Published : 02 Feb 2022 08:53 PM
Last Updated : 02 Feb 2022 08:53 PM

வலிமை முதல் ஆர்ஆர்ஆர் வரை... வரிசைகட்டும் படங்களால் திரையரங்கு உரிமையாளர்கள் உற்சாகம்

வாரத்துக்கு ஒரு படம் என்ற அளவில் எதிர்பார்ப்பிற்குரிய படங்கள் வெளியாகவுள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

2022-ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஒமைக்ரான் வைரஸ் பரவலால் 50% பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் பெரும் முதலீடு கொண்ட படங்கள் அனைத்துமே தங்களுடைய வெளியீட்டை ஒத்திவைத்தன. இந்த முடிவினால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் சோகத்தில் மூழ்கினார்கள்.

தற்போது தமிழகத்தில் கரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 16,000-க்கும் குறைவான தொற்று எண்ணிக்கையை எட்டியுள்ளது. சென்னையில் 2000 அளவிலேயே தொற்று எண்ணிக்கை உள்ளது. ஏற்கெனவே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், விரைவில் திரையரங்குகளிலும் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பு வெளியாகும் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனை முன்வைத்து பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களும் தங்களுடைய வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன. இந்திய அளவில் கரோனா கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டு வருவதால் இதர மொழிப்படங்களும் வெளியீட்டுத் தேதியை அறிவித்து வருகின்றன.

தற்போது 'வீரமே வாகை சூடும்', 'எஃப்.ஐ.ஆர்', 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்', 'பீஸ்ட்', 'ராதே ஷ்யாம்', 'ஆர்.ஆர்.ஆர்', 'டான்', 'கே.ஜி.எஃப் 2', 'ஆச்சாரியா', 'மன்மதலீலை' உள்ளிட்ட பல படங்கள் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளன.

இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் கடும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்தப் படங்களின் மூலம் மக்கள் மீண்டும் திரையரங்கு வரத் தொடங்கி, பழைய நிலை திரும்பும் என எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

‘வலிமை’ வரும் பிப்ரவரி 24ஆம் தேதியும், ‘ஆர்ஆர்ஆர்’ படம் மார்ச் 25-ஆம் தேதியும், ‘ராதே ஷ்யாம்’ மார்ச் 11-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகின்றன. சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x