவிட மோசமாகத்தானே நகர்கிறது?

உறுதிகொண்ட சரஸ்வதி: திருமணமாகிக் கைக்குழந்தையுடன் இருக்கிற ‘சரஸ்வதி’ 1980-களைச் சேர்ந்தவள். கணவன் ஒரு வார்த்தை அன்பாகப் பேசிவிட மாட்டானா என ஏங்கித் தவிக்கும் இல்லத்தரசிகளில் ஒருத்தி. வறுமை தாண்டவமாடும் வீட்டில் கணவனின் ஆதிக்கத் திமிரும் பாராமுகமும் சேர்ந்துகொள்கின்றன. சிலநேரம் ஒருவரது இருப்பைவிட இல்லாமை நிம்மதியைத் தரக்கூடும். சரஸ்வதியின் வாழ்க்கையைவிட்டு அவளுடைய கணவன் ‘தொலைந்த’ பிறகு அவள் முகத்தில் சிரிப்பைக் காண முடிகிறது. எப்போதும் வளைந்த முகுதுடன் குனிந்தபடியே இருந்தவள் இப்போது நிமிர்வோடும் நிம்மதியோடும் நடைபோடுகிறாள்.

பொருளாதாரத் தற்சார்பு ஒரு பெண்ணின் ஆளுமையையே மாற்றிவிடும் என்பதற்கு சரஸ்வதியும் சாட்சி. ஜிப் கிழிந்துபோன கையடக்க பர்ஸை வைத்திருந்தவள், வேலைக்குச் சென்றதும் நீளமான பெரிய பர்ஸை வைத்திருக்கிறாள். அதுவரை கணவன் மட்டுமே அமர்ந்த நாற்காலியில் காபிக் கோப்பையுடன் சாவகாசமாக அவள் அமர்கையில் பெண்கள் எதிர்பார்ப்பது இப்படியொரு ஆசுவாசத்தைத்தானே எனத் தோன்றுகிறது.

போராடத் துணியும் தேவகி: கல்வியிலும் வாழ்க்கைப் படிநிலையிலும் மேம்பட்டிருந்தாலும் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் அனைத்தும் கிடைத்து விடுவதில்லை என்பதைத்தான் ‘தேவகி’ உணர்த்துகிறாள். படித்த, வேலைக்குப் போகிற, கணவனைப் பெயர்சொல்லி அழைக்கிற தேவகி, 1990-களின் பின்பகுதியைச் சேர்ந்தவள். படித்திருந்தும் ஏன் வேலைக்குப் போகவில்லை என்கிற கேள்விக்கு, ‘அந்த மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு ஆம்பகளைங்க முன்னாடி சிரிச்சிப் பேசுறதெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்று அந்த வீட்டு மூத்த மருமகள் நக்கலாகச் சொல்கிறாள்.

பெண்ணின் நடத்தையுடன் வேலையை முடிச்சுப்போடும் பிற்போக்குத்தனத்தையும் சம்பாதிக்கும் பெண்ணைத் திமிர்ப்பிடித்தவளாகக் காட்டுவதையும் எவ்வளவோ படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சி ஏற்படுத்தும் தாக்கம் வேறுவிதமானது. ஆண் வேலைக்குச் சென்றால் புருஷலட்சணம், அதையே பெண் செய்தால் ஒழுக்கக் கேடா என்கிற கேள்வியை முன்வைக்கிறது.

அடி, உதை போன்றவற்றை மட்டுமே குடும்ப வன்முறை என்று ஒற்றைத்தன்மையுடன் புரிந்துவைத்திருக்கிறோம். ஒரு பெண்ணின் அந்தரங்கத்துக்கு மதிப்பளிக்காததுகூட வன்முறைதான். தன் அனைத்துச் செயல்களும் கண்காணிக்கப்படுகிற வீட்டில் பணம் கொட்டிக்கிடந்து என்ன பயன்? தான் வேண்டாம் என்று மறுக்கிற ஒன்றைத் தன் கணவனும் அவனுடைய வீட்டினரும் வலுக்கட்டாயமாகச் செய்கிறபோது பெண்ணுக்கு அங்கே என்ன மதிப்பு? தன் டைரியின் பக்கங்களை நிலைத்த பார்வையுடன் விளக்கில் எரிக்கிற தேவகியின் செயல், பண்பாட்டுக்கும் அடிமைத்தனத்துக்குமான ஊடாட்டத்தைக் கச்சிதமாகச் சொல்கிறது. மூச்சுமுட்டுகிற குடும்ப அமைப்பிலிருந்து விட்டு விடுதலையாவது பெண்ணுக்கு எளிதல்ல. சமூகம் அதைக் காட்டிலும் வன்முறை நிறைந்தது. இன்னொரு போராட்டத்துக்குத் தயாராக வேண்டும் என்பது தெரிந்தேதான் அந்தச் சவாலை ஏற்கிறாள் தேவகி.

ஓடிக்கொண்டே இருக்கும் ரஞ்சனி: உலகமயமாக்கலுக்குப் பிறகு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறாள் ‘சிவரஞ்சனி’. தடகள வீராங்கனையான ரஞ்சனி, தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகிறாள். பெண்ணின் பெருமை இதிலா இருக்கிறது? வீட்டில் பார்க்கிறவனை மணந்துகொண்டு, பெற்றோரின் சுமையைக் குறைப்பதில்தானே இருக்கிறது? வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பாவம் அவர்களும் எவ்வளவு காலத்துக்கு அல்லாட முடியும்? சமூகத்தின் இந்தப் பிற்போக்குத்தனத்துக்கு ரஞ்சனியும் தப்பவில்லை.

மறுவார்த்தை பேசாமல் பெற்றோரின் இழுப்புக்கெல்லாம் இசைகிறாள். குழந்தைப்பேறைத் திட்டமிடுவது அல்லது தள்ளிப்போடுவது அவர்கள் சாதியில் கிடையாதாம். அதனால், நிறைமாத வயிற்றுடன் அடுத்த ஆண்டுப் படிப்பைத் தொடர்கிறாள். விளையாட்டு மைதானத்தில் ஓடிய கால்களுக்குக் கணவன், குழந்தை, புகுந்த வீட்டினர் என்று வீட்டுக்குள் ஓடவேண்டிய பெரும் பாக்கியம் கிடைத்துவிட்டது.

வீட்டுக்குள் ஓடுவதோடு, மகளின் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு சாலையிலும் ஓட வேண்டியிருக்கிறது. அப்போதுதான் குறைந்தபட்ச கைத்தட்டலாவது அவளுக்குக் கிடைக்கும். கணவரா? பாவம், அவர் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால்தானே ரஞ்சனியால் இப்படி சொகுசாக வாழ முடிகிறது? மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுத்திருக்கிறோம் என்று அவளுடைய பெற்றோர் இறுமாப்புடன் இருந்திருக்கக்கூடும். ஆனால், தான் வென்ற பரிசுக் கோப்பை, கல்லூரியின் ஸ்டோர் ரூமில்கூட இல்லாத வேதனையில், அந்தத் தூசிப்படலத்திலேயே அமர்ந்திருக்கிறாள் ரஞ்சனி. குடும்பக் கட்டமைப்பின் நிர்பந்தத்தால் தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் இழந்துவிடுகிற சிவரஞ்சனிகள் நம் வீட்டிலும் இருக்கலாம்.

குழந்தை வளர்ப்பு என்பது எப்போதும் பெண்களின் கால்களையே இறுக்கிப் பிடிக்கிற சங்கிலியாகத்தான் இருக்கிறது. குழந்தை உருவாகக் காரணமாக இருப்பதுடன் தன் கடமை முடிந்துவிட்டதாகத்தான் பெரும்பாலான ஆண்கள் நம்புகிறார்கள். அழுகிற குழந்தையை, ‘அழாதம்மா, அப்பா தூங்குறாரு இல்ல’ என்று சரஸ்வதி சமாதானப்படுத்துவதும், ‘இவளை நான் பார்த்துக்கறேன், நீ போய் அவனைக் கவனி’ என்று சொல்லும் மாமியார், ஒரு வாய் இட்லியைக்கூட பேத்திக்கு ஊட்டிவிடாத நிலையில், கணவனின் தேவைகளைக் கவனித்துவிட்டு ரஞ்சனியே வந்து மகளுக்கு ஊட்டிவிடுவதும் இதைத்தான் உணர்த்துகின்றன.

சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி மூவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. எந்த நிலையிலும் அவர்களிடம் கழிவிரக்கம் இல்லை. தோற்றுப்போய்விட்டோமே என்கிற வெறுமை இல்லை. உங்கள் அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் துணிந்துதான் தலையைக் கொடுக்கிறோம் என்கிற உறுதியும் துணிச்சலும் இருக்கின்றன. நாயகனையே சுற்றிச் சுற்றி வருகிறவர்களையும் பனிமலையிலும் கையில்லாத ஆடையுடன் நடனமாடுகிறவர்களையும் பார்த்துச் சலித்துப்போன கண்களுக்கு, இயக்குநர் வஸந்த் சாயின் இந்தப் படம் ஆறுதல் அளிக்கிறது. நம்மை நாமே பரிசீலித்துக்கொள்ளச் சொல்கிறது.

தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x