Published : 31 Oct 2022 01:49 PM
Last Updated : 31 Oct 2022 01:49 PM

நில அளவர், உதவி வரைவாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி தகவல்

கோப்புப்படம்

சென்னை: நவ.6-ம் தேதியன்று நடைபெறவுள்ள நில அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 18/2022, நாள் 29.07.2022-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நில அளவர் மற்றும் வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் மற்றும் உதவி வரைவாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு 06.11.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் நில அளவையாளர் (798), வரைவாளர் (236), அளவர் மற்றும் உதவி வரைவாளர் (55) என 1,089 காலிப்பணியிடங்களை நிரப்புவற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது. இதற்கான எழுத்துத் தேர்வு நவ.6-ல் நடக்கிறது. காலையில் முதல்தாள் தேர்வும், மதியம் 2-ம் தாள் தேர்வும் நடைபெறும். www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் வழியாக ஆக.27-க்குள் விண்ணப்பிக்கவும், விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்ய செப்.1 முதல் 3-வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

முதல்தாள் 300 மதிப்பெண்ணுக்கும், 2-ம் தாளில் தமிழ் தகுதித் தேர்வு 150 மதிப்பெண்ணுக்கும், பொதுப் பாடம் 150 மதிப்பெண்ணுக்கும் நடக்கும். தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் கட்டாயம் என்று அறிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x