Published : 14 Aug 2016 11:32 AM
Last Updated : 14 Aug 2016 11:32 AM

தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்

மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 41.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.

'காதல் கொண்டேன்', 'பிதாமகன்', 'கில்லி', 'கஜினி', 'நந்தா', 'புதுப்பேட்டை', 'காதல்', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'கற்றது தமிழ்', '7 ஜி ரெயின்போ காலனி', 'காக்காமுட்டை', 'தெறி' உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.

தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், 'சைவம்' படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தனித்துவம் மிக்க பாடல் வரிகள்:

''ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது, அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது, காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்,காற்றிடம் கோபம் கிடையாது, அலை கரையை கடந்த பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி, என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா, பேசி போன வார்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா? உயிரும் போகும் உருவம் போகுமா? போன்ற தனித்தன்மையான வரிகளால் கவனம் ஈர்த்தவர் நா.முத்துக்குமார்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நா.முத்துக்குமார் இன்று காலை உயிரிழந்தார்.

நா.முத்துக்குமார் - தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதங்கள்) என்ற மகளும் உள்ளனர்.

இறுதிச் சடங்கு

முகப்பேரில் உள்ள நா.முத்துக்குமாரின் இல்லத்தில் திரையுலகினர் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தினர். நியூ ஆவடி ரோடு வேலங்காடு மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x