அமெரிக்காவில் இருப்பு வைத்த தங்கத்தை லண்டனுக்கு நெதர்லாந்து மாற்றியது ஏன்? - ஓர் ‘அரசியல்’ பார்வை

அமெரிக்காவில் இருப்பு வைத்த தங்கத்தை லண்டனுக்கு நெதர்லாந்து மாற்றியது ஏன்? - ஓர் ‘அரசியல்’ பார்வை
Updated on
3 min read

பிரான்ஸை தொடர்ந்து நெதர்லாந்தும் அமெரிக்காவில் இருப்பு வைத்திருந்த பல பில்லியன் மதிப்பிலான தங்கத்தை லன்டனுக்கு மாற்றியுள்ளது. இது புவி அரசியலில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ட்ரம்ப் மீது ஐரோப்பாவுக்கு நம்பிக்கை குறைகிறதா என்ற விவாதங்களையும் இந்த நடவடிக்கை கிளப்பிவிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் ஏன் இவ்வாறாக தங்கத்தின் இருப்பை வேறு நாடுகளுக்கு மாற்றுகின்றன என்பது குறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம்.

பல ஆண்டுகளாகவே உலகம் முழுவதுமுள்ள மத்திய வங்கிகள், அரசாங்கங்கள், நிறுவனங்கள் தங்கள் தங்கத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்க அமெரிக்க ஃபெடரல் ரிசர்வை நம்பி வந்திருக்கின்றன. இதன் பின்னணியில் ஒரு வரலாறும் இருக்கின்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் 1944-ல் பிரெட்டன் உட்ஸ் உடன்படிக்கை எட்டப்பட்டது. உலகப் பொருளாதாரத்தை மீள்கட்டமைப்பு செய்ய இந்த உடன்படிக்கை எட்டப்படுவதாகக் கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க டாலரின் மதிப்பு, தங்கத்தின் மதிப்புடன் நேரடியாக இணைக்கப்பட்டது.

மற்ற அனைத்து நாடுகளின் நாணய மதிப்புகளும் அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டன. இதனால் அமெரிக்க டாலர் உலகின் முதன்மை சர்வதேச நாணயமாக மாறியது. இதனையடுத்து 1950-களில் இருந்து, ஐரோப்பிய தங்கம், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வில் குவியத் தொடங்கியது.

தங்கத்தை நியூயார்க்கில் சேமிப்பது தங்களது கையிருப்பைப் பாதுகாக்க ஒரு புத்திசாலித்தனமான வழியாக நாடுகள் கருதி, அவ்வாறாக அமெரிக்காவில் தங்கத்தை கையிருப்பு வைக்கத் தொடங்கின. ஆனால், அந்த நிலைமை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

அமெரிக்காவில் இருப்பு வைத்திருந்த தங்கத்தை ஐரோப்பிய நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வேறு நாடுகளுக்கு நகர்த்துகின்றன. 2026 ஜனவரியில், பிரான்ஸ் வங்கி, அமெரிக்க ஃபெடரல் வங்கியில் வைக்கப்பட்டிருந்த 129 டன் தங்கத்தை மாற்றியது. அதற்கும் முன்னதாக 2018-ல் துருக்கி தனது தங்க கையிருப்பு முழுவதையும் அமெரிக்காவில் இருந்து திரும்பப் பெற்றது. 2013-ல் ஜெர்மனி பெருமளவில் தங்கத்தை அமெரிக்கக் கையிருப்பில் இருந்து நகர்த்தியது. இப்போது நெதர்லாந்து செய்துள்ளது.

86 டன் தங்கம்..

நெதர்லாந்தின் டச்சு மத்திய வங்கி (De Nederlandsche Bank - DNB), அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பு வைத்திருந்த சுமார் 86 டன் தங்கத்தை அங்கிருந்து எடுத்துள்ளது. அதில் பெரும்பகுதியை லண்டனுக்கு மடைமாற்றியுள்ளது. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, கடுமையான பொருளாதார நெருக்கடிகள் ஏற்படின் அதைச் சமாளிக்கத் தயாராகும் முயற்சியின் ஒரு பகுதி என்று பரவலாகக் கூறப்படுகிறது.

ஆனால், வெளிநாட்டு தங்கத்தை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகள் ட்ரம்ப் மீதான நம்பிக்கையை இழந்து வருவதாகவும், அதனாலேயே இத்தகைய நடவடிக்கைகளில் அவை இறங்குவதாகவும் கூறப்படுகிறது.

ட்ரம்ப் 2-வது முறையாக அதிபரானதில் இருந்தே வரி விதிப்புகள் மூலம் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். நட்பு நாடுகளிடமே ட்ரம்ப் காட்டும் கெடுபிடி, ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் குறித்த கருத்து வேறுபாடுகள் ஆகியவை அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர், புவி அரசியல் நிபுணர்கள்.

“ட்ரம்ப் நிலையற்றவர், வெளிநாட்டு தங்க கையிருப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒரு நாள் அவர் புதுமையான யோசனைகளைக் கொண்டு வர மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஜெர்மன் உறுப்பினர் மார்கஸ் ஃபெர்பர் 2025-ல் ஓர் ஊடகப் பேட்டியில் எச்சரித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

நெதர்லாந்து ஏன் தங்கத்தை மாற்றுகிறது?

இந்தப் பின்னணியில்தான், நெதர்லாந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்நாட்டின் மொத்த தங்க கையிருப்பு 612.4 டன். இதன் மதிப்பு சுமார் 83.8 பில்லியன் டாலர். தனது தங்கத்தில் 31.3%-ஐ அமெரிக்காவிலும், 19.7%-ஐ கனடாவிலும் மற்றும் உள்நாட்டிலேயே ஸீஸ்ட் (Zeist) கருவூலத்தில் 30.8%-ஐயும், லண்டனில் 18.1%-ஐயும் கையிருப்பாக வைத்திருந்தது. இப்போது லண்டனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவை 32.1% ஆக உயர்த்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பங்கு தலா 18.5% ஆக குறைந்துள்ளது.

இதற்காகத்தான் டச்சு வங்கி சுமார் 86 டன் தங்கத்தை மாற்றியது. ஆனால் அது அனைத்தும் நேரடியாக கொண்டு செல்லப்படவில்லை. அமெரிக்காவில் சுமார் 59 டன் தங்கத்தை விற்றுவிட்டு, லண்டனில் மாற்று தங்கத்தை வாங்கியது. மேலும் 27 டன் தங்கம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து ஸீஸ்டுக்கு (Zeist) மாற்றப்பட்டு, அதே அளவு ஸீஸ்டிலிருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டது.

நெருக்கடியின்போது ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க தனது கையிருப்பை பல இடங்களில் பரப்பியுள்ளதாக நெதர்லாந்து மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது.

மேலும், நெருக்கடி காலத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பு வைக்கப்படும் தங்கத்தை விரைவாகவும், நேரடியாகவும் பயன்படுத்துவது அத்தனை எளிதானது அல்ல. ஆனால், இங்கிலாந்து வங்கியில் இருப்பு வைக்கப்படும் தங்கம் சர்வதேச சந்தை தரத்தை பூர்த்தி செய்வதால் வர்த்தகம் செய்ய மிகவும் எளிதானது என்று டச்சு மத்திய வங்கி கருதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் விளக்குகின்றனர்.

உலக நாடுகளின் இதுபோன்ற முடிவுகள் இயல்பானதுதான் என்றாலும் கூட, புவி அரசியல் பார்வையாளர்களோ பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகள் முடிவெடுத்துள்ள காலக்கட்டத்தை சுட்டிக் காட்டுகின்றனர்.

ஐரோப்பிய நட்பு நாடுகள், அமெரிக்க கொள்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு ட்ரம்ப் வெளிப்படையாகவே வலியுறுத்தி வருகிறார். அதுவும் ஈரான் போர் உச்சத்தின் போது ட்ரம்ப் ஐரோப்பிய நட்பு நாடுகளின் ஆதரவுக் கரத்தை வெகுவாக எதிர்பார்த்தார்.

ஆனால், பல ஐரோப்பிய நாடுகள் ஈரான் போரில் நேரடியாக பங்கேற்க மறுத்துவிட்டன. உதாரணமாக, ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் இஸ்ரேலிய விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த பிரான்ஸ் தடை விதித்தது, சிசிலியில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் தரையிறங்க இத்தாலி மறுத்தது.

இவையெல்லாம் அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகளின் நட்புறவு கசந்து வருவதன் ஒரு சான்றாகவே பார்க்கப்பட்டது. இந்த நேரத்தில் தான் பிரான்ஸ், நெதர்லாந்து நடவடிக்கைகள் நடந்துள்ளது.

அதுமட்டுமல்லாது 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோது மேற்கத்திய நாடுகள் ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கின. அதன் பின்னால் வெளிநாட்டில் வைக்கப்பட்டுள்ள கையிருப்பு போர் இன்னும் பிற புவிசார் அரசியல் சர்ச்சைகளில் சிக்கக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடம் மிகுந்ததும், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகள் தங்கக் கையிருப்பை அமெரிக்காவிலிருந்து மாற்ற ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறாக தங்கக் கையிருப்பை அமெரிக்காவிலிருந்து மாற்றுவதற்கான காரணங்கள் பலவாக விரிந்தாலும் கூட, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகள், ராணுவக் கொள்கைகள் பல உலக நாடுகளுக்கும், உள்நாட்டிலேயே கணிசமாக ஒரு தரப்பினருக்கும் பிடிக்கவில்லை என்பதையும் சொல்லியே ஆக வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

அமெரிக்காவில் இருப்பு வைத்த தங்கத்தை லண்டனுக்கு நெதர்லாந்து மாற்றியது ஏன்? - ஓர் ‘அரசியல்’ பார்வை
அச்சுறுத்தும் ஆடைக் கழிவுகள் - இந்தியா எதிர்கொள்ளும் சவால் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in