Published : 03 Oct 2021 01:33 PM
Last Updated : 03 Oct 2021 01:33 PM

பணம் எல்லாம் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகிவிடுகிறது: விஜய் சேதுபதி

சென்னை

பணம் எல்லாம் கடன்காரர்களுக்குக் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகிவிடுகிறது என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டத்திற்கு விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சபரிகீரிசன் மற்றும் 23 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ்.தாணு, விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் விஜய் சேதுபதி பேசியதாவது:

"பெப்சியின் தலைவரான ஆர்.கே.செல்வமணி திரைத்துறைக்கு அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். ஆனால், திரைப்படத் தொழிலாளர்களின் இன்றைய வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது? அவர்களின் அடிப்படைத் தேவை என்ன? அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதத்தை வாடகைக்காகச் செலவிடுகிறார்கள் என்ற மாதாந்திரக் கணக்கை ஆர்.கே.செல்வமணி தற்போதுள்ள நிலையிலிருந்து சிந்தித்திருப்பது வியப்பாக இருக்கிறது. அவர் படங்களை இயக்கியும் நீண்ட காலமாகிவிட்டது. இந்த நிலையில் தொழிலாளர்களுடன் பழகி, அவர்களின் இன்றைய வாழ்வியலைக் குறித்து அறிந்துகொண்டு, அவர்களின் அடிப்படைத் தேவையைப் புரிந்துகொண்டு, அதிலும் பிரதானமாகத் தேவையானது எது? என்பதைத் தெரிந்துகொண்டு, அதை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்துச் சிந்தித்து வருகிறார்.

எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகப் பணியாற்றியபோது நடைபெற்ற நிகழ்விலும் இது தொடர்பாகத் தெளிவாக எடுத்துரைத்தார். தற்போதும் கூட இதற்கான திட்டத்தைத் தெளிவாக முன்னெடுத்துக் கொண்டு செல்வதில் வல்லவராக இருக்கிறார். இதனால் அவர் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய தொழிலாளர் சம்மேளனத்திற்கு அருமையான தலைவர் கிடைத்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியும் உண்டு. இதற்காக அவரை மனதார வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

தெளிவான திட்டமிடலுடன் இத்தகைய பெரியதொரு திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆர்.கே. செல்வமணியின் செயல்பாடு உறுதியாக நிறைவேறும் என மனதார நம்புகிறேன். அவர் என்னிடம் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. உதவி செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. அதற்காக மன்னிப்பு கேட்பதற்காகத்தான் அவரை நான் தொடர்பு கொண்டேன்.

இந்தத் தருணத்தில் மேன் கைண்ட் மற்றும் காசா கிராண்ட் ஆகிய நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்தேன். அதில் கிடைத்த ஊதியத்தை ஆர்.கே.செல்வமணியிடம் கொடுத்துவிட வேண்டும் என முடிவு செய்தேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் பணம் வரும்போதெல்லாம் ஏதேனும் கடன்காரர்களுக்குக் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகிவிடுகிறது.

அதன் பிறகு, நாம் செய்வது ஏதோ பெரிய உதவி என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இந்தத் திட்டம் ரூ.800 கோடி மதிப்பிலானது. அதில் நான் கொடுப்பதெல்லாம் ஒரு சிறிய புள்ளி அவ்வளவுதான். இது ஒரு மிகப்பெரிய கனவு. மிகப் பெரிய முயற்சி. மிகச் சிறப்பாகத் தொடங்கி நல்லவிதமாக நிறைவடைய வேண்டும். நம்முடைய தொழிலாளர்கள் அனைவரும் அவருடன் இணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறுகிய காலத்திற்குள் இது நடைபெறும் என்றும், அதற்குச் சரியான தலைவர்தான் இதற்குப் பொறுப்பேற்றிருக்கிறார் என்று முழுதாக முழுமனதுடன் நம்புகிறேன். வாழ்த்துகள்.

என்னுடைய உதவியை ஒரு கோடி ரூபாயுடன் நிறுத்திக்கொள்ளும் எண்ணமில்லை. தொடர்ந்து இந்த திட்டத்திற்கு என்னாலான உதவிகளைத் தொடர்ந்து செய்வேன். நான் திரைத்துறையில் வருவதற்கு முக்கியமான காரணம் என் தந்தையாரின் 10 லட்சம் ரூபாய் கடன்தான். சிறிய வயதில் எனக்குத் திரைப்படம் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. துபாய்க்குச் சென்று சம்பாதித்து, கடனை அடைத்துவிடலாம் என நினைத்தேன். அங்கு சென்று சம்பாதித்து, வட்டியை மட்டும்தான் கட்டினேன். அசலைக் கட்ட முடியவில்லை.

அதன் பிறகு வீட்டு வாடகை. இருபதாம் தேதி ஆனவுடன் எனக்குள் பதற்றம் தொற்றிக்கொள்ளும். அடுத்த மாதம் எப்படி வாடகை கொடுக்கப் போகிறோம் என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். அதன்பிறகு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் திடீரென்று வீட்டு வாடகையை உயர்த்திவிடுவார்கள். என்ன கணக்கு என்று தெரியாது. விலைவாசி உயர்வை விட, வீட்டு வாடகை உயர்வுதான் அதிகம். இதுதான் பதற்றத்தை ஏற்படுத்தும். இதனால் எப்பாடுபட்டேனும் ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும். அப்பாவின் 10 லட்சம் ரூபாய் கடனை அடைத்துவிட வேண்டும். இந்த இரண்டு விஷயத்திற்காகத்தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். இங்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் நுழைந்தேன்.

இப்படித் தெரியாமல்தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். திட்டமிட்டு நடிக்க வரவில்லை. அப்படி ஒரு ஆசையும் இருந்ததில்லை. வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். சில இடங்களில் ஏதோ பாகிஸ்தானில் குடியிருக்கிறோம் என்ற உணர்வு வரும். வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அப்படி இருக்கும். நான் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடம் பெற்றது போல், துணி காயப் போடக்கூடாது. சுவரில் ஆணி அடிக்கக் கூடாது. இப்படிப் பலப்பல புதிய புதிய நிபந்தனைகள் இருக்கும். உறவினர்கள் வரக்கூடாது. வந்தால் உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் இங்குக் குளிக்கக் கூடாது என ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பார்கள்.

அதனால் சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு.. அந்த ஆசை.. இன்று நிறைவேறத் தொடங்குகிறது. கண்டிப்பாக இந்தக் கனவை என்னால் மட்டும் சுமக்க இயலாது. ஏனெனில் இதற்காகச் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதனால் இந்த திட்டம் சிறப்பாகத் தொடங்கி, சிறப்பாக நிறைவடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆர்.கே. செல்வமணி கேட்ட 10 லட்ச ரூபாய் தொகையை அலுவலகத்திற்குச் சென்றவுடன் காசோலையாகத் தந்து விடுகிறேன்.

இந்தக் கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ்பாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய தொழிலாளர்களின் வீட்டைத் தலைமுறை தலைமுறையாக உறுதியுடன் இருக்கும் வகையில் கட்டித் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாமல், தரமாகக் கட்டிடத்தைக் கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x