Last Updated : 10 May, 2022 10:17 PM

 

Published : 10 May 2022 10:17 PM
Last Updated : 10 May 2022 10:17 PM

“சவால்களைத் தாண்டி எல்லாமே பாடம்தான்” - ‘சாணிக் காயிதம்’ ஒளிப்பதிவாளர் யாமினி நேர்காணல்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது 'சாணிக் காயிதம்' திரைப்படம். படத்திற்கு ஒளிப்பதிவாளர் யாமினியின் ப்ரேம்கள் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. சமீபத்தில் ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்துள்ள அவர் 'இந்து தமிழ் திசை' டிஜிட்டலுக்கு அளித்த நேர்காணல்...

கமர்ஷியல் ஃபுட் போட்டோ கிராஃபர் டூ சினிமோடோ கிராஃபர் இந்த பயணத்த பத்தி சொல்லுங்க?

நான் படித்தது விஷூவல் கம்யூனிகேஷன். படித்து முடித்துவிட்டு கிராஃபிக் டிசைனராக 2 வருடங்கள் பணியாற்றினேன். அதேநேரத்தில், பகுதி நேரமாக கமர்ஷியல் ஃபுட் போட்டோகிராஃபியும் செய்து வந்தேன். அப்போது லைட்டிங் குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதனால் போட்ரைட் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். இது தொடர்பாக நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், ஒளிப்பதிவாள் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இணைந்தேன். இந்த பயணம் முழுவதும் எனக்கு நிறைய கற்றுகொள்வதற்கான வாய்ப்புகள் தான் இருந்தது. மனித முகங்கள், லைட்டிங் இது இரண்டும் தான் எனக்கு ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதற்கான ஆர்வத்தை தூண்டியது.

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன?

பி.சி.ஸ்ரீராமிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொண்டோம். அவரிடம் பணியாற்றும்போது, அவர் செய்யும் வேலைகளைப் பார்த்தாலே, போதுமானது, அதிலிருந்தே நிறைய கற்றுகொள்வதற்கான வாய்ப்பிருக்கும். ஒழுக்கம் மற்றும் எப்படி வேகமாக ஒரு விஷயத்தை செய்து முடிப்பது என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

உங்களது முதல் படமான சில்லுக்கருப்பட்டி ஒரு பேமிலி ட்ராமா திரைப்படம். இரண்டாவது படம் சாணிக் காயிதம் ஆக்‌ஷன் ரிவேன்ஜ். இரண்டும் வெவ்வேறு கதைக்களம், இந்த அனுபவம் எப்படி இருந்தது?

ஒரு தொழில்நுட்பவியலாளராக எங்களுக்கு கதைகள் பல்வேறு பாணியில் வர வாய்ப்புள்ளது. நாம் அதற்கு ஏற்றார் போல, சம்பந்தப்பட்ட கதைகளை உள்வாங்கிகொண்டு, நம்முடைய தொழில்நுட்ப திறமையை வைத்து அதை எப்படி காட்சிப்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். படத்தின் கதைகள் எந்த வகையில் இருந்தாலும், அதற்கேற்றார் போல நாம் நம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தொழில்நுட்ப ரீதியாக சாணிக் காயிதம் படத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

சவால்கள் என்பதைத்தாண்டி, படத்தில் எனக்கு கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. அதனால் அது எனக்கு சவாலாக தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் கடினமான சூழல்கள் வரும்போது, அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சொல்லப்போனால், மொத்தப் படமுமே எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தது. பிலிம் ஸ்கூல் சென்று கற்றுக்கொள்வதைத் தாண்டி, செயல்முறையில் நான் பணியாற்றும் ஒவ்வொரு படத்திலும் கற்றுக்கொண்டேயிருக்கிறேன்.

படத்தில் லைட்டிங்கை பயன்படுத்திய விதம் குறித்து சொல்லுங்க?

லைட்டிங் பொறுத்தவரை மிகவும் சிம்பிளாக பயன்படுத்திக்கொண்டேன். சூரிய ஒளியை மறுஆக்கம் செய்வது போல. சூரியனிலிருந்து வரும் ஒளியைக்கொண்டு, நம்மிடம் இருக்கும் ஒளியை அப்படியே ரீகிரியேட் செய்தேன். அதேபோல, கதாபாத்திரத்தை போல்டாக காட்ட வேண்டும் என்பதால் ஹைலைட் கான்ட்ராஸ்ட்டை பயன்படுத்தினேன்.

ப்ளாக் அண்ட் ஒயிட் ப்ரேம்ஸ் குறித்து..

பொதுவாக ப்ளாக் அண்ட் ஒயிட் என்பதே நம் கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தும் தன்மை வாய்ந்த ப்ரேம். ப்ளாக் அண்ட் ஒயிட்டை பொறுத்தவரை அது நேர்மையான, எதார்த்தமான காட்சிகளையும், புகைப்படங்களையும் கடத்தும் சக்தி வாய்ந்தது. அதேபோல, படத்தில் 'த்ரீ கலர் தியரி' பயன்படுத்தியிருக்கிறேன். அதற்கு காரணம் கவனச்சிதறலை தடுக்க வேண்டும் என்பது தான். இவையெல்லாம் ஒரு காட்சியை எதார்த்தமாகவும், உண்மையாகவும், அந்த காட்சிக்கான உணர்வை பார்வையாளருக்கு கடத்த உதவும். இயக்குநரும், நானும் இணைந்து தான் ப்ரேம்களை முடிவு செய்தோம்.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் ட்ரைபேட் உதவியில்லாமல், கேமராவை சுமந்துகொண்டே படமாக்கவேண்டிய சூழல் இருப்பதை காண முடிந்தது. இந்த அனுபவம் எப்படி இருந்தது?

ஆமாம். அது கதைக்கு மிகவும் தேவையானதாக இருந்ததால் அப்படி எடுத்தோம். முதல் நாள் மட்டும் அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. மற்றபடி அது ஒரு பெரிய சிரமமாக தெரியவில்லை. பழகிவிட்டது. என்னால் அதை எளிதாக கையாள முடிந்தது.

கீர்த்தி சுரேஷ் வாகனத்தை ஓட்டி வரும் காட்சியில், அந்த இடம் முழுவதும் குறுகலாக காணப்படும். அந்த காட்சியை படமாக்கிய விதம் குறித்து..

அந்த குறுகலான பகுதி எங்களுக்கு பயனுள்ளதாகவே இருந்தது. காரணம், அப்போது தான் அந்த வேனின் எல்லா பகுதிகளையும் காட்ட முடியும். அது கதைக்கு தேவையாக இருந்தது; மாறாக சிரமமாக இல்லை.

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் ஆகியோருடன் பணியாற்றியது எப்படி இருந்தது?

பொறுப்புணர்வு அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். நாம் எந்த தவறையும் செய்துவிடக்கூடாது என்ற பயமும் இருந்தது. அவர்கள் இருவரும் கடினமான உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். நானும், முழுமையான கடின உழைப்பை கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.

முதல் காட்சி கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்கு மேலாக சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும். அது குறித்து..?

நிறைய திட்டமிடல் தேவை. நடிகர்களின் நடிப்பு, கேமரா ஃபோகஸோ மிஸ் ஆகிவிட்டால் மீண்டும் தொடக்கத்திலிருந்து எடுக்க வேண்டியிருக்கும். அதற்காக அதிகமாக ரிகர்சல் செய்யவேண்டியிருந்தது.

வன்முறையை அழகியலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்ற பார்வையும், அது மக்களிடம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

எந்த ஷாட்டும் அப்படி கோரமாக காட்டப்படவில்லை. வன்முறையை காட்சிப்படுத்தியே ஆக வேண்டும் என்றெல்லாம் காட்டவில்லை. கதைக்கு தேவைப்படும் இடத்தில் தான் காட்சிப்படுத்தியிருக்கிறோம். கதைக்கு அது நியாயம் சேர்த்திருக்கிறது.

திரைத்துறையில் பெண் ஒளிப்பதிவாளர்களின் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?

நிறைய பெண் ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். சரண்யா, அபூர்வா, ஸ்ரையந்தி என பலரும் சென்னையில் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால், இதை ஒரு பெரும் சாதனையாக கருத வேண்டிய தேவையில்லை.

உங்களின் அடுத்த படங்கள் குறித்து சொல்லுங்க..?

தெலுங்கில் ஒரு படத்தில் பணியாற்ற இருக்கிறேன். அது தற்போது தொடங்கியிருக்கிறது. அது குறித்த தகவல்களை இப்போது வெளியிட முடியாது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x