

‘உலகிலேயே அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா’ என்ற நிலையே இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்த நாடு இன்று அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 62.66% அதிகமாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு முக்கியக் காரணம், இந்தியாவின் உள்நாட்டு ஆயுத அமைப்புகளின், குறிப்பாக ‘பிரம்மோஸ்’ ஏவுகணையின் மகத்தான வெற்றிதான். இதே நிலை நீடித்தால், உள்நாட்டிலேயே தயாரித்த, நீண்ட தொலைவு சென்று தாக்கும் தற்கொலைப்படை ‘கல்’ (KAL) ட்ரோன் விமானங்களையும் இந்தியா விரைவில் ஏற்றுமதி செய்யும். இந்த ட்ரோன்களை ஒடிசாவைச் சேர்ந்த ‘ஐஜி டிஃபென்ஸ்’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்துள்ளது.
‘கல்’ (KAL) ட்ரோன் என்றால் என்ன?
ஒடிசாவைச் சேர்ந்த ஐஜி டிஃபென்ஸ் நிறுவனம் தயாரித்த ஆளில்லா தாக்குதல் விமானம்தான் ‘கல்’. இது ஒருமுறை இலக்கைத் தாக்கி, தன்னையும் அழித்துக்கொள்ளும் தற்கொலைப்படை வகையைச் சேர்ந்த ட்ரோன் ஆகும். ஈரானின் ‘ஷாஹேத்’ மற்றும் அமெரிக்காவின் ‘லூகாஸ்’ ட்ரோன்களின் வரிசையில் இந்தியாவின் ‘கல்’ ட்ரோனும் சேரும் எனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
தாக்குதல் எல்லை: இந்த கல் ட்ரோன்கள் 1,000 கி.மீ தொலைவு வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கவல்லது.
பறக்கும் நேரம்: தொடர்ச்சியாக 7 முதல் 8 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்டது.
வேகம்: மணிக்கு 160 கி.மீ முதல் அதிகபட்சமாக 200 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது.
சுமை திறன்: 50 கிலோ வரை வெடிபொருட்களைச் சுமந்து செல்லும்.
பறக்கும் உயரம்: கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 5,000 மீட்டர் உயரம் வரை பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம்: இதில் தனக்குத் தானே வழிகாட்டக்கூடிய மேம்பட்ட ‘நேவிகேஷன்’ மற்றும் வரைபட வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதனால், ட்ரோன் இயக்கப்பட்டவுடன் இலக்கை நோக்கி அதுவே பாதையைக் கண்டறிந்து பறக்கும்.
ஒரு நாட்டின் உள்கட்டமைப்புகள், ரேடார் தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வலுவூட்டப்பட்ட இலக்குகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன் ‘கல்’ ட்ரோனுக்கு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளை ஈர்க்கும் கல் ட்ரோன்கள்
கல் ட்ரோன் முறைப்படி சந்தைப்படுத்தப்படும் முன்பே, பல்வேறு வளைகுடா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் இதைக் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
ஐஜி டிஃபென்ஸ் நிறுவனம் கூறுகையில், “வளைகுடா பகுதியில் உள்ள ஏராளமான நாடுகள், கல் ட்ரோன்களைக் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டியுள்ளன. மேற்கு ஆசியாவில் ஈரான், அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்த பின், இப்போது இந்த வகை நீண்ட தொலைவு ட்ரோன்களுக்குக் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் முடிவாகும் நிலையில் இருக்கிறது.
அனைத்தும் மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் அனுமதிக்குப் பின்புதான் நடக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை பெரும்பாலும் நட்பு நாடுகளுக்கே கொடுக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்தனர்.
பிரம்மோஸ் ஏவுகணையின் வெற்றி
பிரம்மோஸுக்கு அடுத்தபடியாக, மிக அதிக அளவில் ஏற்றுமதியாகும் இந்திய ஆயுதமாக ‘கல்’ ட்ரோன் இருக்கும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
பிரம்மோஸ் ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ (DRDO)-வும், ரஷ்யாவின் என்பிஓ மஷினோஸ்ட்ரோனியா (NPO Mashinostroyeniya) நிறுவனமும் இணைந்து தயாரித்தன.
‘சூப்பர்சோனிக்’ வகையைச் சேர்ந்த பிரம்மோஸ், ஒலியை விட அதிவேகமாகச் செல்லக்கூடியது. துல்லியமாக இலக்கை அழிக்கும் திறன், எந்தத் தளத்தில் இருந்தும் ஏவக்கூடிய வசதி ஆகியவை இருப்பதால், இந்தியாவுக்கு அதிக ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கின்றன. ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பிரம்மோஸின் செயல்பாட்டைப் பார்த்து பல்வேறு நாடுகளும் இதன் வலிமையைப் புரிந்து கொண்டுள்ளன.
2022-ஆம் ஆண்டில் பிரம்மோஸ் ஏவுகணையைப் பிலிப்பைன்ஸ் நாடு 375 மில்லியன் டாலருக்கு வாங்க இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்தது. அதைத் தொடர்ந்து வியட்நாம் அரசும் ஒப்பந்தம் செய்தது. இந்த ஆண்டு ஜூலையில் இந்தோனேசியாவும் பிரம்மோஸை வாங்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் தென் கொரியா, அல்ஜீரியா, கிரீஸ், எகிப்து, வெனிசுலா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிலி ஆகிய நாடுகளும் பிரம்மோஸை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
ராணுவத் தளவாட ஏற்றுமதியில் புரட்சி
இறக்குமதியாளர் என்ற நிலையில் இருந்து ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது. இந்தியா தற்போது 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது.
பிரம்மோஸ், பினாகா ராக்கெட் லாஞ்சர்கள், ஸ்வாதி ரேடார்கள், ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏஎல்ஹெச் துருவ் ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்துப் படகுகள் எனப் பல பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
வரும் 2029-30 நிதியாண்டுக்குள், இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை ரூ.50,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘கல்’ ட்ரோன் போன்ற புதிய உள்நாட்டு ஆயுதங்களின் ஏற்றுமதி மூலம் இந்த இலக்கை இந்தியா மிக எளிதாக எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.