Published : 13 Jan 2024 07:43 PM
Last Updated : 13 Jan 2024 07:43 PM

“சந்தீப் ரெட்டி வாங்கா ஒரு தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இயக்குநர்” - அனுராக் காஷ்யப் பகிர்வு

மும்பை: “மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு அவமதிக்கப்பட்ட இயக்குநர்” என சந்தீப் ரெட்டி வாங்கா குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். மேலும், “மிகவும் நேர்மையான, நல்ல மனிதர்” எனவும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

‘அனிமல்’ படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவை அனுராக் காஷ்யப் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “சந்தீப் ரெட்டி வாங்காவுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. தற்போதைய சூழலில், மிகவும் தவறாகப் புரிந்து கொண்டு மதிப்பிடப்பட்ட, அவமதிக்குள்ளான இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா.

என்னைப் பொறுத்தவரை மிகவும் நேர்மையான பாதிக்கப்பட்ட நல்ல மனிதர் அவர். அவரைப் பற்றியோ, அவரது படத்தைப் பற்றியோ மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. நான் அவரது படத்தை இரண்டு முறை பார்த்தேன். அவரை சந்திந்து எனக்குள் இருந்த கேள்விகளைக் கேட்டேன். ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவர் விளக்கமளித்தார். நிதானமாகவும், நீங்கள் நீங்களாகவும் இருப்பதற்கும் நன்றி சந்தீப்.

‘அனிமல்’ படத்தை நான் முதல் முறை பார்த்து 40 நாட்களும், இரண்டாவது முறை பார்த்து 22 நாட்களும் கடந்துவிட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தி சினிமாவை மாற்றியமைத்த படம். நல்லது, கெட்டது எப்படியிருந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கத்தை புறந்தள்ளிவிட முடியாது. படத்தின் இயக்குநரையும் கூட” என பதிவிட்டுள்ளார்.

அனிமல்: ரன்பீர்கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘அனிமல்’ படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியிருந்தார். இப்படம் ஆணாதிக்கத்தையும், மோசமான சித்தரிப்புகளையும் கொண்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். இந்த சூழலில் அனுராக் காஷ்யப்பின் இந்தப்பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

A post shared by Anurag Kashyap (@anuragkashyap10)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x