Published : 25 Apr 2022 03:50 PM
Last Updated : 25 Apr 2022 03:50 PM

"இது பெண்களின் காலம்" - பர்சனல் அனுபவம் பகிர்ந்த நாசர்

சென்னை : ''இது பெண்களின் காலமாக மாறிவிட்டது. எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். என் மனைவிதான் எனக்கு முதுகெலும்பு'' என நடிகர் நாசர் பேசியுள்ளார்.

லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நாசர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''லயோலா கல்லூரிக்கும் எனக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் எல்லோருக்கும் லயோலா கல்லூரியில் சேர வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால், அதற்கு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமே! ஆகையால், அந்த கொடுப்பினை எனக்கில்லை.மேலும், விஸ்காம் என்கிற பட்டபடிப்பு தமிழ்நாட்டில் மூளை முடுக்கிலும் இன்று இருக்கிறது. ஆனால், அது முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது லயோலா கல்லூரியில்தான். உங்களிடம் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்'' என்றார். உடனே மாணவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

37 வருடமாக திரைத்துறையில் உள்ளீர்கள் அது எப்படி சாத்தியமாக உள்ளது?

"எந்தத் துறையாக இருந்தாலும் சரி, நாம் நினைத்தால் தான் ஓய்வு என்பது. இங்கிருக்கும் ஆசிரியர்களும் கிட்டதட்ட 40 ஆண்டுகள் கழித்து தான் ஓய்வு பெறுவார்கள். நான் இந்த துறையை ஒரு வேலையாக நினைத்து தான் வந்தேன். இன்றும் நடிப்பை ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறேன். மற்ற வேலைகளை விட எனக்கு சம்பளம் அதிகம் என்பதால் எனது முழு முயற்சியையும் வெளிப்படுத்துகிறேன்.

நிறைய குழந்தைகள் இந்த சினிமா துறைக்கு வருவதற்கு ஆசைப்படுகிறார்கள். இன்றைய காலத்தில் சினிமா துறை என்பது மற்ற துறைகளை விட மிகவும் ஈர்ப்பு மிக்க ஒரு துறையாக உள்ளது. நான் சினிமாவிற்கு வரும் பொழுது 1984-ல் சினிமாவில் ஆவணப்படம், குறும்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கு கிடையவே கிடையாது. ஏனென்றால், அது ஒரு பெரிய செயல் முறை. பொருட்செலவு மிகவும் கடினம். ஒரு புகைப்படம் எடுத்தால் கூட அதை நெகடிவில் இருந்து ப்ரின்ட் எடுத்து மாற்ற வேண்டும் என்பது போல் பல சவால்கள் இருந்தன. ஆனால், இப்போது அப்படி இல்லை. எந்த ஒரு குறைந்த விலை கேமராவில் கூட ஒரு படத்தை எடுக்க முடியும்.

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளது, ஒன்று நீங்கள் இதை வேலையாக நினைத்து சினிமாத் துறையில் பயணிக்கலாம். அல்லது, இதை ஆசையாக நினைத்தால் நீங்கள் இப்போது படிக்கும் படிப்பிற்கு ஏற்றவாறு ஒரு பணியில் அமர்ந்துவிட்டு நீங்கள் உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். குறும்படம் எடுக்கலாம், ஆவணப்படம் எடுக்கலாம், அப்போதும் சாதிக்கலாம். இல்லையெனில், நீங்கள் எல்லாத்தையும் விட்டு விட்டு சினிமாவிற்கு வந்தீர்களேயானால் நான் பரந்த கைகளுடனும் பெரிய இதயத்துடனும் வரவேற்கிறேன். ஏனென்றால், இந்த துறைக்கு நிறைய திறமையாளர்கள் தேவை, புதிய யோசனைகள் தேவை.

சினிமா துறைக்கு வர ஆசைப்பட்டால் அதற்குண்டான படிப்பை படித்து விட்டு வாருங்கள். படித்தவர்கள் சினிமாவிற்கு வருவது வேறு. எனக்கு தலைவலி வந்துவிட்டது என்றால் நான் ஒரு வக்கீலிடம் சென்று மாத்திரை கொடுங்கள் என்று கேட்க முடியாது. மருத்துவரிடம் தான் சென்று பார்க்க வேண்டும். அதனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைக்கு ஏற்றவாறு படியுங்கள்."

தங்களின் பின்புலமாக உங்கள் மனைவி இருப்பதை பற்றி...

"என் மனைவிதான் என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார். அவர் சைக்காலஜி படித்தவர். இருப்பினும், எல்லாத்தையும் எனக்காக விட்டுவிட்டு என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார். என் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். நான் சம்பாதித்ததை கொண்டு வருவதை விட, சம்பாதித்தாலும் அந்த பணத்தை தயாரிப்பதில் போட்டுவிட்டு பிரச்சினையைத் தான் கொண்டு வருவேன். அது அனைத்தையும் என் மனைவி கமிலா தான் தீர்த்து வைப்பார்.

ஆண்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால், ஒரு பொறுப்பை ஒரு பெண்ணிடம் கொடுத்தால் ஆணை விட மிக சிறப்பாக செய்வார்கள் என்று நான் கண்கூடாக பார்த்த அனுபவம். இங்கு இவ்வளவு பெண் குழந்தைகளை பார்க்கும்போது நம் நாடு முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எவ்வித கவனச்சிதறலும் இருக்காது. அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை முடிப்பதற்காக தங்களின் உயிரையும் கொடுப்பார்கள்.

நான் ஏன் பெண்களை பற்றி பேசுகிறேன் என்றால், நான் சென்ற வாரம் தான் சண்டிகர் மாநிலத்திலிருந்து சென்னை வந்தேன். நான் வந்த விமானத்தை ஓட்டியது ஒரு பெண். அதே போல், வடபழனியை தாண்டும் வேளையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி "என்னா சார் நல்லாருக்கீங்களா?" என்று கேட்டார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது பெண்களின் காலமாக மாறிவிட்டது. ஆண்கள் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நடிகர் ஜீவாவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு அப்பாவும் மகனும் ஒரு மேடையில் அமர்ந்திருப்பது போன்று தான் இது. ஜீவாவின் முதல் படத்தின் படப்பிடிப்பின் என்னை பார்க்க வந்தார். அவரை நான் வாழ்த்துவேன் என்று எதிர்பார்த்தார். ஆனால், நான் "தயாரிப்பாளரின் மகன் என்றால் நடிக்க வந்துவிடுவீர்களா?" என்று கேட்டேன் அவர் அதிர்ச்சி அடைந்து என்னைப் பார்த்தார்.

அதன் பின் நான் அவருக்கு சில அறிவுறுத்தலை சொன்னேன். சில புத்தகங்களை படிக்க சொன்னேன் அவர் அது எதையும் மதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் அது அனைத்தையும் செய்தார். லயோலா கல்லூரி மாணவர்கள் கேள்வி படிப்பதை போல் அவர் படித்தார். இன்று அவர் ஒரு பெரிய நடிகனாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x