Published : 19 Jun 2022 05:05 AM
Last Updated : 19 Jun 2022 05:05 AM

கடந்த 10 ஆண்டில் பிரச்சினை இல்லாமல் வெளியான படம் ‘விக்ரம்’ - திரைப்பட வெற்றி விழாவில் கமல்ஹாசன் கருத்து

சென்னையில் நடந்த ‘விக்ரம்’ திரைப்பட வெற்றி விழாவில் (இடமிருந்து) மகேந்திரன், அன்புச்செழியன், லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன், அனிருத், உதயநிதி ஸ்டாலின், செண்பகமூர்த்தி.

சென்னை: கடந்த 10 ஆண்டு காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸான எனது படம் ‘விக்ரம்’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘விக்ரம்’. இதில் பகத் பாசில், விஜய் சேதுபதி, செம்பன் வினோத், நரேன், காயத்ரி உள்ளிட்டோருடன் கவுரவ வேடத்தில் சூர்யாவும் நடித்துள்ளார்.

வெற்றிகரமாக ஓடிவரும் இப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் கடந்த 17-ம் தேதி நடந்தது. படத்தை தமிழகத்தில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர்கள் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், கேயார், செண்பகமூர்த்தி, மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கமல் பேசியதாவது:

ஒரு படத்தின் வெற்றிக்கு ஒருவர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. கூட்டு முயற்சிக்கு கிடைக்கும் பலன் இது.

வேலை கிடைத்தால் போதும் என்று சினிமாவுக்கு வந்தவன் நான். எனக்கு நடிப்பு ஆசை இல்லை. அதை கிளப்பிவிட்டவர் கே.பாலசந்தர். ‘‘ஆட்டோவுக்கு அலையுற. உனக்கு காரே வாங்கித் தரேன். நீ நடி. அப்புறம் பாரு’’ என்று அவர்தான் என்னை நடிக்க வைத்தார். அவரது படங்களில் மட்டும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் செய்தால் போதும் என இருந்தவனுக்கு பல வெற்றிகளை தமிழக மக்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டு காலத்தில் எந்தபிரச்சினையும் இல்லாமல் ரிலீஸான எனது படம் ‘விக்ரம்’. அதற்கு முக்கிய காரணம் மகேந்திரனும், உதயநிதி ஸ்டாலினும். இவர்கள் கூட இருப்பது தைரியமாக இருக்கிறது. இல்லாவிட்டால், இடையில் இருப்பவர்கள் எங்கு காலை இடறி விடுவார்களோ என்று பயந்தே நடக்க வேண்டி இருக்கும்.

நான் வாட்ச், கார் பரிசாக கொடுத்தேன் என்கிறார்கள். அதையெல்லாம்விட, உழைக்கும் மக்கள், தங்கள் கூலியில் இருந்து ஒரு பங்கை இப்படத்துக்கு கொடுத்துள்ளனர். அதுதான் பெரிய பரிசு. என் திறமைக்கு அதிகமாக தமிழக மக்கள் தூக்கிப் பிடித்திருக்கின்றனர். என்னைவிட திறமையான பலர் வாய்ப்பு கிடைக்காமல், காணாமல் போயிருக்கின்றனர் என்பது எனக்கு தெரியும். நல்ல படத்தை ரசிகர்கள் விட்டுவிட மாட்டார்கள். ஆனால், அது நல்ல படமாக இருக்க வேண்டும்.

ரெட் ஜெயன்ட் மூவீஸுக்கு ஒருவேண்டுகோள். உதயநிதி படத்தில் நடித்தாலும், அரசியலில் இருந்தாலும் பட விநியோகத்தை விட்டுவிடாதீர்கள். இத்தனை நேர்மையோடு விநியோகத்தை மேற்கொள்வது சினிமா துறைக்கு நிச்சயம் அவசியம். ஆரோக்கியமான திரையுலகை நாம் வளர்ப்போம். இவ்வாறு கமல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x