Published : 22 Nov 2021 04:09 PM
Last Updated : 22 Nov 2021 04:09 PM

‘கங்கணாவின் பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற வேண்டும்’ - சீக்கிய அமைப்பு போலீஸில் புகார்

விவசாயிகள் குறித்து சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்த கங்கணாவுக்கு எதிராக சீக்கிய அமைப்பு போலீஸில் புகார் அளித்துள்ளது.

நவ.19-ம் தேதி காலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால், நடிகை கங்கணா ரணாவத், வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கங்கணாவின் இந்தப் பதிவு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி டெல்லியில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பான குருத்வாரா மேலாண்மை கமிட்டி சார்பில் அதன் தலைவரான மாஞ்சிந்தர் சிங் சிர்ஸா மும்பை காவல்துறையில் கங்கணா மீது புகார் அளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளார்.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மாஞ்சிந்தர் சிங், “கங்கணா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயிகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். போராடிய விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று விமர்சித்துள்ளார். கங்கணாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x