Published : 23 Apr 2024 10:21 AM
Last Updated : 23 Apr 2024 10:21 AM

திரை விமர்சனம்: ஃபைண்டர்

பழவேற்காட்டில் மீனவராக இருக்கும் பீட்டர் (சார்லி), எதிர்பாராத பண நெருக்கடியைச் சமாளிக்க, கொலைக்குற்றம் ஒன்றை ஏற்று 8 வருடமாகச் சிறையில் வாடுகிறார். பீட்டரின் மகளான ரூபி, தந்தையை மீட்க, முதுகலையில் குற்றவியல் படித்துவிட்டு ‘ஃபைண்டர்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, முடிக்கப்பட்ட சில வழக்குகளை ‘ரீ ஓபன்’ செய்து, தங்களது விசாரணையின் மூலம் உண்மையைத் தோண்டியெடுக்கும் வினோத்தையும் பல்லவியையும் நாடுகிறார். பீட்டரின் வழக்கை கையிலெடுக்கும் அவர்கள், அவரை மீட்டார்களா என்பது கதை.

தொய்வில்லாத திரைக்கதையின் மூலம் கடைசிவரை விலகல் இல்லாமல் படம் பார்க்க வைத்துவிடுகிறார் எழுதி இயக்கி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோத் ராஜேந்திரன். அரசு வழக்கறிஞராக வந்து, குற்றவியல் படிக்கும் மாணவர்களுக்கு நிழல்கள் ரவி ‘கெஸ்ட் லெக்சர்’ எடுக்கும் ஆரம்பக் காட்சியே அசத்தல். ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துவிடலாம்; ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்ற நியதி, நீதித்துறையின் அடித்தளங்களில் ஒன்று என்பதையே நோக்கமாக வைத்து, ‘ஃபைண்டர்’ நிறுவனத்தைத் தொடங்குவது, சரியான வழக்கை வினோத்தும் பல்லவியும் தேர்வு செய்வது என நிமிர்ந்து உட்கார வைக்கிறது படம்.

சிறையில் இருக்கும் பீட்டரின் வாழ்க்கை, திரைக்கதையின் ஆன்மாவாக இருப்பதால், அவரது வாழ்க்கை எவ்வாறு சிதைவுக்கு உள்ளானது, குடிமைப் பணித் தேர்வு எழுத விரும்பிய அவர் மகள், கழிக்கப்பட்ட மீன்களை விற்றுப் பிழைத்து வாழ வேண்டிய நிலையிலும் தனது தந்தையை ஏன் மீட்க நினைக்கிறார் ஆகியவற்றை உயிர்த்துடிப்புடன் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒரு கொலைக் குற்றத்தின் பின்னால் இருக்கும் இழிநிலை மனிதர்கள், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சித்தரித்த விதம் பாராட்டும் விதமாக இருப்பதுடன், அவை வினோத் - பல்லவி விசாரணையின் வழியாக திரைக்கதையில் வெளிப்படுவது ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறது.

பீட்டராக சார்லியின் அபாரமான நடிப்பு, அரசு வழக்கறிஞராக வரும் நிழல்கள் ரவி, ராயனாக வரும் சென்ராயன் ஆகியோரின் தரமான பங்களிப்பு, புதுமுகங்கள் என்று கூற முடியாதபடி அசத்தியிருக்கும் அறிமுக நடிகர்கள் உள்ளிட்ட அனை வரும் கதை மாந்தர்களாக ஒளிர்கிறார்கள். சிறந்த பாடல்கள், பின்னணி இசை, கதைக்கான ஒளிப்பதிவு என தொழில் நுட்பப்பங்களிப்பிலும் குறையில்லை. இந்த ‘ஃபைண்டர்’ தரமான திரை அனுபவத்தைத் தருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x