Published : 18 Jul 2022 05:38 PM
Last Updated : 18 Jul 2022 05:38 PM

“முழுமையாக உடைந்துவிட்டேன்... என்னை மன்னித்து விடுங்கள்” - பிரகிடா விளக்கம்

நடிகை பிரகிடா தான் பேசிய சர்ச்சைக் கருத்துக்கு மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைக்கதை முறையில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் சூழலில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பிரகிடா, ''இரவின் நிழல் படம் ஒரு தனிமனிதன் பற்றிய கதை. அவனது வாழ்க்கையில் வெறும் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும். இப்போ ஒரு குடிசைவாழ் பகுதிக்குச் சென்றோம் என்றால், அந்த மாதிரியான வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். மக்களுக்கே தெரியும், அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று. அதை சினிமாவுக்காக ஏமாற்ற முடியாது'' எனக் கூறியிருந்தார். இவரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் கூறிய வார்த்தைகளுக்கு இதயபூர்வமாக மன்னிப்புக்கேட்டுகொள்கிறேன். இடத்தை பொறுத்து மொழி மாறுபடும் என்றுதான் கூற வந்தேன், ஆனால் அது இப்படி தவறாக மாறிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்'' பதிவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து பிரிகிடாவின் பேச்சுக்கு நடிகர் பார்த்திபனும் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், ''பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் குடிசைப் பகுதி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் குடிசைப் பகுதி மக்களை ஹீரோ ஆக்குவதே'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரகிடா, ''நான் அப்படி சொன்னதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தொடக்கம். முழுமையாக இரண்டு நாள் கூட என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. நான் அந்தப் பேட்டியில் ஒவ்வொரு ஊரிலும் எப்படி பேசுவார்கள் என்பதைத் தான் சொல்ல முயன்றேன். ஆனால், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதை எண்ணி நான் மிகவும் மனம் வருந்துகிறேன். முழுமையாக உடைந்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள். நன்றி'' என தெரிவித்திருந்தார்.

— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 17, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x