Published : 24 Jan 2024 10:19 AM
Last Updated : 24 Jan 2024 10:19 AM

வட்டமாக வானவில் வெட்டி குட்டி மாலை கோக்கும் இமானின் இசை | பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

இமானுவேல் வசந்த் தினகரன் சிறுவயது முதலே இசை ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். 15 வயது முதல் இசைத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற தீவிரமாக முயற்சித்து வருகிறார். இசையமைப்பாளர் ஆதித்யன் உள்ளிட்டவர்களிடம் கீபோர்ட் பிளேயராக பணியாற்றுகிறார். அதேநேரம் தனக்கான வாய்ப்புகளை தேடிக் கொண்டே இருக்கிறார். ஒருவழியாக நடிகை குட்டிபத்மினி மூலம் டிவி சீரியல்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. கிருஷ்ணதாசி, கோலங்கள், மந்திர வாசல் போன்ற நாடகங்களுக்கு இசை அமைக்கிறார்.

2001-ல் 'காதலே சுவாசம்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக வேண்டியது. படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் வெளியாகவில்லை. மீண்டும் ஒரு சிறப்பான தொடக்கத்துக்காக காத்திருக்கிறார். அப்போதுதான் விஜய், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவரப்போகும் 'தமிழன்' திரைப்பட அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் இமான்.

முதல் படத்திலேயே கவிஞர் வாலி ஒரு பாடலையும், மற்ற பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வைரமுத்துவும் எழுதியிருந்தனர். படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும், இமான் யாருடைய தேடுதல் பட்டியலிலும் இருக்கவில்லை.

அப்போதுதான் ஒரு பாட்டு திரும்பிய பக்கமெல்லாம் கேட்கத் துவங்குகிறது. ஏற்கெனவே 2001-ல் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் வசீகரா பாடல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிலிருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து இமான் இசையில் வந்த இந்தப்பாடலும் அதேபோல ஒரு மாயத்தை நிகழ்த்தியது. விசில் திரைப்படத்தில் வந்த 'அழகிய அசுரா' பாடல்தான் அது.

காலை தொடங்கி இரவு வரை எஃப்எம்களில் அந்தப் பாடல் வராத நாளே இருக்காது எனும் அளவுக்கு திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது. அந்த பாடலை பாடிய பாடகி அனிதா சந்திரசேகரின் குரலும்கூட ரொம்பவே இயல்பானதாக இருக்கும். இங்கிருந்துதான் இமான் என்ற இசையமைப்பாளரை அனைவரும் கவனிக்கத் தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து சுந்தர்.சியின் மாஸ் மசாலா திரைப்படங்களில் ஒன்றான கிரி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் இமானுடன் இணைந்து கவிஞர்கள் நா.முத்துகுமாரும், பா.விஜய்யும் பணியாற்றினர். இப்படத்தில் 6 பாடல்கள் இருந்தாலும், அனுராதா ஸ்ரீராம் பாடிய 'டேய் கைய வச்சிட்டு' பாடல் ஹிட்டடித்தது.

2004-ல் வெளியான கிரி படம் தொடங்கி பல படங்களுக்கு இசை அமைத்து வந்தாலும், இமானுக்கு ஒரு சூப்பர் டூப்பர் வெற்றி அவசியமாகிறது. ஒரு ஹுரோ அறிமுகப்பாடல், ஒன்னு அல்லது ரெண்டு டூயட், ஒரு சோகப்பாட்டு, ஒரு குத்துப்பாட்டு என்ற தமிழ் சினிமாவின் வழக்கமான டெம்ப்ளேட்களில், தன்னுடைய தடத்தைப் பதிக்க வேண்டி கட்டாயம் இமானுக்கு அவசியமானது. அவரும் அதை எவ்வித கலப்படமும் இல்லாமல் சிறப்பாகவே செய்தார்.

இமானின் இந்த நீண்டகால காத்திருப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்த திரைப்படம்தான் 'மைனா'. 2010-ல் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் பாடல்களும் மக்களின் வரவேற்பைப் பெற்றது. இங்கிருந்துதான் பிரபு சாலமன் - இமான் கூட்டணி உருவானது.

'மைனா' படத்துக்குப் பின் இக்கூட்டணி இணையும் போதெல்லாம் ரசிகர்களுக்கு நல்லதொரு மியூசிக்கல் ஹிட் ஆல்பம் மிஸ் ஆகாமல் கிடைத்தது. இக்கூட்டணியில் 2012-ல் கும்கி, 2014-ல் கயல், 2016-ல் தொடரி படங்களுக்கும், 2012-ல் பிரபு சாலமன் தயாரிப்பில் வெளிவந்த சாட்டை படத்துக்கும் இமானின் பாடல்களும் இசையும் பெரும் பலம் சேர்த்திருந்தது.

இதுதவிர இயக்குநர் சுசீந்திரனின் பாண்டியநாடு, ஜீவா உள்ளிட்ட திரைப்படங்கள், 2014-ல் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளரானார் இமான். 2019-ம் ஆண்டு அஜீத் நயன்தாரா நடிப்பில் வந்த விஸ்வாசம் திரைப்படம் இமானின் இசை வாழ்வில் மறக்கமுடியாத திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் வந்த 'கண்ணாண கண்ணே' பாடல் கேட்டு உருகாதோர் இல்லை எனும் நிலையை உருவாக்கினார் இமான். மேலும், இந்தப்படம் தேசிய விருது பெற்ற 5-வது இசையமைப்பாளர் எனும் பெருமையையும் அவருக்கு ஈட்டித்தந்தது.

இயக்குநர்கள் எழில், எம்.ராஜேஷ், எஸ்.பி.ஜனநாதன், பாண்டிராஜ், விஜய் மில்டன், சுசீந்திரன், பிரபு சாலமன், சிறுத்தை சிவா என பலரின் நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளராக மாறினார் இமான். இதனால் இயக்குநர்கள் பலரும் தொடர்ந்து அவரோடு மீண்டும் இணைந்து பணியாற்றினர். விஸ்வாசம் வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வந்த அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்தார் இமான். அண்ணாத்த அண்ணாத்த, சார சார காற்று, மருதாணி உட்பட 6 பாடல்களும் சிறப்பானதாக வந்தன. இந்தப்படத்தில் 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல்தான் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. பாடிய கடைசிப் பாடலாக அமைந்தது.

இதுதவிர இமான் - சிவா கார்த்திகேயன் காம்போவில் வெளியான அனைத்து படங்களும் மியூசிக்கல் ஹிட்டடித்தவை. மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை என இக்கூட்டணி இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இதேபோல், புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவது, பலதரப்பட்ட இயக்குநர்கள், கவிஞர்களுடன் இணைந்து பணியாற்றும் இமான் இப்போது இயக்குநர் பார்த்திபனுடன் முதல்முறையாக இணைந்துள்ளார். எலெக்ட்ரானிஃபைட் ஆக மாறிவிட்ட இசை உலகில் ரசனைக்கு தேவையான அளவில் அவற்றை கையாளும் இமானின் இசையும் பாடல்களும், வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி ரசிகர்களின் மனதில் எப்போதும் குட்டி, குட்டியான மாலைகளைக் கோக்கவல்லவைதான்!

| ஜனவரி 24 - இன்று - டி.இமான் பிறந்தநாள் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x