Published : 07 Nov 2023 08:50 AM
Last Updated : 07 Nov 2023 08:50 AM

‘ஜப்பான்’ மாதிரி கேரக்டரை பார்த்திருக்க முடியாது! - கார்த்தி நேர்காணல்

ஜப்பான் படத்தின் கார்த்தி

கார்த்தியின் ‘ஜப்பான்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ராஜு முருகன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடித்திருக்கிறார். சுனில், கே.எஸ்.ரவிகுமார், இயக்குநர் விஜய் மில்டன் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. படம் பற்றி கார்த்தியிடம் பேசினோம்.

‘ஜப்பான்’ யார்?

இந்தப் படத்து கேரக்டர் பெயர்தான் ஜப்பான். இந்த மாதிரி கேரக்டரை இதுவரை நான் சந்திச்சதே இல்லை. ஜப்பான் மாதிரி கதாபாத்திரத்தை அப்படி ஈசியா பார்த்திடவும் முடியாது. அவன் எப்ப என்ன பண்ணுவான், எப்படி நடந்துப்பான், என்ன பேசுவான்னு யாருக்கும் தெரியாது. இந்தப் படத்துல ஒவ்வொரு சீனும் கொண்டாட்டமா இருக்கும். ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

ராஜு முருகன்கிட்ட நீங்க கேட்டு வாங்கிய கதைன்னு சொன்னாங்களே?

ராஜூ முருகன் இயக்கத்துல நடிக்கணும்னு எனக்கு ஆசை. அதனால அவர்கிட்ட எனக்கு ஒரு கதை இருந்தா சொல்லுங்கன்னு கேட்டேன். நானா, இதுவரை எந்த இயக்குநர்கிட்டயும் போய், எனக்கொரு கதை சொல்லுங்கன்னு கேட்டதில்லை. அவர்கிட்ட கேட்டேன். ஏன்னா, அவர் எழுத்து எனக்குப் பிடிக்கும். ‘ஜோக்கர்’ படத்துல அவர் கொண்டு வந்திருந்த வாழ்க்கையையும் கதாபாத்திரங்களையும் நாம சந்திச்சிருக்கவே முடியாது. அந்த மாதிரி எழுத்துல நடிக்கணும்னு ஆசை. ‘தோழா’ படத்துல அவர் வசனம் எழுதினார். அப்ப அவரோட பழக முடிஞ்சது. அதுல அவர் வசனம் பேசப்பட்டது. இந்தப் படத்துலயும் அப்படித்தான், சிரீயஸா வசனம் எழுதியிருந்தார். ஆனா, ‘எனக்கு இது தாங்காது, சும்மா ஜாலியா பண்ணுவோம்’னு கேட்டேன். அப்படி உருவானதுதான் ஜப்பான்.

இந்தப் படத்துல ‘வாய்ஸ்’ மாத்தி பேசியிருக்கீங்களே?

இந்த கேரக்டரை படிச்ச பிறகு வேற மாதிரி பண்ணணும்னு நினைச்சேன். 24 படம் பண்ணியாச்சு. வெவ்வேற ஜானர்ல பண்ணியிருக்கேன். அதனால ஜப்பான் அப்படிங்கற கேரக்டரை, வழக்கமான கார்த்தி படத்துல இருந்து மாத்தணும்னு டைரக்டர் சொன்னார். முதல் டயலாக் பேசும்போது, இவ்வளவு கெட்டப் மாத்தியும் மறுபடியும் கார்த்தி மாதிரியே இருந்தது. உடனே பேச்சை மாத்தலாமா?ன்னு கேட்டேன். சரின்னு சொன்னார் டைரக்டர். சும்மா பேசி காட்டினேன். அது எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. இந்த கேரக்டருக்கு அது செட்டாகும்னு தோணுச்சு. அப்படித்தான் மாத்தினோம்.

'நெகட்டிவ் ஷேட்’ கொண்ட படங்கள் இப்ப அதிகமா வருது. ‘ஜப்பான்’ அந்த டெம்பிளேட் படம் மாதிரி தெரியுதே?

கண்டிப்பா இது, டெம்பிளேட் படமா இருக்காது. என்டர்டெயின்மென்ட் ஜானரா இருந்தாலும் ஒரு காட்சி கூட ‘இந்த சீன், இப்படித்தான் நகரப்போகுது, இந்தக் கதை இப்படித்தான் போகும்’ அப்படிங்கற எந்த டெம்பிளேட்டுக்குள்ளயும் இந்தப் படம் அடங்கலை. டிரெய்லர் பார்த்துட்டு இந்தப் படம் இப்படித்தான் இருக்கும்னு குறைவா மதிப்பிட்டா, தியேட்டருக்குள்ள வந்து ரொம்ப சந்தோஷப்படுவீங்க. அதுல வேற விஷயங்கள் இருக்கும்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் என்ன மேஜிக் பண்ணியிருக்கார்?

‘பொன்னியின் செல்வன்’ பண்ணும்போது அவர் நட்பு கிடைச்சது. சினிமா பற்றி நிறைய பேசுவோம். இந்தியில பல படங்கள் பண்ணினவர். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, ‘நம்ம கதையை இன்டர்நேஷனல் தரத்துல பண்ணணும், அப்ப அதுக்கு யார் சரியா இருப்பாங்க?’ன்னு பார்த்தோம். நல்ல கேமராமேன் நிறைய பேர் இருக்காங்க. ரவிவர்மன் மாதிரி ஒருத்தர் இருக்கும்போது அவரை ஏன் மிஸ் பண்ணணும்னு தோணுச்சு. அவர்கிட்ட கேட்டோம். ஒத்துக்கிட்டார். அவர் வந்த பிறகு படத்தோட ‘சைஸ்’ மாறுச்சு. நாம ஒன்னு கற்பனை பண்ணி வச்சிருப்போம். அதைத் தாண்டி வேறு ஒரு விஷூவல் அவரால படத்துக்குக் கிடைச்சிருக்கு.

20 வருட சினிமா அனுபவம் எப்படியிருக்கு?

ஒவ்வொரு படத்தையும் ரொம்ப அனுபவிச்சு பண்ணியிருக்கேன். ஏன்னா, இதுதான் வேணும்னு ஆசைப்பட்டு இந்த பீல்டுக்குள்ள வந்திருக்கேன். யாரும் என்னை பிடிச்சு இதுக்குள்ள தள்ளி விடலை. அதனால ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து பண்ணியிருக்கேன். இதுல மக்கள் அன்பு கிடைக்கிறதுதான் பெரிய விஷயம். நீங்க எவ்வளவு வேணாலும் உழைக்கலாம். ஆனா, அவங்க அங்கீகாரம் இல்லைன்னா, ஒண்ணுமே செய்ய முடியாது. அது எனக்கு கிடைச்சது ஆசிர்வாதம்தான். இந்த வாழ்க்கையே ஒரு ஆசிர்வாதம்தான் .

இந்த 20 வருடங்கள்ல 25 படங்கள்தான் பண்ணியிருக்கீங்க.. அதிக படங்கள்ல நடிச்சிருக்கலாமே?

நான் படிச்சதுக்கும் பண்ற வேலைக்கும் சம்பந்தமில்லை. ஆனா, எனக்குப் பிடிச்ச வேலையை பண்றேன். எனக்கு என்ன பிடிக்குதோ அதையே நான் பண்றதால, அதுல ஒரு நாளும் ‘காம்ப்ரமைஸ்’ இருக்கவே கூடாதுன்னு நினைப்பேன். அதனால எனக்கு பிடிச்சது கிடைக்கிற வரைக்கும் நல்ல கதைகளுக்காக காத்திருப்பேன். அதனால அதிக படங்கள் பண்ண முடியலை.

இயக்குநர் கார்த்தியை எப்ப பார்க்கலாம்?

என்ன ரொம்ப சாதாரணமா கேட்டுட்டீங்க? அது அவ்வளவு ஈசியான விஷயம் இல்லை. அதுல கிரியேட்டிவிட்டியை வெளிப்படுத்த அவ்வளவு விஷயங்கள் இருக்கு. அந்த ஆசையை அப்பப்ப தீர்த்துட்டுதான் இருக்கேன். கோ டைரக்டரா, உதவி இயக்குநரா என் படங்கள்ல ஒர்க் பண்றேன். என்னைக்கு என் மேல நம்பிக்கை வருதோ அப்ப படம் இயக்குவேன். கார்த்தியின் ‘ஜப்பான்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ராஜு முருகன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடித்திருக்கிறார். சுனில், கே.எஸ்.ரவிகுமார், இயக்குநர் விஜய் மில்டன் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. படம் பற்றி கார்த்தியிடம் பேசினோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x