அமெரிக்க டாலர் ‘ஆதிக்கம்’ சிறுக சிறுக சரியத் தொடங்கிவிட்டதா? - ஒரு தெளிவுப் பார்வை

அமெரிக்க டாலர் ‘ஆதிக்கம்’ சிறுக சிறுக சரியத் தொடங்கிவிட்டதா? - ஒரு தெளிவுப் பார்வை
Updated on
2 min read

உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு என்ற பட்டியலில், ஏற்கெனவே அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்தைப் பிடித்துவிட்டது.

உலக வங்கியின் கணிப்புபடி, வாங்கும் திறன் சமநிலையின் (PPP) அடிப்படையில் சீனா 41.26 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரமாக முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், அமெரிக்கா 30.77 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரமாகச் சரிந்துவிட்டது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சர்வதேச வர்த்தகத்திலும் நிதிமுறையிலும் அமெரிக்க டாலர்தான் கோலோச்சுகிறது. டாலரின் இந்த ஆதிக்கம் இன்னும் எத்தனை காலத்துக்குத் தொடரும் என்ற கேள்வி தற்போது எழுகிறது.

இது குறித்துக் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் பேரி எய்ச்சன் கிரீன் ‘மணி பியாண்ட் பார்டர்ஸ்’ (Money Beyond Borders) என்ற நூலில், டாலரின் ஆதிக்கம் குறைவது குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

ஆந்தை நாணயம்

நாணயங்களின் வரலாற்றைப் பார்த்தால், இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஒரேயொரு கரன்சிதான் சர்வதேச வர்த்தகத்தில் கோலோச்சி வருகிறது. அது அமெரிக்க டாலர் மட்டும்தான்.

சர்வதேச அளவில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் ஏதென்ஸின் ‘ஆந்தைகள்’ நாணயங்களே ஆகும். கி.மு. 117-ல் ரோமானியப் பேரரசின் நாணயங்கள் சர்வதேச நாணயமாகத் திகழ்ந்தன. கி.மு. 5-ம் நூற்றாண்டில், பிரிட்டன் முதல் இந்தியா வரையிலான வர்த்தகத்துக்கு பைசான்டைன் தங்க ‘சொலிடஸ்’ நாணயம் பயன்படுத்தப்பட்டது.

அதன்பின் ஸ்பெயினின் ‘ரியால்’ நாணயம் முதன்முதலில் சர்வதேச கரன்சியாக மாறியது. 18-ம் நூற்றாண்டுக்குப் பின்பு பிரிட்டனின் ‘பவுண்ட் ஸ்டெர்லிங்’ சர்வதேச கரன்சி என்ற பெயரைப் பெற்றது. சர்வதேச வர்த்தக மையமாக பிரிட்டன் இருந்தது. அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார முன்னேற்றம், காலனி ஆதிக்கம் ஆகியவற்றால் பிரிட்டன் ‘பவுண்ட் ஸ்டெர்லிங்’ நம்பிக்கையைப் பெற்றது.

டாலரின் எழுச்சியும் காரணங்களும்

இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்வதேச நிதி அமைப்பைத் திட்டமிடுவதற்காக, 1944-ம் ஆண்டில் அமெரிக்காவில் ‘பிரெட்டன் வுட்ஸ்’ மாநாடு கூட்டப்பட்டது. இதில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரில் நிர்ணயிக்கப்பட்டு மற்ற நாணயங்கள் டாலருடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் டாலரின் ஆதிக்கம் வலுப்படுத்தப்பட்டது.

இப்போது சர்வதேச வர்த்தகத்தில் 40 சதவீதப் பொருட்களின் விலையை டாலர்தான் நிர்ணயிக்கிறது. பொருளாதார வல்லுநர் எய்ச்சன்கிரீன் குறிப்பிடுகையில், “ஒரு நாணயத்தை வெளியிடும் நாடு பொருளாதார ஆதிக்கத்தை இழந்த பிறகும், அந்த நாணயம் நீண்ட காலத்துக்கு தனது அந்தஸ்தைத் தக்கவைக்கும்” என்கிறார்.

டாலர் ஆதிக்க காரணங்கள்:

> டாலருக்குப் பதிலாகப் பயன்படுத்தத் தக்க வலுவான மாற்று நாணயங்கள் இல்லாதது.

> அமெரிக்காவின் வலுவான நிதி நிர்வாகம் மற்றும் சர்வதேச நாடுகளின் நம்பிக்கை.

> உலக நாடுகளுடன் அமெரிக்கா வைத்துள்ள அரசியல், பொருளாதார உறவுகள்.

> யூரோ மற்றும் சீனாவின் யுவான் ஆகியவற்றின் குறைந்த சர்வதேசப் பயன்பாடு.

உலகளாவிய அந்நியச் செலாவணி கையிருப்பில் 57 சதவீதமும், பரிவர்த்தனைகளில் 90 சதவீதமும் டாலரின் பங்களிப்பாகவே உள்ளது.

ஆதிக்கத்தை இழக்கிறதா டாலர்?

அமெரிக்காவின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுந்து, மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பை பிற முதலீடுகளாக மாற்றும்போது ஆதிக்கம் குறையும். பிரிக்ஸ் (BRICS) நாடுகள் தங்களுக்குள் சொந்த நாட்டு கரன்சியில் வர்த்தகம் செய்ய முன்வந்துள்ளன. டிஜிட்டல் சொத்துகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களும் டாலர் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும்.

அமெரிக்காவின் ஜே.பி.மோர்கன் வங்கியின் தலைவர் ஜேமி டைமன் கூறுகையில், “அடுத்த 25 ஆண்டுகள் வரை அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ மேலாதிக்கத்தைத் தக்கவைக்கத் தவறினால், டாலர் தன் ‘கையிருப்பு கரன்சி’ அந்தஸ்தை இழக்கக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டாலர் சரிவுக்கான முக்கிய உந்து சக்திகள்

டொனால்டு ட்ரம்ப் காலத்தில் அமெரிக்கா திடீரென எதிரி நாடுகள் மீது வரிகளை விதிப்பதும், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவதும் நம்பிக்கையைக் குறைக்கின்றன.

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அமெரிக்க அதிபர் தலையிட முயல்வதும் கரன்சிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

அமெரிக்க அரசின் அதிகரித்துவரும் கடன், மத்திய கிழக்கு ஒப்பந்த முறிவுகள் மற்றும் போர்களினால் ஏற்பட்ட நிதிச்சுமை ஆகியவை அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளன.

சீனா தனது நாணய மாற்று விகிதத்தை நெகிழ்வுடையதாக வைத்துள்ளது. வளைகுடா நாடுகளும் அமெரிக்க டாலரைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க உள்நாட்டில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளன.

2000-ம் ஆண்டில் உலக நாடுகளின் கையிருப்பு சொத்தில் 70 சதவீதமாக இருந்த டாலர், தற்போது 55 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது, மாஸ்கோவின் 300 பில்லியன் டாலர் சொத்துகளை அமெரிக்கா முடக்கியது. டாலர் கேடயமாக இல்லாமல் வாளாக மாறியதை உணர்ந்த சீனா மற்றும் வளைகுடா நாடுகள் எச்சரிக்கை அடைந்துள்ளன.

சீனாவின் அந்நியச் செலாவணி இருப்பு 4 டிரில்லியனிலிருந்து 3.3 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. உலக நாடுகள் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை உயர்த்தி வருகின்றன. மாறாக, டாலரின் அளவைக் குறைத்து வருகின்றன. தங்கம் சர்வதேச அளவில் எளிதாகப் பணமாக மாற்றக்கூடியது என்பதால், அதன் கையிருப்பை அதிகப்படுத்துவதும் டாலரின் முக்கியத்துவத்தைக் குறைக்கும்.

அமெரிக்க டாலர் ‘ஆதிக்கம்’ சிறுக சிறுக சரியத் தொடங்கிவிட்டதா? - ஒரு தெளிவுப் பார்வை
‘கல்’ ட்ரோன் - உலக ஆயுதச் சந்தையில் இந்தியாவின் புதிய ‘பிரம்மாஸ்திரம்’!
அமெரிக்க டாலர் ‘ஆதிக்கம்’ சிறுக சிறுக சரியத் தொடங்கிவிட்டதா? - ஒரு தெளிவுப் பார்வை
அருணாச்சலில் 27 இடங்கள் இந்திய வரைபடத்தில் முறைப்படி பதிவு: சீனா சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in