Published : 25 Aug 2023 09:32 AM
Last Updated : 25 Aug 2023 09:32 AM

’கடைசி விவசாயி’-க்கு 2 தேசிய விருதுகள் - நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் மணிகண்டன்

சென்னை: ’கடைசி விவசாயி’ படத்துக்கு இரண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து இயக்குநர் மணிகண்டன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. இதில் விவசாயியாக நடித்த நல்லாண்டி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்திருந்தனர். அழுத்தமான திரைக்கதையால் விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பே நல்லாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்.

டெல்லியில் நேற்று (ஆக 24) அறிவிக்கப்பட்ட 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் ‘கடைசி விவசாயி’ இரண்டு பிரிவுகளில் விருது வென்றுள்ளது. ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதையும் ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது. பார்க்க > முழு பட்டியல்

இந்த நிலையில் இதற்கு இயக்குநர் மணிகண்டன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கடைசி விவசாயி’ படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும் இந்நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசி விவசாயி படத்தில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்கதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டி அவர்களுக்கும், இப்படத்தினை உருவாக்க மிகப்பெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7 சிஎஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனங்களுக்கும், இந்தப் படத்தினை உருவாக்க உறுதுணையாகவும் இருந்து, சிறப்பாக நடித்தும் கொடுத்த விஜய் சேதுபதிக்கும், சக தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இதுபோல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு மணிகண்டன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x