Published : 02 Oct 2021 05:06 PM
Last Updated : 02 Oct 2021 05:06 PM

நதிக்கரை தூய்மைப்பணியில் ஈடுபட்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

மும்பையின் மிதி நதிக்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். (படம்: இன்ஸ்டாகிராம்)

மும்பை

பொதுப்பணிகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தற்போது பிரதமரின் தூய்மை இந்தியா
திட்டத்தின் கீழ் நதிக்கரை தூய்மைப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜாக்குலின் பெர்னாண்டஸ் கிக், பிரதர்ஸ், ரேஸ் 3 உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளார். இவரது சமீபத்திய திரைப்படம் 'பூட் போலீஸ்' செப்டம்பர் 10ல் வெளியாகியுள்ளது. கிக் 2', 'பச்சன் பாண்டே' மற்றும் 'ராம்
சேது' உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் பொதுப்பணிகளில் ஈடுபடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு அவரது
பிறந்தநாளின்போது மகாராஷ்ட்ரிய மாநிலத்தைச் சேர்ந்த பின்தங்கிய கிராமங்களான பதார்தி, சகூர் ஆகிய இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்து சேவைப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

தற்போது காந்தி பிறந்ததினம் மற்றும் ஸ்வச் பாரத் அபியனின் 4 வது ஆண்டு விழாவையொட்டி, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார்.

மும்பை மேற்கில் அரபிக் கடலை ஒட்டியுள்ள மிதி நதிக்கரையை ஜாக்குலின் தூய்மைப்படுத்தும் பணியை யாலோ அறக்கட்டளை @ பீச்
பிலீஸ்இண்டியா அமைப்புடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ், தனது இன்ஸ்டாகிராமில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் படங்களை இன்று வெளியிட்டுள்ளார். அதனுடன்
தன்னார்வத் தொண்டில் மற்றவர்களையும் ஈடுபடச் செய்யும்விதமாக உற்சாகப்படுத்தும் வாசகத்தை எழுதியுள்ளார்.

ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளதாவது:

''அக்டோபர் 2, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்தநாள் என்பதால் மில்லியன் கணக்கான இதயங்களில் பதிந்த தேதி. இன்று, அது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துவிட்டது. ஏனெனில் ஸ்வச் பாரத் அபியான் (தூய்மை இந்தியா திட்டம்) 4ஆம் ஆண்டை
அடியெடுத்து வைக்கிறது. நமக்கும் நமது மற்ற குடிமக்களுக்கும் கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த பரிசு தூய்மையான நகரம் ஆகும். இந்த
நாளில் என்னால் முடிந்ததை செய்வதற்காக, சில தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து எப்படி அதைப் பங்களிக்க முடியும் என்பதை
புரிந்துகொள்ள மிதி நதிக்கரையைப் பார்க்க முடிவு செய்தேன்.

@ பீச் பிலீஸ்இண்டியா நம் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க அயராது உழைத்து வருகிறது. அவர்கள் தவறாமல் கடற்கரையை
சுத்தம் செய்கிறார்கள். அவர்களுடன் நாமும் இணைந்து அனைவரும் தன்னார்வத் தொண்டு செய்வோம்!! இந்த அழகான நகரம், நாடு
மற்றும் கிரகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைவோம்.''

இவ்வாறு ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x