Published : 23 Apr 2024 09:28 AM
Last Updated : 23 Apr 2024 09:28 AM

‘‘நான் அதை சொல்லும்போது என்னை வில்லனா பார்த்தாங்க!’’ - ’ரத்னம்’ விஷால் பேட்டி

‘தாமிரபணி', 'பூஜை' படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஹரியுடன் மூன்றாவது முறையாக விஷால் இணைந்திருக்கும் படம், ‘ரத்னம்'. ஸ்டோன்பெஞ்ச் நிறுவனமும் ஜீ ஸ்டூடியோ சவுத்தும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படம் வரும் 26-ம் தேதி வெளியாகிறது. புரமோஷனுக்காக பறந்துகொண்டிருக்கும் விஷாலிடம் பேசினோம்.

‘ரத்னம்' எப்படி உருவாச்சு?

என்னைச் சுத்தி இருக்கிறவங்களும் எங்க வீட்லயும் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ மாதிரி ஒரு மாஸ் படம் பண்ணலாமேன்னு சொன்னாங்க. பழைய விஷாலை பார்க்கணும்னாங்க. உடனேயே ஹரி சாருக்கு ஃபோன் பண்ணினேன். அவருக்கு மகிழ்ச்சி. ‘எங்க இருக்கீங்க, நான் வர்றேன்?'னு சொன்னார். 'இல்ல, நானே வர்றேன்'னு அவரைத் தேடிப் போனேன். அவர் சொன்ன கதை பிடிச்சிருந்தது. ஓகே சொன்னேன். ஸ்டோன்பெஞ்ச் தயாரிக்க வந்தாங்க. இசையமைப்பாளரா தேவிஸ்ரீ பிரசாத் வந்தார். அப்புறம் பிரியா பவானி சங்கர் ஹீரோயினா வந்தாங்க. கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபுன்னு எல்லாரும் வர வர பாசிட்டிவா தொடங்குச்சு படம். இந்த கோடைக்கு ஜாலியா ஒரு படம் பார்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு ரத்னம், ரத்தினமா இருக்கும்.

டிரெய்லரை பார்த்தா கதை ஆந்திராவுல நடக்கிற மாதிரி இருக்கே?

சித்தூர்-நகரி பார்டர்ல நடக்கிற கதை. பெண்களுக்கு பிடிக்கிற மாதிரியான விஷயங்கள் கதையில நிறைய இருக்கு. இது ஃபேமிலி ஆடியன்சுக்கான படம். முடிஞ்சு வரும்போது ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி எல்லோருக்கும் கிடைக்கும். இதுல ஹரி சார், ஒரு புது விஷயம் வச்சிருக்கார். வழக்கமா அவர் படங்கள்ல பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். இதுல, அதுலயிருந்து ஒரு படி மேல இருக்கும். இதுபற்றி பிரியா பவானி சங்கர்கிட்ட 'உங்க சினிமா வாழ்க்கையில இது முக்கியமான கேரக்டரா இருக்கும்'னு சொன்னேன். ஹரி சாரோட லேட்டஸ்ட் வெர்ஷனை இந்தப் படத்துல பார்க்கலாம்.

ஒரு முக்கியமான காட்சியை சிங்கிள் ஷாட்ல எடுத்திருக்கீங்களாமே?

ஆமா. மூன்றரை கி.மீட்டருக்கு ஒரு சேஸிங். 8 ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் எடுத்தோம். 4 இடங்கள்ல கார்ல போகணும், இறங்கணும். கயிறு கட்டியிருந்தாங்க, அதுல பாயணும், கேமரா கூட ஓடணும், ஹீரோயினோட சேர்ந்து ஃபைட் பண்ணணும்னு பெரிய உழைப்பு அது. இயக்குநர் ஹரியும் கேமராமேன் சுகுமாரும் கடுமையான உழைப்பை கொடுத்தாங்க. இரண்டு முறை கேமரா உடைஞ்சது. ஒருத்தர் தப்பு பண்ணினா இன்னொரு முறை அதை படமாக்கறது கஷ்டம். அதனால ரொம்ப கவனமா அந்த காட்சியை எடுத்தோம். அப்படி எடுக்கணுங்கற அவசியம் இல்லைனாலும் ரசிகர்களுக்கு ஒரு த்ரில் அனுபவத்தை கொடுக்கறதுக்காக அதைப் பண்ணியிருக்கோம். படம் பாருங்க, நீங்களும் வியப்பீங்க.

இந்தியில சல்மான் கான், தெலுங்குல பிரபாஸ், தமிழ்ல நீங்க... ஏன் திருமணத்தை விரும்பறதில்லை...

அவங்களை பற்றி எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை திருமணங்கறது பெரிய பொறுப்பு. என்னால கார்ப்பரேட் ஆபீஸ்ல 10 டூ 6 மணிவரை வேலை பார்த்துட்டு வீட்டுக்குப் போற மாதிரி வாழ்க்கையை வாழ முடியாது. எனக்குன்னு சில லட்சியங்கள் இருக்கு. அதுல, இயக்குநர் ஆகறது முக்கியமானது. சிறு வயசு கனவு அது. அது இப்பதான் நிறைவேற போகுது. அதுக்குப் பிறகு அதுபற்றி யோசிப்பேன். வீட்டுலயும் நெருக்கடி கொடுத்துட்டுதான் இருக்காங்க.

‘துப்பறிவாளன் 2' எப்ப தொடங்க போறீங்க?

என் இயக்குநர் கனவை சீக்கிரமா நிறைவேற்ற உதவிய மிஷ்கினுக்கு நன்றி. இந்தப் படம் ஏற்கெனவே 35 நாள் ஷூட்டிங் நடந்திருக்கு. அதை அப்படியே தூக்கி தூர வச்சுட்டு புதுசா பண்றோம். கதையும் வேறதான். மே முதல் வாரம் ஷூட்டிங் போறோம். யார் யார் நடிக்கிறாங்க அப்படிங்கற விஷயங்களை பிறகு அறிவிப்போம்.

சிறு பட்ஜெட் படங்கள் பற்றி நீங்க பேசியது இன்னும் விமர்சிக்கப்பட்டு வருதே?

நான் எனக்காக அதை பேசலை. ஒரு தயாரிப்பாளராகத்தான் பேசினேன். படம் எடுக்காதீங்கன்னு நான் சொல்லலையே. இன்னைக்கு படம் எடுக்கிறது முக்கியமில்லை. அதை எப்ப, எப்படி ரிலீஸ் பண்ணப் போறீங்க அப்படிங்கறதுதான் முக்கியம். நான் அதைத்தான் சொன்னேன். நான் சொல்லும்போது என்னை வில்லனா பார்த்தாங்க. இப்ப பல படங்களுக்கு என்ன நடந்துட்டு இருக்கு? ரம்ஜான் பண்டிகைக்கு பல தியேட்டர்கள்ல ஷோ கேன்சல் பண்ணியிருக்காங்க. இதை இதுக்கு முன்னால கேள்விப்பட்டு இருக்கீங்களா? இப்ப வாராவாரம் 8 படங்கள் ரிலீஸ் ஆகுது. எங்க ஓடுது? இது நஷ்டம் தானே. இதைத் தான் சொன்னேன்.

நல்ல கதையம்சம் கொண்ட சில சின்ன பட்ஜெட் படங்கள் ஓடிட்டு இருக்குதே?

சில அப்படின்னு சொல்றீங்கள்ல, அதை நம்பமுடியாது. ண்ணு ரெண்டு ஓடுனதை வச்சு நாம மொத்தமா எடை போட முடியாது. இப்ப நீங்களே பாருங்க, ஜுன், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்ல பெரிய படங்கள் தொடர்ந்து வரப் போகுது. இந்தியன் 2, வேட்டையன், கங்குவா, தி கோட், தங்கலான், விடாமுயற்சி, புஷ்பா 2, கல்கி 2898 ஏடி, தேவரா, ராயன் அப்படின்னு படங்கள் வெளியாக ரெடியா இருக்கு. இது எல்லாமே பெரிய பட்ஜெட் படங்கள். ஒவ்வொரு படத்துக்கும் குறைந்தபட்சம் 2 வாரங்களாவது இடைவெளி வேணும். இதுல சின்ன படங்களை வெளியிட்டா என்ன ஆகும்? அதனால காத்திருங்கன்னுதான் நான் சொன்னேன். அது தப்பா?

இதுக்கு என்னதான் தீர்வு?

தீர்வுங்கறது, புரிஞ்சுகிட்டு பண்றதுதான். அதைத் தயாரிப்பாளர் சங்கம்தான் பேசி என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணணும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x