Published : 25 Apr 2022 01:31 PM
Last Updated : 25 Apr 2022 01:31 PM

கோலிவுட் அப்டேட்ஸ் | ஜூனில் நயன்தாரா திருமணம்?

‘நானும் ரவுடிதான்’ படத்தில் பணியாற்றியபோது, நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. 6 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களுக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவரும் சேர்ந்து கோயில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில்,அஜித்தின் 62-வது படத்தை இயக்க உள்ளார் விக்னேஷ் சிவன். அந்த பட வேலைகளை தொடங்குவதற்கு முன்பு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.

விஷால் ஜோடியாக ரிது வர்மா

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘பாஹீரா’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ என்றபடத்தை இயக்க உள்ளார். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்இசையமைக்கிறார்.

1970-களில் நடப்பதுபோல இந்தபடத்தில் ஒரு பகுதி அமைந்துள்ளதால், அப்போதிருந்த சென்னையை அப்படியே கண்முன் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்படுகிறது. மே முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில், விஷால் ஜோடியாக நடிக்க சில நடிகைகளிடம் பேசிவந்தனர். இப்போது ரிது வர்மா நடிக்க இருப்பதாக தெரிகிறது. இவர், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நாயகியாக நடித்தவர்.

நல்ல படங்களுக்கு வரவேற்பு

தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கும் படம் ‘தி வாரியர்’. இதன்மூலம் தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி, தமிழில் அறிமுகமாகிறார். கீர்த்தி ஷெட்டி நாயகி. ஆதி வில்லனாக நடிக்கிறார். தேவி பிரசாத் இசையமைக்கிறார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். பிருந்தாசாரதி வசனம், விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர். இதில் நடிகர் சிம்பு பாடியுள்ள ‘புல்லட்’ என்ற பாடலை உதயநிதிஸ்டாலின் எம்எல்ஏ வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘‘ராம் நடித்த தெலுங்கு படங்களை பார்த்தது இல்லை. ‘புஷ்பா’ படத்தின் விளைவால், இப்போதுதான் தெலுங்கு படங்கள் பார்க்கிறேன். நல்ல படம் எந்த மொழியானாலும் தமிழ் மக்கள் ஓடவைக்கின்றனர்’’ என்றார்.

மீண்டும் நடிக்க திவ்யா உன்னி ஆசை

தமிழ், மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. அமெரிக்காவில் வசிக்கிறார். நடனக் கலைஞருமான இவர் அங்கு நடனம் கற்றுக்கொடுக்கிறார். அவர் கூறும்போது, ‘‘சில பொறுப்புகள் காரணமாக, நடிப்பை கைவிட வேண்டியதாகிவிட்டது. மோகன்லாலுடன் நான் 1999-ல் நடித்த ‘உஸ்தாத்’ படத்தின் கேரக்டரை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுகின்றனர். அதுபோன்ற கேரக்டர் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன்’’ என்றார்.

ஓடிடியில் மோகன்லால் படம்

‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம்-2’ படங்களுக்கு பிறகு, இயக்குநர் ஜீத்து ஜோசப்பும், மோகன்லாலும் இணைந்துள்ள படம் ‘ட்வெல்த் மேன்’ (12th Man). த்ரில்லர் படைப்பான இதை அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். மோகன்லாலுடன் உன்னி முகுந்தன், ஷிவதா, அனுஸ்ரீ, அனு சித்தாரா, சைஜூ குருப், பிரியங்கா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 24 மணிநேரத்துக்குள் நடக்கும் கதையைக் கொண்ட இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

நடுக்கடலில் ‘அகிலன்’

ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த ‘பூலோகம்’ படத்தை அடுத்து, என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் படம் ‘அகிலன்’. இதிலும் ஜெயம் ரவிதான் நாயகன். தனது 28-வது படமான இதில் அவர் மரைன் இன்ஜினீயராக நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், தான்யா ரவிச்சந்திரன் நாயகிகள். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விவேக் ஒளிப்பதிவு. சாம் சி.எஸ் இசை. இப்படத்துக்காக நடுக்கடலில் செட் அமைத்து படமாக்கியுள்ளனர். ‘கோவளம் அருகே நடுக்கடலில், 10 மிதவை பிளாட்ஃபார்ம்கள் உருவாக்கி செட் அமைத்து ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கியுள்ளோம். கிராபிக்ஸுடன் பார்க்கும்போது மிரட்டலாக இருக்கும்’ என்கிறது படக்குழு.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x