Published : 06 Feb 2019 04:47 PM
Last Updated : 06 Feb 2019 04:47 PM

விமர்சகர்களை விட மக்கள் நன்றாகவே என் படங்களைப் புரிந்து கொள்கின்றனர்: இயக்குநர் ராம்

விமர்சகர்களை விட மக்கள் நன்றாகவே என் படங்களைப் புரிந்து கொள்கின்றனர் என இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.

ராம் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘பேரன்பு’. மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்,

இந்தப் படத்துக்கு, கூகை திரைப்பட இயக்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. ‘பேரன்பு-க்கு பிரியங்களைப் பகிர்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவில், இயக்குநர்கள் ராம், பா.இரஞ்சித், லெனின் பாரதி, மீரா கதிரவன், ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், திரைக்கலைஞர் அஞ்சலி அமீர், ‘தங்க மீன்கள்’ சாதனா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், எழுத்தாளர்கள் ஷாலின் மரியா லாரன்ஸ், ஜா.தீபா, பத்திரிகையாளர் அ.குமரேசன், சமூகச் செயற்பாட்டாளர்கள் மாலினி ஜீவரத்தினம், கிரேஸ் பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ராம் பேசியதாவது:

'' ‘பேரன்பு’ படத்தை ஒரு மாற்று சினிமாவாக நினைத்து நான் எடுக்கவில்லை. அதனை ஒரு ‘மெயின்ஸ்ட்ரீம்’ சினிமாவாகத்தான் எடுத்தேன். நான் மட்டுமல்ல, இப்படத்தின் தயாரிப்பாளரும் அப்படி நினைத்துதான் தயாரித்தார். நல்ல படங்களை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது.

‘பேரன்பு’ படத்தைக் கொண்டாடுவதற்காக என்னுடைய மற்ற மூன்று படங்களுடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ , ‘தரமணி’ ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. கேரளாவின் கொச்சி நகரில்  1200 சீட்டுகள் வசதி கொண்ட ஈவிஎம் கவிதா திரையரங்கில் பல வருடங்களுக்குப் பின் ‘பேரன்பு’ மூலம் ஹவுஸ் ஃபுல் போர்டு வைத்துள்ளனர்.

அதேபோல், கோயம்புத்தூரில் நான் சென்ற இடங்களில் எல்லாம் படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். ‘கற்றது தமிழ்’ படம் தொடங்கி விமர்சகர்கள் என் படங்களைப் புரிந்து கொள்வதைவிட, மக்கள் நன்றாகவே புரிந்து கொள்கின்றனர். ராம் பத்து வருடத்தில் நான்கு படங்களை மட்டுமே எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக எல்லோரும் பேசுகிறார்கள், உண்மையில் நான் எப்படி இருந்தேனோ, அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன்.

இந்த சினிமாவுக்காக நான் எதையுமே இழக்கவில்லை. என் மகிழ்ச்சியை, என் கொண்டாட்டத்தை இழக்காமல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கேரளாவில் ‘பேரன்பு’ படத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசுகிறார்கள் என்றால், அங்கு மம்மூட்டி இருக்கிறார். அவரால் படம் குறித்த தகவல் வேகமாகப் பரவுகிறது, மக்கள் வருகிறார்கள். ‘கற்றது தமிழ்’ இப்போதுவரை மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல், ‘பேரன்பு’ படமும் மக்களைச் சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

என் படத்தை எப்போதாவது, எப்படியாவது நீங்கள் பார்த்துதான் ஆக வேண்டும், உங்களுக்கு வேறு வழியில்லை. என் கயமைகள் மறந்து என்னையும், என் திரைப்படங்களையும் கொண்டாடக்கூடிய ரசிகர்களும் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் எப்படியும் ‘பேரன்பு’ படத்தைப் பார்த்து விடுவார்கள்.

நீங்கள் படம் குறித்து  கூறும் விமர்சனங்கள் உண்மையானவையாக இருக்கும் பட்சத்தில், இன்னும் கற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இங்கு வந்தது உங்களுடைய பாராட்டுகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லை. படம் குறித்த தகவல் பத்து பேருக்கு கூடுதலாகச் சென்று சேரும். அவர்கள் திரையரங்குக்கு வந்து ‘பேரன்பு’ பார்த்துவிட்டுப் பேசுவார்கள் என்பதற்காக மட்டும்தான்''.

இவ்வாறு ராம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x