

தேவைக்கும், பண்டிகை, திருவிழாக்களுக்கும் ஆடை வாங்கிய காலம் போய், ஒரு குறிப்பிட்ட வகையிலான ஆடை பிரபலமாகிவிட்டது என்பதற்காகவே அதை வாங்கும் போக்கு ஒரு தரப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. அதற்குத் தீனி போடுகிறது ஃபாஸ்ட் ஃபேஷன் (Fast Fasion). பிராண்டட் க்ளோதிங் சென்டர்கள் முதல் ப்ளாட்ஃபார்ம் கடைகள் வரை அத்தகைய ஆடைகள் குவிந்து கிடக்கின்றன.
ஃபாஸ்ட் ஃபேஷன் என்பது ட்ரெண்டில் உள்ள ஆடைக் கலாச்சாரத்துக்கு ஏற்ப ஆடைகளை வேகமாக வடிவமைத்து, வேகமாக உற்பத்தி செய்து, வேகமாக சந்தைப்படுத்தும் ஒரு வணிக முறையாகும். ஆடை வடிவமைப்பு தொடங்கி விற்பனைக்கு கடைகளுக்கு வரும் வரை வெறும் 15 நாட்களையே இந்த ஃபாஸ்ட் ஃபேஷன் நிறுவனங்கள் எடுத்துக் கொள்கின்றன.
துரித உணவு போல் துரித ஆடை விற்பனைச் சந்தை பிரபலமாகிவிட்டது. ஆனால், ஃபாஸ்ட் ஃபேஷன் முறை சுற்றுச்சூழலுக்கு எத்தகைய சவால் விடுத்து வருகிறது என்பது பற்றி குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட நம்மில் பலருக்கும் இருப்பதில்லை என்பது வேதனை.
சிலி நாட்டில் தொடங்கி இங்கே ஹாரியானா மாநில பானிபட் வரை ஆடைக் கழிவுகள் ஏற்படுத்திவரும் அச்சுறுத்தல் பற்றி பட்டியலிடுவது அதன் மீதான வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்று தோன்றுகிறது.
முதலில் தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் நிலவரத்தை எடுத்துக் கொள்வோம். அங்கே, அடகாமா பாலைவனத்தை ஒட்டிய ஒரு பகுதிதான் உலகிலேயே மிக வறண்ட பகுதியாக அறியப்படுகிறது. அங்கு குவியல் குவியலாக நியான் ஸ்வெட்டர்கள், தூக்கி வீசப்பட்ட ஜீன்ஸ் ஆடைகள் இன்னும்பிற ஃபாஸ்ட் ஃபேஷன் ரக ஆடைகள் கிடக்கின்றன. சில ஆடைகளில் அதன் விலைப் பட்டியல் கூட பிரிக்கப்படாமல் கிடக்கின்றன என்கிறது அங்கு கள ஆய்வு மேற்கொண்டு வெளியிடப்பட்ட செய்திகள் சில.
உலகளவில் ‘ஆடைக் கழிவுகளின் சமாதி’ என்றும் கூட அதைக் குறிப்பிடலாம் என்கின்றன அந்த செய்திக் குறிப்புகள். கிட்டத்தட்ட 60 ஆயிரம் டன் தூக்கிவீசப்பட்ட ஆடைக் கழிவுகள் அங்கு குவிந்து கிடக்கின்றன. அதாவது, செய்றகைக்கோள் புகைப்படத்தில் தெளிவாகத் தெரியும் அளவுக்கு அங்கு ஆடைக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன என்று குறிப்பிடுகையில் பிரச்சினையின் வீரியத்தை ஊகிக்க முடிகிறது.
உலகின் ஒரு சில பகுதிகளில் இ-வேஸ்ட் குவிவது போல் சிலியில் ஆடைக் கழிவுகள் குவிவதன் பின்னணியிலு வளர்ந்த நாடுகள் இருக்கின்றன. அவை தங்கள் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் அல்லது பயன்படுத்தப்பட்ட ஆடைகளை செகண்ட் - ஹேண்ட் ட்ரேட் (Second-hand trade) என்ற பெயரில் ஏற்றுமதி செய்துவிடுகின்றன.
ஆனால் அவ்வாறாக வருவனற்றில் கணிசமான அளவிலான ஆடைகள் விற்பனைக்கு உகந்ததாக இருப்பதில்லை. அவ்வாறாக தேங்கிவிடும் ஆடைகளில் ஒரு பகுதியை ரசாயனம் இருக்கிறது என்று கூறி அவற்றை திடக்கழிவு மேலாண்மை கழிவுக்கூடங்கள், நிலத்தடியில் புதைக்கும் (லேண்ட்ஃபில்) கழிவாகக் கருதுவது இல்லை. இதனால் உலகெங்கும் சிலியின் அடகாமா பாலைவனத்தை ஒட்டிய பகுதியைப் போல் பல பகுதிகள் ஆடைக் கழிவு குவிக்கும் டம்பிங் யார்டாக மாறி வருகின்றன.
ஃபாஸ்ட் ஃபேஷன் தொழிலின் வளர்ச்சியால் உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியும் ஒரு லாரி அளவிலான ஆடைக் கழிவுகள் எங்கோ வீசப் படுகின்றன இல்லை எரிக்கப்படுகின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
சிலி நாட்டின் நிலை இதுவென்றால், இந்தியாவில் ஆண்டுக்கு 7,800 முதல் 8000 கிலோ டன் ஆடைக் கழிவு தேங்குகிறது என்கிறது புள்ளிவிவரங்கள். உலகின் ஒட்டுமொத்த ஆடைக் கழிவில் இது 8.5% என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் குவியும் ஆடைக் கழிவுகளில் 90% உள்நாட்டுப் பயன்பாட்டின் மூலம் உருவாவதே, எஞ்சிய 10% தான் மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஆடைக் கழிவுகள் மற்றும் செகண்ட்-ஹேண்ட் ஜவுளிகள்.
இந்த 10% கழிவுகள் ஹரியானாவின் பானிபட் தொழிற்பேட்டையில் குவிக்கப்படுகின்றன. இங்கு குவியும் ஆடைக் கழிவுகளில் காலங்காலமாக அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆடைகளை நிறம், தரம் வாரியாக பிரித்து அவற்றை போர்வைகள், நூலாக மறுசுழற்சி செய்வோரிடம் சேர்க்கின்றனர்.
ஒருவகையில் பானிபட்டின் இந்த மைய்த்தின் மூலம் இந்தியாவில் குவியும் மொத்த ஆடைக் கழிவில் 59% மறுசுழற்சி ஆகிவிடுகிறது என்பது ஆறுதலான விஷயம் தான்.
ஆனால், எஞ்சியுள்ள 40% ஜவுளிக் கழிவு உண்மையிலே சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவால் தான் என்கின்றனர் நிபுணர்கள்.
ஃபாஸ்ட் ஃபேஷன் ஆடைகளில் 60% ஆடைகள் பாலியெஸ்டர், நைலான், அக்ரிலிக் போன்ற சின்தடிக் பாலிமர்களால் உருவாக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மறுசுழற்சிக்கு தகுதியற்றவையாக இருப்பதாலேயே இந்தக் கழிவுகள் தேங்கிவிடுகின்றன. இவற்றை அப்படியே விடுவது நிலத்துக்கும், நிலத்தடி நீருக்கும் தீங்கு விளைவிக்கும். இவற்றை எரிப்பதும் காற்று மாசுபாட்டை உருவாக்கும்.
பருத்தியிலான ஒரு சட்டையை தயாரிக்க சுமார் 2600 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், அவை வேகமாக மக்கிவிடும். அதேவேளையில் சின்தடிக் ஆடைகள் மக்க சுமார் 200 முதல் 800 ஆண்டுகள் வரையில் ஆகும் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். பல காலமாக வெயிலிலே கிடக்கும் சின்தடிக் ஆடைகள் மைக்ரோ ப்ளாஸ்டிகுகளாக மக்கி நிலத்தடி நீரை, வேளாண் நிலங்களை பாதிக்கின்றன.
இந்த ஃபாஸ்ட் ஃபேஷன் போக்கால் ஆடைக் கழிவு குவிந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது ஒருபுறம் என்றால், மறுபுறம் சமூக நலன் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எப்படியென்றால் வளரும் நாடுகளில் ஃபாஸ்ட் ஃபேஷன் உற்பத்தித் தொழிலில் 18 முதல் 24 வயதான பெண்களே அதிகம் வேலை செய்கின்றனர். அமெரிக்க தொழில் துறை ஆய்வறிக்கை ஒன்றில், அர்ஜென்டினா, வங்கதேசம், பிரேசில், சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், துருக்கி, வியட்நாம் போன்ற நாடுகளில் ஃபாஸ்ட் ஃபேஷன் தொழிற்கூடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
மேலும், ஃபாஸ்ட் ஃபேஷன் தொழிலுக்காக பணியமர்த்தப்படும் பெண்கள் தங்குமிடங்கள் போதிய வசதிகள் அற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிக உழைப்பு குறைந்த வருமானம், பணிப் பாதுகாப்பு போன்ற சுரண்டல்கள் நடப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மலிவான கூலி, பெரும் வரிச் சலுகைகள் மற்றும் தளர்வான சட்டங்கள், விதிமுறைகள் காரணமாக வளரும் நாடுகள் ஆடைத் தொழிலுக்கு ஏற்றதாக உள்ளன. ‘The True Cost’ என்ற ஆவணப்படத்தின்படி, உலகில் ஆறு பேரில் ஒருவர் உலகளாவிய ஃபேஷன் தொழிலின் ஏதாவது ஒரு பகுதியில் வேலை செய்கிறார், இது ஃபேஷன் தொழிலை அதிக தொழிலாளர்களை சார்ந்திருக்கும் தொழிலாக ஆக்குகிறது.
மேலும், வளரும் நாடுகளில் பெரும்பாலும் கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகள் இல்லை. உதாரணமாக, சீனா ஃபாஸ்ட் ஃபேஷனின் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது, ஆனால் அது கடுமையான நிலச் சீரழிவு மற்றும் காற்று, நீர் மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது” என்று ஜவுளித் தொழிலை ஒட்டிய சேதாரங்கள் பற்றி நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆடைக் கழிவுகள் அதன் அச்சுறுத்தல் குறித்து சென்னையில் உள்ள ‘க்ரீன் எதிக்ஸ்’ என்ற திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஸ்ரீராமன் பல்வேறு பரிமாணங்களிலும் விளக்கினார்.
அவர் பகிர்ந்த தகவல்கள் - “ஆடைக் கழிவு மட்டுமல்லாது திடக்கழிவு மேலாண்மை பொறுத்தவரை அதை தரம் பிரித்துக் கொடுத்தாலே (Seggregation) 90% கழிவு வரை அதை நாம் மறுசுழற்சி செய்ய முடியும். கம்போஸ்ட் செய்வதும் கூட மறுசுழற்சிதான்.
நமக்கு உருவாகும் 50 முதல் 60% கழிவுகள் ஆர்கானிக் வேஸ்ட் தான். மீதமுள்ள கழிவையும் சரியாக தரம் பிரித்தால் அதை நிச்சயமாக அந்தந்த துறைகளுக்கு அனுப்பி மறுசுழற்சி செய்யலாம். உலகம் முழுவதுமே கழிவுகளை சரியாக, வெற்றிகரமாக மேலாண்மை செய்ய தரம் பிரித்தல் தான் திறவுகோல்.
ஆடைக் கழிவுகளை சட்டப்படி லேண்ட்ஃபில் செய்ய முடியாது. அதை இன்சினரேட் செய்வதும் (எரித்து சாம்பலாக்குதல்) மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பையே ஏற்படுத்தும்.
ஆடைக் கழிவுகள் குவிவதற்கு தீவிர நுகர்வு கலாச்சாரமும் (‘மேட் கன்ஸ்யூமரிஸம்’) ஒரு முக்கியக் காரணம்.
அதேபோல், உலர் கழிவுகளை (ட்ரை வேஸ்ட்) கையாள்வதில் அரசுக்கும் கொள்கை வேண்டும். பொதுவாக ஆடைக் கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் வாங்குவதில்லை. அதனால் வீடுகளிலேயே தேங்கும் ஆடைக் கழிவை மக்கள் வீசி எறிவதும் அதிகமாகிறது.
பெங்களூருவில் மாநகராட்சி சார்பில் உலர் கழிவுகள் வீடுகள்தோறும் சேகரிக்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கள், குப்பை சேகரிப்போருடன் தொடர்பை ஏற்படுத்தி உலர் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழில்துறைக்கு மறுசுழற்சிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த மாதிரியான நடைமுறையை பரவலாக்கினால் ஆடைக் கழிவுகள் குவிவதைத் தடுக்கலாம்.
மூன்றாவதாக, கழிவு மேலாண்மை குறித்து அரசு மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நம் வீட்டில் குப்பை இருந்தால் துர்நாற்றம் வீசும் என்பதால் அதை நாம் அப்புறப்படுத்துகிறோம். ஆனால் அதை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை. தரம் பிரிக்கப்படாமல் வீடு தாண்டி ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் குவியும் குப்பையும், நம் வீட்டுக்குள்ளேயே குப்பையை வைத்துக் கொள்வது போல் தான். அதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
ஸ்வீடன் நாடு, திடக்கழிவு மேலாண்மையில் முன்னணியில் இருக்கிறது. அங்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகளில் இருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இப்போது பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கேயும் கூட பள்ளிப் புத்தகங்களில் இப்போது இது தொடர்பான விவரங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னும் அதிகமாக விழிப்புணர்வும், வளர்ந்த நபர்கள் மத்தியில் பொறுப்புணர்வும் தேவை,” என்றார்.
“ஆடைக் கழிவுகளின் பின்னணியில் உள்ள சமூக, சூழலியல் பிரச்சினைகள் அறிந்து தனிநபர்களும், அரசாங்கங்களும் இன்னும் அதிகமான அக்கறையை செலுத்துவது நமக்கு அள்ளிக் கொடுக்கும் இந்த பூமிக்கு நாம் செய்யும் சிறு தொண்டென்று கொள்வோம்,” என்கிறார் சூழலியல் ஆர்வலர் ஒருவர்.
“ஃபாஸ்ட் ஃபேஷன் என்பது நிச்சயமாக சூழலியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் மீதான விழிப்புணர்வும் அவசியம் தான். ஆனால் பிராண்ட் நிறுவனங்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு சந்தையில் ஆடைகளைக் குவிப்பதை யார் கட்டுப்படுத்துவது. உற்பத்திக்கு இலக்கு இருக்கிறதா அல்லது உற்பத்தி நிறுவனங்களே கழிவுகளை கையாள்வதற்கான கடுமையான வழிகாட்டுதல்கள் தான் இருக்கிறதா?
சில முதலாளிகள் சாமான்யர்கள் அனைவரையும் நுகர்வோராக மட்டுமே பார்க்கும்வரை இதுபோன்ற பிரச்சினைகள் நீளத்தான் செய்யும். இது முதலாளித்துவத்தின் வெளியில் தெரியாத முகம். இன்ஸ்டாகிராம் டூம் ஸ்க்ரோலிங் ஆபத்து என்ற ரீல்ஸையும், இன்ஸ்டாகிராம் அனுமதிப்பது போலத் தான் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் நல்லெண்ண நடவடிக்கைகளும். உலகம் மொத்தமும் முதலாளித்துவத்தின் பிடியில் இருப்பதன் விளைவு தான் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதிப்பும்” என்கிறார் இளம் சமூக ஆர்வலர் ஒருவர்.