Last Updated : 06 Feb, 2024 04:04 PM

 

Published : 06 Feb 2024 04:04 PM
Last Updated : 06 Feb 2024 04:04 PM

தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தொழில்நுட்ப பயிற்சி: அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு மீன்பிடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமி பதி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 32 மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விபத்து காப்புறுதி நிவாரண தொகை ரூ.64 லட்சம், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் குளிர் காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வண்ண மீன் வளர்ப்பு மேற்கொள்ள 60 சதவீத மானியத்தில் 1 பயனாளிக்கு ரூ.15 லட்சம் மானியத் தொகை என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: “மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றபோது காணாமல் போன 205 மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்குவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். மீனவர் நலன் காக்கும் வகையில் மீன்வளத் துறையை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று மாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ராமநாதபுரத்தில் மீனவர்களுக்கான மாநாட்டினை நடத்தினார். அந்த மாநாட்டில் மீனவர்களின் பிரச்சினைகளை களைவதற்கு 10 வாக்குறுதிகளை அளித்தார். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கியுள்ளார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர், மணப்பாடு உட்பட தமிழ்நாடு முழுவதும் தூண்டில் வளைவுகள், தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான பணிகளை செய்ய வழிவகுத்துள்ளார். அதேபோல் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் 5,035 மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் பல பேரை காப்பாற்றிய மீனவர்களுக்கு நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளோம். மழை வெள்ளத்தால் படகுகள், என்ஜின்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சில தினங்களில் இந்த நிவாரணம் வழங்கப்படும்.

மீனவர்களுக்கு மீன்பிடித் தொழில் நுட்பம் தொடர்பாக மீன்வளக் கல்லூரி மூலம் சான்றிதழ் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை பெறும் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் உள்ளிட்ட இடங்களில் வேலைவாய்ப்பு பெற முடியும். இந்த பயிற்சி விரைவில் தூத்துக்குடி மாவட்டம் அமலிநகரில் தொடங்கி வைக்கப்படும். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் உள்பட தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மீனவர்களை நேசிக்கின்ற அரசாக, பாதுகாக்கின்ற அரசாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விளங்கி வருகிறது. எனவே, அவருக்கு துணையாக நீங்கள் இருக்க வேண்டும்" என அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர்கள் கு.அ.புஷ்ரா ஷப்னம், தி.விஜய ராகவன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் அலுவலர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x