Published : 29 Aug 2021 06:00 PM
Last Updated : 29 Aug 2021 06:00 PM

திமுக சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றும்: விஷால் நம்பிக்கை

சென்னை

திமுக சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

இன்று (ஆகஸ்ட் 29) விஷாலின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், அவருடைய ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:

"'வீரமே வாகை சூடும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும், எனது அடுத்த படமும் பூஜையுடன் தொடங்கவுள்ளது. தயவு செய்து போஸ்டர்கள், கட-அவுட்கள் வைக்காதீர்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அந்தப் பணத்தில் இயலாதவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தீர்கள் என்றால் அந்தப் புண்ணியம் எனக்குச் சேருதோ இல்லயோ, உங்கள் குடும்பத்துக்குச் சேரும்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஒரு ரசிகனாக வடிவேலு அண்ணனை ரொம்பவே மிஸ் பண்றேன். ஏனென்றால் இக்கட்டான சூழலில் கவுண்டமணி அண்ணன், வடிவேலு அண்ணன் காமெடி தான் பார்ப்பேன். வடிவேலு அண்ணன் மாதிரி ஒரு குடும்பத்தையே குஷிப்படுத்துவது சாதாரண விஷயமல்ல. அவர் மீண்டும் நடிக்க வருவதில் மிக்க மகிழ்ச்சி.

திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். நிறையக் கோரிக்கைகள் இருக்கிறது. அதைத் தயாரிப்பாளர் சங்கமாக முன்வைத்தார்கள் என்றால் சந்தோஷமாக இருக்கும். ஜி.எஸ்.டி வரி மற்றும் உள்ளாட்சி வரி என இரண்டும் கட்டும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. அதை மாற்றினார்கள் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்.

தயாரிப்பாளர்கள் படம் எடுத்துவிட்டு திரையரங்கமா, ஓடிடியா என்ற திண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அனைவருடைய வாழ்க்கையிலும் ஒன்றரை வருடங்கள் அழிந்துவிட்டது. திரையுலகிற்கு நல்லது நடக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் நண்பன் உதயநிதி எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். ஸ்டாலின் அங்கிள் முதலமைச்சராகி இருக்கிறார். கண்டிப்பாக திரைத்துறைக்கு நல்லது செய்வார்கள் என முழுமையாக நம்புகிறேன்.

மக்களும் விரைவில் திரையரங்குகளுக்குத் திரும்புவார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் அனைவருமே சம்பாதிக்க வேண்டும். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை அந்த வழக்கு லிஸ்ட் ஆனால் மட்டுமே எடுக்கப்படும். அதற்காகத் தினந்தோறும் காத்துக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக நான், பூச்சி முருகன் சார், கார்த்தி மூவரும் தினந்தோறும் பேசி வருகிறோம்.

நாங்கள் யாருக்கும் கெடுதல் பண்ணவில்லை. யாருக்கும் கெடுதல் பண்ண வேண்டும் என்ற எண்ணமும் வந்ததில்லை, அதற்கு வாய்ப்புமில்லை. அந்தக் கட்டிடம் தொடர்பாக வழக்குப் போடாமல், அவர்களே கட்டி முடித்திருந்தால் நாங்கள் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்திருப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகர் சங்கத்தில் யாருக்குமே உதவி செய்ய முடியவில்லை. அப்படியொரு இக்கட்டான சூழ்நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

மீண்டும் நடிகர் சங்கம் பழைய நிலைமைக்கு வந்து, நல்லபடியாகச் செயலாற்ற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். அந்தக் கட்டிடம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட முயற்சி அல்ல. அது தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கே ஒரு பொக்கிஷமாக இருக்கும். கரோனா சமயத்தில் நிறைய நாடக நடிகர்களுக்கு உதவினோம்.

ஸ்டாலின் அங்கிள் நல்லாட்சி கொடுப்பார் என்று தான் மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். திமுக ஆட்சியின் செயல்பாடு மேற்கொண்டு நல்லாயிருக்கும் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் இருக்கிறது. இது ஏதோ அதிமுகவுக்கு எதிராகச் சொல்கிறேன் என்று அல்ல. ஹைதராபாத்தில் இருக்கும் போது கூட ஸ்டாலின் அங்கிள், உதயநிதியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர் சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்"

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x