Published : 07 Nov 2023 08:35 AM
Last Updated : 07 Nov 2023 08:35 AM

மனோன்மணி | ஹீரோ, ஹீரோயினை தேர்ந்தெடுத்த மக்கள்!

தமிழ்த் திரைத்துறையில், படத்தின் தலைப்புகளை ரசிகர்களிடம் கருத்துக் கேட்டு வைத்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், மக்களிடம் கருத்துக்கேட்டு ஹீரோ கதாநாயகியைத் தேர்வு செய்ததைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? 1940-களிலேயே பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து இதைச் செய்திருக்கிறது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், இதன் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய, ‘மனோன்மணி’ படத்துக்காக. உலகத் திரையுலக வரலாற்றில் இப்படி விளம்பரம் செய்து ஹீரோ, ஹீரோயினை தேர்வு செய்த ஒரே நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்.

பெரும்பான்மை விருப்பத்தின் அடிப்படையில் பி.யு.சின்னப்பா, தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னி டி.ஆர்.ராஜகுமாரி இந்தப் படத்துக்கு நாயகன், நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுடன் செருகளத்தூர் சாமா, டி.எஸ். பாலையா, ஆர்.பாலசுப்பிரமணியம், டி.ஆர்.மகாலிங்கம், கே.கே.பெருமாள், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.ராஜகுமாரி, ஏ.சகுந்தலா, டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் உட்பட பலர் நடித்தனர். சுந்தரம் பிள்ளை எழுதி 1892-ல் வெளியான ‘மனோன்மணீயம் ’நூலைத் தழுவி உருவான படம் இது.

இந்தக் கதைக்கு டி.வி.சாரி வசனம்எழுதினார். சேர நாட்டின் மன்னன் புருஷோத்தமன் (பி.யு.சின்னப்பா). அவரின் எதிரியான பாண்டிய மன்னன்சீவகன் (கே.கே.பெருமாள்), திருநெல்வேலியில் தனது மகள் மனோன்மணியுடன் (டி.ஆர்.ராஜகுமாரி) வாழ்ந்து வருகிறார். அவருக்கு உதவுகிறார் குலகுருவான சுந்தரமுனிவர் (செருகளத்தூர் சாமா). இதற்கிடையே கனவில் சேர இளவரசனைக் கண்டு காதல் வருகிறது மனோன்மணிக்கு. அதே போல சேர இளவரசனின் கனவிலும் வருகிறார் மனோன்மணி. இந்நிலையில் மனோன்மணியைத் திருமணம் செய்துகொள்ள இளவரசனுக்குத் தூதனுப்புகிறார்கள். ஆனால் தூதுவனாகச் செல்லும் பாண்டியனின் அமைச்சர் குடிலனின் மகன் பலதேவன் (டி.எஸ்.பாலையா) சேரனைத் தூண்டிவிட்டுப் போருக்கு இழுக்கிறார். மோதலில் பாண்டியன் தோற்கிறார். இதற்கிடையே மனோன்மணிக்கும் பலதேவனுக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு நடக்கிறது. சேரன் தனது கனவில் தோன்றிய காதலியைக் கண்டுபிடித்து திருமணம் செய்தாரா? இல்லையா என்பதுதான் படம்.

பாபநாசம் ராஜகோபால் ஐயர், வேல்சாமி கவி எழுதிய பாடல்களுக்கு டி.ஏ. கல்யாணம் இசை அமைத்தார். உதவி, கே.வி.மகாதேவன். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் பாடிய ‘ஊன்னு ஒரு வார்த்தை சொல்லம்மா’ என்ற பாடல் அப்போது பிரபலம். மொத்தப் படத்தையும் தங்கள் நடிப்பால் கட்டிப் போட்டிருந்தார்கள் பி.யு.சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும்.

அந்தக் காலத்திலேயே 2 லட்சம் ரூபாய் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து இருக்கிறார்கள், பிரம்மாண்டமாக. படத்தின் போர்க்காட்சிகள் ஏற்காடு மலையடிவாரத்தில் படமாக்கப்பட்டன. இதில் 2 ஆயிரம் துணை நடிகர்கள் நடித்தனர். இவர்களுக்கான உணவு அண்டாக்களில் தயாரிக்கப்பட்டு, மாட்டு வண்டிகளில் ஏற்காடுமலையடிவாரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதைப் பரிமாற மட்டும் நூறு பேர் அமர்த்தப்பட்டார்களாம். போர் வீரர்களாக நடித்தவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் மூன்றுஅணா. ஆறு கேமராக்களில் படமாக்கி இருக்கிறார்கள், இந்தப் போர்க்காட்சியை.

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களின் டைட்டில்களை ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாகக் காட்டுவது வழக்கம். இதில், கோயில் மணி அடிக்கும்போது, அதாவது ஒவ்வொரு அடி விழும்போதும் படத்தின் டைட்டில் வார்த்தைகள் வருவது போல அமைத்திருப்பார்கள். பி.யு.சின்னப்பாவின் மனைவி ஏ.சகுந்தலா இதில், கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரியின் தோழியாக நடித்தார். 1942-ம் ஆண்டில் இதே தேதியில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x