Published : 14 Nov 2023 09:09 AM
Last Updated : 14 Nov 2023 09:09 AM

டார்லிங் டார்லிங் டார்லிங் | கே.பாக்யராஜ் வைத்த காமெடி கிளைமாக்ஸ்!

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ஒன்பதாவது படம், ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’. தனது முந்தைய படங்களில் இருந்து யதார்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருந்தார் இந்தப் படத்தை. இதில் பூர்ணிமா நாயகி. பாக்யராஜ் படங்களின் ஆஸ்தான நடிகரான கல்லாப்பெட்டி சிங்காரம், அவர் தந்தையாக நடித்தார். ராசி, சுமன், வி.கோபாலகிருஷ்ணன், செந்தாமரை உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஊட்டியில், தொழிலதிபர் வீட்டில் வாட்ச்மேனாக இருக்கும் சிங்காரத்தின் (கல்லாப்பெட்டி சிங்காரம்) மகன் ராஜா (பாக்யராஜ்). தொழிலதிபர் மகள் ராதாவும் (பூர்ணிமா) பாக்யராஜும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். ஒரு கட்டத்தில் படிப்புக்காக வெளிநாடு சென்று விடுகிறார் ராதா. ஆனால், அவள் ஞாபகத்திலேயே இருக்கிறார் ராஜா. ஊருக்குத் திரும்பும் ராதாவை ஒரு தலையாகக் காதலிக்கத் தொடங்குகிறார் ராஜா.பழைய ஞாபகங்கள் ஏதுமின்றி இருக்கும் ராதாவுக்கு அவர் அப்பாவின் நண்பர் மகன், சுமனுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பிறகு ராஜாவின் காதல் என்னவானது என்பதுதான் படம்.

எளிமையான கதைதான். ஆனால், பாக்யராஜின் திரைக்கதையும் காமெடியும் படத்தை அதிகம் ரசிக்க வைத்தன. படத்தின் கதை ஊட்டியில் நடந்தாலும் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது.சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தனர். புலமைப்பித்தன், முத்துலிங்கம், குருவிக்கரம்பை சண்முகம் பாடல்கள் எழுதினர். ‘அழகிய விழிகளில்’, ‘மைடியர்’, ‘ஓ நெஞ்சே நீதான்’ என மூன்று பாடல்கள். மூன்றும் வரவேற்பைப் பெற்றன.

‘அழகிய விழிகளில்’ பாடலில் பாக்யராஜும், பூர்ணிமாவும் 8 உடைகளில் விதவிதமாக வருவார்கள். அப்போது இது பேசப்பட்டது. அதே போல இதில் வரும் கராத்தே சண்டையும் பாராட்டப்பட்டது. அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் அப்போது பேசப்பட்டது. மலை மீது ஏறி பாக்யராஜ் தற்கொலை செய்யப் போகிறார் என்று நினைத்து ஆவேசமாக, ராஜா ராஜா என்று கத்திக்கொண்டு பூர்ணிமாவும், பாக்யராஜின் தங்கையும் ஓடி வர, மலைக்கு அந்தப் பக்கம் ஒரு சாலையைக் காண்பித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்திருப்பார், பாக்யராஜ். அந்த காலக்கட்டத்துப் படங்களின் கிளைமாக்ஸ், சீரியஸாக இருக்கும் நேரத்தில் இதன் காமெடி கிளைமாக்ஸ் அதிகம் ரசிக்கப்பட்டது.

மும்பையில் இருந்து வந்திருந்த பூர்ணிமா ஒரு முறை, கே.பாக்யராஜை சந்தித்து, உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கூறியிருக்கிறார். அதை மனதில் வைத்திருந்த பாக்யராஜ், இந்தக் கதைக்கு அவர் சரியாக இருப்பார் என்று அவரை நாயகி ஆக்கினார்.

கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கும்போது சீரியஸாக நடிக்க வேண்டிய பூர்ணிமா, சிரித்துவிட்டார். கோபமான பாக்யராஜ், அவரை எல்லோர் முன்பும்கடுமையாகத் திட்டினார். பூர்ணிமாவுக்கு அழுகையே வந்துவிட்டது. மூன்று நாள் கழித்து, ‘அது சோகமான காட்சி. அந்தக் காட்சியில நடிக்கும்போது அதே ஃபீல் இருக்கணும். அதனாலதான் திட்டினேன்’ என்றார் கே.பாக்யராஜ். இதை ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் பூர்ணிமா.

இதில் சிறுவயது பூர்ணிமாவாக நடித்த பேபி அஞ்சு, குழந்தை நட்சத்திரமாக, உதிரிப்பூக்கள், ரஜினியின் பொல்லாதவன் உட்பட பல படங்களில் நடித்தார். பிறகு நாயகியாக நடிக்கத் தொடங்கிய இவர், கன்னட நடிகர் டைகர் பிரபாகரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில், நடிகர் லிவிங்ஸ்டன் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக ஒரு காட்சியில் நடித்திருந்தார். பாண்டியராஜனும் சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.

விக்ரந்த் கிரியேஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள்தான், பாண்டியராஜன் இயக்குநராக அறிமுகமான ‘கன்னிராசி’ படத்தையும் தயாரித்தார்கள்.

1982-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தப் படம் வெளியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x