Published : 12 Jan 2017 01:53 PM
Last Updated : 12 Jan 2017 01:53 PM

ட்ரம்ப் அதிபரானால் டேக் இட் ஈசி பாலிசி: மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் ஊர்வசி ஊர்வசி பாடல்

22 ஆண்டுகளுக்கு பிறகு ரஹ்மானின் ’ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் வரிகளில் சில மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் ரசிகர்களிடம் புயலை உருவாக்கியுள்ளது.

1994-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'காதலன்'. பிரபுதேவா, நக்மா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்களும், படமும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பாக ’டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது.

இந்தப் பாடலை ஒரு இசை நிகழ்ச்சியில் மறுபிரவேசம் செய்து மேடையேற்ற முடிவு செய்த ஏ.ஆர்.ரஹ்மான், அந்தப் பாடல் சரணத்தின் வரிகளை இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க விரும்புவதாகவும், அதற்கு ரசிகர்களே சுவாரசியமான, நகைச்சுவையான வரிகளைத் தரலாம் என்றும் கடந்த டிசம்பர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்திருந்தார்.

இந்த நிலையில் வரிகள் மாற்றியமைக்கப்பட்ட ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடலின் புதிய வடிவம் எம்டிவியின் ஏழாவது சீசனில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மறுவடிவில் வெளியிடப்பட்டுள்ள டேக் இட் ஈசி ஊர்வசி பாடலை ரஹ்மானுடன், ஊர்வசி பாடலின் முதல் பதிப்பில் பாடிய பாடகர் சுரேஷ் பீட்டருடன் இணைந்து பாடினார்.

மாற்றியமைக்கப்பட்ட பாடல் வரியில் 'ஹிலாரி கிளிண்டன் தோத்து போனால் டேக் இட் ஈசி பாலிசி' 'டொனால்ட் ட்ரம்ப்பு பிரசிடெண்ட் ஆனால் டேக் இட் ஈசி பாலிசி', '500 ரூபாய் செல்லாமல் போனால் டேக் இட் ஈசி பாலிசி','1000 ரூபாய் செல்லாமல் போனால் டேக் இட் ஈசி பாலிசி' போன்ற சம கால நிகழ்வுகள் பாடல் வரிகளாக இடப்பெற்றுள்ளது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பாடல் இதுவரை ஒரு கோடிக்கு அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.