யுபிஐ: நம் பணம் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை ஆவது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

யுபிஐ: நம் பணம் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை ஆவது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
Updated on
3 min read

தொழில்நுட்பம் என்பது மேல்தட்டு வர்க்கத்தினருக்கும், பணக்காரர்களுக்கு மட்டுமேயான சொத்து என்ற பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிக் கடைக்காரரையும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக மாற்றிய பெருமை இந்தியாவுக்கு உரித்தானது. அதற்கு ஒரே சான்று, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த ‘யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை முறை’ (UPI).

காகிதப் பணப் பரிமாற்றத்தைக் குறைத்து, ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற கனவை யுபிஐ சாத்தியமாக்கி உள்ளது. ஒரே மாதத்தில் பல நூறு கோடி பரிவர்த்தனைகள், வினாடிக்கு ஆயிரக்கணக்கான பணப் பரிமாற்றங்கள்.

சிங்கப்பூர் முதல் பாரிஸ் ஈபிள் டவர் வரை இந்தியர்களின் பணப் பரிவர்த்தனைகள் அவர்களின் கைபேசி வழியாகத்தான். இவை அனைத்தும் யுபிஐ மூலம்தான் சாத்தியமானது. வல்லரசு நாடுகளே வியந்து பார்க்கும் இந்த யுபிஐ-யின் தோற்றம், இயங்குதளம் மற்றும் எதிர்காலம் பற்றி பார்க்கலாம்.

யுபிஐ: 10 ஆண்டு மைல்கல் சாதனை

நாட்டில் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ சேவை, வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. என்பிசிஐ (NPCI) எனப்படும் இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, ரிசர்வ் வங்கியின் (RBI) மேற்பார்வையில் இயங்கும் யுபிஐ அமைப்பில் பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பரிவர்த்தனை எண்ணிக்கை

யுபிஐ அறிமுகமாகிய நேரத்தில் 1.78 கோடி பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்த நிலையில், 2025-26 காலகட்டத்தில் அது 24 ஆயிரத்து 162 கோடியாக உயர்ந்து. சுமார் 13 ஆயிரம் மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது.

பரிவர்த்தனை மதிப்பு

தொடக்கத்தில் ரூ.0.07 லட்சம் கோடியாக இருந்த யுபிஐயின் பரிவர்த்தனை மதிப்பு, 2025-26-ல் ரூ.314 லட்சம் கோடியாகி 4 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது.

வங்கிகள் இணைப்பு

2016-17-இல் 44 வங்கிகள் மட்டுமே இதனுடன் இணைந்த நிலையில், தற்போது 703 வங்கிகள் இணைந்துள்ளன. நாட்டின் மொத்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் 85 சதவீதம் யுபிஐ மூலமே நடக்கிறது.

யுபிஐ ஐடி (UPI ID) என்றால் என்ன?

யுபிஐ ஐடி என்பது வங்கிக் கணக்கு வைத்துள்ள ஒருவருக்குத் தரப்படும் டிஜிட்டல் முகவரியாகும் (Virtual Payment Address). மின்னஞ்சல் அனுப்ப 'Email ID' தேவைப்படுவது போல, யுபிஐ செயலி வாயிலாகப் பணப் பரிவர்த்தனை செய்ய ஒவ்வொருவருக்கும் இந்த யுபிஐ ஐடி தேவைப்படுகிறது. இது பொதுவாகச் செல்போன் எண் அல்லது ஒருவரின் பெயர், செயலி அல்லது வங்கியின் பெயர் ஆகியவை இணைந்து உருவாக்கப்படும். (உதாரணமாக: kannan@hdfcbank).

வங்கி கணக்கு எண், IFSC முகவரி உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்காமல், பணப் பரிவர்த்தனைக்கு யுபிஐ ஐடியை மட்டும் பகிர்ந்தாலே பணத்தை எளிதாக அனுப்ப முடியும். ஒரே யுபிஐ செயலி மூலம் பல வங்கிக் கணக்குகளை இணைக்கவும் முடியும்.

யுபிஐ செயல்பாடு: பணம், பரிமாற்றம்

செல்வி என்பவர் ‘வயலின் வங்கி’ கணக்கிலிருந்து, சங்கரின் ‘புல்லாங்குழல் வங்கி’ கணக்கிற்கு (shankar@flutebank) ரூ.100 அனுப்புவதாக வைத்துக் கொள்வோம்.

கோரிக்கை: முதலில், செல்வி தனது யுபிஐ செயலிக்கு (எ.கா: GPay, PhonePe) யாருக்குப் பணம் செலுத்த வேண்டும் என்பதைத் தெரிவிப்பார். செயலிகளுக்கு மனிதர்களின் பெயர்கள் நேரடியாகத் தெரியாது. அவற்றுக்கென இருக்கும் பிரத்யேக மொழியான 'யுபிஐ ஐடி'யைக் குறிப்பிட்டால்தான் செயலிகள் பணத்தை அனுப்பும்.

அடையாளம்: இதில் சங்கரின் அடையாளம் இரு பிரிவுகளாக இருக்கும். முதலாவது சங்கரின் பெயர், இரண்டாவது வங்கியின் பெயர். அதாவது shankar@flutebank என இருக்கும். இந்த யுபிஐ ஐடி, சங்கரின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். செல்வி தன் கைபேசியில் சங்கரின் எண்ணைப் பதிவு செய்யும்போது, அது shankar@flutebank என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும் என்பதைச் செயலி புரிந்துகொள்ளும்.

உறுதிப்படுத்துதல்: செயலி யுபிஐ அமைப்பிற்கு ஒரு கோரிக்கையை அனுப்பும். பரிவர்த்தனையை உறுதிப்படுத்துமாறு யுபிஐ அமைப்பு பயனரிடம் கேட்கும். பயனாளர் தனது 4 அல்லது 6 இலக்க ரகசிய எண்ணான ‘பின்’-ஐ பதிவு செய்வது தான் இந்த உறுதிப்படுத்தல் செயலாகும். ரகசிய எண் பதிவு செய்யப்பட்டதும், பயனர் பரிவர்த்தனையை உறுதி செய்துவிட்டார் என யுபிஐ புரிந்துகொள்ளும்.

வங்கிச் சரிபார்ப்பு: செல்வி கணக்கு வைத்துள்ள 'வயலின் வங்கி' அந்தப் பரிவர்த்தனையைச் சரிபார்க்கும். செல்வியின் கணக்கில் பணம் இருக்கிறதா, கோரிக்கை சரியானதா, பரிவர்த்தனை வரம்பு எட்டப்பட்டதா, ஏதேனும் மோசடி நடந்துள்ளதா எனச் சோதிக்கும். இவை அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தால், பரிவர்த்தனையைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாக 'வயலின் வங்கி' யுபிஐ அமைப்பிற்குத் தெரிவிக்கும்.

பரிமாற்றம்: யுபிஐ அமைப்பானது அந்தப் பரிவர்த்தனையைச் சங்கரின் 'புல்லாங்குழல் வங்கி'க்கும், சங்கரின் யுபிஐ ஐடி இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கும் கொண்டு சேர்க்கும்.

வரவு வைப்பு: செல்வியின் 'வயலின் வங்கி' கணக்கிலிருந்து 100 ரூபாய் கழிக்கப்பட்டு, சங்கரின் 'புல்லாங்குழல் வங்கி' கணக்கில் ரூ.100 வரவு வைக்கப்படும்.

தகவல் அனுப்புதல்: புல்லாங்குழல் வங்கி இந்தப் பண வரவை யுபிஐ அமைப்பிடம் தெரிவிக்கும். பணம் சரியான நபருக்குச் சென்றுவிட்டது என்பதை யுபிஐ அமைப்பு செல்வியின் வங்கிக்கும், அவருடைய செயலிக்கும் தகவலாக அனுப்பிப் பரிவர்த்தனையை நிறைவு செய்யும்.

யுபிஐ பரிவர்த்தனையின் எதிர்காலம்: எதிர்காலத்தில் குரல் வழிப் பரிவர்த்தனை, இணையவசதி இல்லாமல் பரிவர்த்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு ஆகியவை இதில் வரவுள்ளன.

வங்கிக் கணக்கு மட்டுமின்றி, ரூபே கிரெடிட் கார்டு மற்றும் பின்நம்பர் தேவையில்லாத “யுபிஐ லைட்” போன்ற வசதிகளும் வந்துவிட்டன. சர்வதேச அளவில் சிங்கப்பூர் , ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், இலங்கை, மொரிஷியஸ், நேபாளம், பூடான், கம்போடியா, கிரீஸ், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளிலும் இந்தியாவின் யுபிஐ செல்லுபடியாகும்.

'பணம் என்றால் காகிதம்' என்ற நிலையை மாற்றி, பாதுகாப்பான பரிமாற்றம் என மாற்றி எழுதியிருக்கிறது யுபிஐ. கார்டுகளும் காகிதப் பணமும் வரலாற்றின் நினைவுகளாக மட்டுமே மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை. பணப் பரிவர்த்தனைக்கு புதிய இலக்கணம் எழுதிவரும் யுபிஐ-தான் எதிர்கால டிஜிட்டல் உலகிற்கு ஆகச் சிறந்த உதாரணம்!

யுபிஐ: நம் பணம் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை ஆவது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
‘தங்கம் வாங்காதீர்’ என மக்களிடம் பிரதமர் மோடி கோருவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in