Published : 14 Dec 2017 01:21 PM
Last Updated : 14 Dec 2017 01:21 PM

ட்ஜம்-இசையும் பயணமும்!

கிரீஸுக்கு அருகே உள்ள ஒரு தீவில் வாழும் ட்ஜம் எனும் இளம்பெண்ணின் பயணமே ட்ஜம் திரைப்படத்தின் கதை. தனது வளர்ப்புத் தந்தைக்காக துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லிற்கு செல்லும் ட்ஜம் அங்கிருந்து கீரிஸிக்கு எப்படி திரும்பி வருகிறாள். துருக்கியில் அவள் என்னவெல்லாம் சந்தித்தாள், வரும் பாதையில் அவளது அனுபவங்கள் என்ன என்று ஒரு அழகான பயணத்தை திரையில் தந்திருக்கிறார் இயக்குநர் டோனி கட்லிஃப்.

பயணம் சார்ந்த கதைகளில் இருந்து சற்றே மாறூபட்டு படணம் நெடுக இசையையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார் இயக்குநர். அதனாலயே ட்ஜம் திரைப்படம் ஒரு அற்புதமான அனுபவத்தைத் தருகிறது.

முதல் காட்சியிலேயே ட்ஜம் எனும் இளம்பெண்ணின் குணங்களை சில ஷாட்களிலேயே நமக்குச் சொல்லி விடுகிறார். அதிலிருந்து அந்த இசைப் பயணம் ஆரம்பிக்கிறது. மிகவும் சுதந்திரமாக இயங்குகிறாள் ட்ஜம். அவளுக்கு மிகவும் பிடித்த இசையையும் நடனத்தையும் எந்நிலையிலும் விட்டுத்தராமல் இருக்கிறாள். எல்லோருக்கும் உதவுகிறாள். எளிதாக அவளிடம் பழகிவிட முடியும். இப்படியான கதாபாத்திரம் பயணம் மேற்கொண்டால் கொண்டாட்டங்களுக்குப் பஞ்சம் இருக்காதுதானே?

இஸ்தான்புல்லில் அவ்ரில்லை சந்திக்கிறாள். அவளுக்கு உதவி செய்து அவளையும் தன்னுடைய பயணத்தில் இணைத்துக்கொள்கிறாள். அவ்ரில்லோ பிரான்ஸைச் சேர்ந்தவள். சிரிய அகதிகளுக்காக உதவி செய்ய தொண்டு நிறுவனத்தின் மூலம் வந்த அவ்ரில் சில பிரச்சினைகளால் எல்லாவற்றையும் இழந்துவிட்டாள்.

போராட்டங்களினால் போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்ட நேரத்திலும் ட்ஜம் தனது பயணத்தைத் தொடர்கிறாள். பயணத்தின் நெடுகே அவள் சந்திக்கும் மனிதர்கள், போகும் இடங்கள் யாவும் ஒரு முக்கியமான அரசியலை, அம்மக்களின் சமூக பொருளாதார நிலையை நமக்கு உணர்த்துகிறது. கிரீஸில் ஏற்பட்ட நிதி நெருக்கடி பிரச்சினையையும், ஐரோப்பாவில் உள்நாட்டுப் போரினால் நிகழும் அகதிகள் இடம்பெயர்வையும் இந்தப் பயணத்தின் வழியே நுட்பமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

படம் முழுக்கப் பயணத்தின் கூடவே வருவது இசை. மிகப் பழமையான பாரம்பரிய இசையான ரிபெட்டிக்கோ எனும் இசையைப் படம் முடுக்க பயன்படுத்தியுள்ளனர். பயணத்தின் பல இடங்களில் ட்ஜம் பாடுகிறாள், ஆடுகிறாள். படம் முடிந்த பிறகும் அந்த இசை நமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தப் பயணமும் இசையும் நம்மை வசீகரித்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும். பழமையான இசைக்கு தனது சொந்த வார்த்தைகளைப் போட்டு பாடும் ட்ஜம்மின் பாடல்கள் சிரிப்பை வரவழைத்தாலும் அவளுக்கு இசை மீதும் சுதந்திரத்தின் மீதும் இருக்கும் தீராத நேசத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு முறை பாடும்போதும் அதனை அவள் உணர்த்துகிறாள்.

ட்ஜம் தனது தாத்தாவின் கல்லறையில் செய்யும் செயல், தண்டவாள இரவில் கும்பலாகப் பாடும் காட்சி, ஹோட்டல் ஓனரிடம் பொய் சொல்வது என நிறைய ரகளையான காட்சிகள் இருக்கின்றன. ட்ஜம்மின் குறும்புத்தனமும் அவலது இசை போலவே நம்மை ரசிக்க வைக்கிறது.

கிரீஸின் விதிகளில் நடக்கும்போது காட்டப்படும் கைவிடப்பட்ட நகரங்கள், வறண்டு கிடக்கும் பூமி, தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் அந்த இளைஞன், கடைசிக்காட்சியில் ட்ஜமின் வார்த்தைகள், கைவிடப்பட்ட படகுகள் என ஐரோப்பாவின் நிதி நெருக்கடி, அகதிகள் இடம்பெயர்வு ஆகிய பிரச்சினைகளை மிகத் தீவிரத்தன்மையோடு நமக்கு கடத்துகின்றன. கடைசிக் காட்சியில் ட்ஜம் சொல்லும் ஒரு வசனம் இதற்கு உதாரணம், உங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கை வைக்க வேண்டாம் என சொல்லுங்கள், ஏனென்றால் எங்களது எல்லா நம்பிக்கையையும் அரசு சுக்குநூறாக்கிவிட்டது. இனி நம்பிக்கைக்கு இடமில்லை என தலைமுறைகளின் பிரச்சினையை அழுத்தமாக சொல்கிறார் இயக்குநர்.

இசையின் மீதும் சுதந்திரத்தின் மீதும் தீராக்காதல் கொண்ட ட்ஜம் எனும் இளம்பெண்ணின் பயணத்தின் வழியே ஐரோப்பியாவின் இன்றைய நிலையை படம்பிடித்துக் காட்டியதில் ட்ஜம் அருமையான திரைஅனுபவமாக இருக்கும். மனிதர்களின் இருத்தலியலின் சுதந்திரத்தை கலை மீதான நேசத்தை ட்ஜம் நமக்கு சொல்கிறது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x