Last Updated : 25 May, 2022 08:56 AM

 

Published : 25 May 2022 08:56 AM
Last Updated : 25 May 2022 08:56 AM

கேரக்டருக்குள் தன்னை தகவமைத்து அசத்தும் நடிகர்! - கார்த்தி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

பரபரப்பாக திருவிழா நடந்துகொண்டிருக்கும். எல்லாரும் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருப்பார்கள். அந்த களேபரங்களுக்கிடையே ப்ரியாமணியின் கண்களைப்போல, நாமும் படத்தின் நாயகனை தேடிக்கொண்டிருப்போம். முறுக்கு மீசை, மண்டிகிடக்கும் புதரைப்போல தாடிக்கு நடுவே தெரியும் முகம், தேவைக்கு அதிகமாக வளர்ந்த தலைமுடி, பட்டையை பூசிய நெற்றியுடன் ஆடிக்கொண்டே வருவார் கார்த்தி. அதுவரை தங்கள்ளுக்குப் பரிச்சயமில்லாத ஒரு முகத்தையும், கார்த்தி என்ற நாயகனையும் 'பருத்தி வீரன்' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அன்று தான் கண்டனர். முதல் படம் என்ற சொல்வதற்கு எந்த இடமும் கொடுக்காமல், நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார் கார்த்தி.

படத்துடன், கார்த்தியையும் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது. சில பேருக்குத்தான் அப்படியான ஒரு ஓப்பனிங் கிடைக்கும். 'பாராசக்தி' படத்தில் சிவாஜிக்கு கிடைத்து போல. சொல்லப்போனால், சூர்யாவுக்கு கூட அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் சூர்யா தன் அடையாளத்தை நிறுவ எடுத்துக்கொண்ட காலத்தைக்காட்டிலும் கார்த்திக்கு குறைவான நேரமே தேவைப்பட்டது.

நியூயார்க்கில் கம்யூட்டர் முன் அமர்ந்து கிராஃபிக் டிசைனிங் செய்துகொண்டிருந்தவர், 'ஏ... முத்தழகு...' என இழுத்து பேசும் வட்டார மொழியை கைகூடி வருவதற்குப் பின் ஒரு மாபெரும் உழைப்புத் தேவை. அந்த உழைப்பை முதலீடாக்கியதால் தான் முதல் படத்திலேயே வந்து சேர்ந்தது, ஃபிலிம்பேர் விருதும், தமிழக அரசின் விருதும். ஆனால், கார்த்தி பருத்திவீரனுக்கு முன்னதாகவே, சூர்யா நடிப்பில் வெளியான 'ஆயுத எழுத்து' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கதை தேர்வு:

பருத்தி வீரனை தொடர்ந்து சென்றால், 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற வரலாற்று புனைவுக் கதையை தேர்ந்தெடுத்திருப்பார். இந்த இரண்டு படங்களுமே நடிப்புக்கு தீனி போடும் படங்கள். இரண்டுமே 'டார்க் எமோஷன்' வகையறாவைச் சேர்ந்தது. ஆயிரத்தில் ஒருவனில் தன் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஜாலியான கதாபாத்திரமாக தொடக்கி சீரியஸாக மாறும் காட்சிகளின் உருமாற்றத்தை சரியாக கையாண்டிருப்பார்.

அடுத்து 'பையா' மூலம் கமர்ஷியல் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த கார்த்தி, அதுவரை பார்த்த ரசிகர்களுக்கு தன்னுடைய வணிக சினிமாவுக்கான முகத்தையும் காட்டியிருப்பார். இரண்டு வகையான சினிமாக்களில் ஒருவரால் கச்சிதமாக பொருந்த முடிகிறது. அதுவும் நடிக்க வந்த சில வருடங்களிலே இது சாத்தியமாகிறது என்றால் இந்த மாற்றங்கள் தான் கார்த்தி என்ற நடிகனை கவனப்படுத்தியது. ஆனால், 'பையா' படத்திற்கு பிறகு கார்த்தியால் வணிக சினிமாவிலிருந்து வெளியே வர முடியவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

அதன்பிறகு வெளியான 'சிறுத்தை'யில் டபுள் ஆக்டிங்கை தேர்வு செய்திருப்பார். அதற்கு அடுத்தபடியாக கமர்ஷியல் படங்களுக்குள் அடர்த்தியான கதையை தேர்வு செய்தது பா.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' படத்தில்தான். 'சிறுத்தை'க்கும் 'மெட்ராஸ்' படத்துக்கும் இடைப்பட்ட கேரியரை அவரும், நாமும் கூட மறப்பது நல்லது. அதற்குப் பிறகான அவரது கதைத் தேர்வு, 'கொம்பன்' 'தோழா', 'காஷ்மோரா', 'காற்று வெளியிடை' என ஜிக்ஜாக் பாணியில் அமைந்தது. திரைத்துறைக்குள் நுழைந்த 6 வருடங்களுக்குள்ளாக கிட்டத்தட்ட அனைத்து ஜானர் கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான கதைகளத்தையும் தொட்டுவிட்டார். 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி' பட தேர்வு அவருக்கான தனி அடையாளத்தை பெற்றுக்கொடுத்தன.

இடையில் அவர், 'கடைக்குட்டி சிங்கம்', 'கொம்பன்', 'தம்பி', 'தோழா', என பேமிலி ஆடியன்ஸ் படங்களை நோக்கி நகர ஆரம்பித்தார். இந்தப் படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் அவரை ஜனரஞ்சக நாயகனாக கொண்டு சேர்க்க உதவியது. இதனால் அவரது படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் எளிதில் முன்வந்தனர். 'மேக்சிமம் கேரன்டி' ஹீரோக்கள் பட்டியலில் கார்த்தி தன்னை இணைத்துக்கொண்டார்.

எல்லா கதாபாத்திரத்துக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளும் தகவமைக்கும் திறன் அவரது தனிச் சிறப்பு. காவல்துறை அதிகாரி, திருடர், கிராமத்து, நடுத்தர, நகரத்து இளைஞர், உருகிக் கரையும் காதலன், நகைக்க வைக்கும் காமெடி கதாபாத்திரம், ஹாரர், ஆக்‌ஷன் ஜானர்களில் களமாடும் நாயகனாக எந்த மீட்டரிலும் கார்த்தியை பொருத்திப் பார்க்க முடியும் என்பதுதான் அவருக்கு ப்ளஸ்.

ஒரே இயக்குநரிடம் இரண்டு படங்களில் பணியாற்றாத தனது கொள்கையை ‘விருமன்’ ‘பொன்னியின் செல்வன்’ படங்களின் மூலம் தளர்த்திருக்கிறார் கார்த்தி. அதேபோல 'சர்தார்' மூன்றாவது முறையாக போலீஸ் கதாபாத்திரத்தை தேர்வு செய்திருக்கிறார். வணிக சினிமாக்களில் கவனம் செலுத்தி வரும் கார்த்தி, வித்தியாசமான, நடிப்புக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பது தான் அவரது ரசிகர்களின் விருப்பம்.

| மே 25 - இன்று நடிகர் கார்த்தி பிறந்தநாள் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x