குடிமக்கள் வங்கிக் கணக்கில் ரூ.30,000 - தைவான் அரசு வாரி வழங்குவது ஏன்?

குடிமக்கள் வங்கிக் கணக்கில் ரூ.30,000 - தைவான் அரசு வாரி வழங்குவது ஏன்?
Updated on
3 min read

ஒரு நாட்டின் அரசாங்கம் தனது குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.30,000 பணத்தை டெபாசிட் செய்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? இதற்காக எந்தக் கடனும் வாங்காமல், தனது வருவாய் உபரியில் இருந்து அதை  வழங்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா?\

வரி வருவாயிலும், தொழில்நுட்பத்தினால் கிடைத்த லாபத்திலும்  ஈட்டிய ‘உபரி நிதி’-யை மக்களுக்கே திரும்பக் கொடுக்கும் ஒரு நாட்டைக் காண்பது மிகவும் அரிது. கிழக்கு ஆசியாவின் சிறிய தீவு நாடான தைவான், செயற்கை நுண்ணறிவு மூலம் பெற்ற அசுர லாபத்தை மக்களுக்கே பகிர்ந்தளித்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு நாடு தனது மக்கள் நலனுக்காக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதற்கு தைவான் அரசு எழுதியிருக்கும் புதிய வரலாற்று விளக்கம் இது. இது ‘இலவசம்’ இல்லை... ஒரு நாட்டின் அபாரமான ‘பொருளாதார வளர்ச்சி’யின் உச்ச அடையாளம்!

தைவான் பொருளாதார அதிசயம்

பசிபிக் பெருங்கடலில், சீனக் கண்டத்தின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்த குட்டி தீவுதான் தைவான். சீனாவில் இருந்து பிரிந்தாலும், தங்களை தனி தேசம் என்று தைவான் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால், தைவான் தங்கள் ஆளுகைக்கு உட்பட்டது என்று சீனா இப்போதும் கூறி வருகிறது. இது அரை நூற்றாண்டுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே  மோதலாக நீடிக்கிறது.

1960-களில் விவசாய நாடாக இருந்த தைவான், இன்று உலகின் 22-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இதைப் ‘பொருளாதார அதிசயம்’ (Taiwan Miracle) என்பர்.

தைவானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 76 சதவீதம் ஏற்றுமதிதான். 2025-ம் ஆண்டில் தைவானின் மொத்த வர்த்தகம் 1.12 டிரில்லியன் டாலர்கள். செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஏற்றுமதி ஆகியவைதான் தைவானின் ஏற்றுமதியில் 80 சதவீதம் அடங்கியுள்ளது.

2026-ல் தைவானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 979.72 பில்லியன் டாலர்கள் எனவும், மக்களின் தனிநபர் வருவாய் 42,103 டாலராகவும் இருக்கிறது என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

2026-ம் ஆண்டில் தைவானின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 11.05 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பின்னணியில் தைவான் ஒரு வலுவான தூணாக நிற்கிறது. உலகின் மிக மேம்பட்ட செமிகண்டக்டர் உற்பத்தி மையம் தைவானில்தான் உள்ளது.

டிஎஸ்எம்சி (TSMC) போன்ற ராட்சத நிறுவனங்கள் உலகின் அதிநவீன சிப்களை தயாரிக்கின்றன. ஆப்பிள், விடியா, ஏஎம்டி, மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தைவானை மட்டுமே நம்பியிருக்கின்றன. சீனா, அமெரிக்கா இரு நாடுகளும் தங்களின் செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுக்கு 80 சதவீதம் தைவானையே நம்பியுள்ளன.

இது தவிர செயற்கை நுண்ணறிவு சேவையகங்கள், கிளவுட் கம்யூட்டிங், மின்னணு பொருட்களுக்கான தேவையால், தைவானின் ஏற்றுமதியும், ஏற்றுமதி வரி வருவாயும் அபரிமிதமாக அதிகரித்துள்ளது.

மக்களுக்கான இன்ப அதிர்ச்சி:

தைவான் அரசுக்குக் கிடைத்த கூடுதல் உபரி வருவாய் நிதியில் 7.14 பில்லியன் டாலரை ஒதுக்கி, குடிமக்கள், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களின் வெளிநாட்டுத் துணைவர்கள் (கணவன் - மனைவி) என ஒவ்வொருவருக்கும் 314 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.30,000) வழங்கப்பட இருக்கிறது.

தைவான் அதிபர் லாய் சிங் டீ விடுத்த சிறப்பு அறிவிப்பில், “அடுத்த ஆண்டில் (2027) தைவான் மக்கள் ஒவ்வொருவருக்கும் 314 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதால் அதன் பலன் மக்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக 7.14 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத வகையில் தைவான் பொருளாதாரம் வலுவானாதாக மாறியுள்ளது. செமிகண்டக்டர்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சார்ந்த துறைகளின் உற்பத்தியில் நம் தேசம் வலுவாக இருக்கிறது. குறிப்பாக சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு துறை நமது பொருளாதார வளர்ச்சியில்  பெரும்பங்கு வகித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

மக்களுக்கு ஏன் பணம் வழங்க வேண்டும்?

சமூக இடைவெளியைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் துறைகள் பல பில்லியன் டாலர்களை தைவான்  ஈட்டினாலும், அந்தச் செல்வங்கள் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மட்டுமே செல்கிறது. உணவகம், சில்லறை வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சேவைத் துறை மற்றும் சாமானியர்களுக்கு இது நேரடியாகக் கிடைப்பதில்லை.

சமூக அடுக்கில் மேல்மட்டத்தில் இருக்கும் 20 சதவீதம் மற்றும் அடிமட்டத்தில் 20 சதவீதம் உள்ள குடும்பங்களுக்கிடையேயான வருமான சமத்துவமின்மை 6.17 மடங்கு அதிகரித்துள்ளதால், இந்த இடைவெளியைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வை ஊக்குவிக்க:

மக்கள் கையில் பணம் சேரும்போது உணவகங்கள், கல்வி, முதியோர் பராமரிப்பு மற்றும் உள்ளூர் வணிகங்களில் அதை அவர்கள் செலவிடுவார்கள். இது பணப்புழக்கத்தை அதிகரித்து உள்ளூர் சிறுவணிகங்களைக் காக்கிறது.

பணவீக்கத்தைச் சமாளிக்க: உலகளாவிய பணவீக்கம், அமெரிக்க வரிவிதிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் அதிகரித்துள்ள தினசரி வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க இந்தத் தொகை உதவும்.

முன் மாதிரிகள்

தைவான் அரசு தனது மக்களுக்கு நேரடியாகப் பணம் வழங்குவது இது முதல் முறையல்ல. 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலையின் போது 3,600 தைவான் டாலரையும் (NT$), கொரோனா காலத்தில் (2020 - 21) 3,000 மற்றும் 5,000 தைவான் டாலர்களையும், 2023-ல் 6,000 தைவான் டாலரையும் அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது.

தைவான் அரசு தனது மக்களுக்கு ரூ.30,000 வழங்குவது என்பது வெறுமனே ஒரு இலவசத் திட்டம் அல்ல; அது ‘தொழில்நுட்பப் புரட்சி’யின் பலனை மக்களுக்கே திருப்பிக் கொடுக்கும் ஒரு விவேகமான பொருளாதார உத்தி.

செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் துறையில் உலகளவில் சாதனை படைத்து வரும் தைவான், அதன் மூலமாக கிடைக்கும் உபரி வருவாயை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பயன்படுத்துகிறது. வளரும் நாடுகளுக்கு தைவானின் இந்த ‘பொருளாதாரப் பகிர்வு மாதிரி’ ஒரு சிறந்த பாடம்.

குடிமக்கள் வங்கிக் கணக்கில் ரூ.30,000 - தைவான் அரசு வாரி வழங்குவது ஏன்?
சீனா Vs அமெரிக்கா: காங்கோ ‘கனிம யுத்தம்’ பின்னணி என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in