‘தங்கம் வாங்காதீர்’ என மக்களிடம் பிரதமர் மோடி கோருவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

‘தங்கம் வாங்காதீர்’ என மக்களிடம் பிரதமர் மோடி கோருவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை
Updated on
3 min read

தங்க நகைகள் இந்தியர்களின் பண்பாட்டோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான ஒரு முதலீடு. ஆனால், தங்கம் வாங்குவதும், அதனை இறக்குமதி செய்வதும் தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு மிகப் பெரிய சவாலாக மாறுகிறது.

மத்திய ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய பணவீக்கம் ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆனாலும், ஆண்டுதோறும் சுமார் 7,000 கோடி டாலருக்கும் அதிகமான அந்நியச் செலவாணியைத் தங்கம் வாங்க மத்திய அரசு செலவிடுவதுதான் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அந்நியச் செலவாணியை அதிகமாக இழந்தால், உலகின் முன்னணி பொருளாதார சக்தியாக இந்தியா தொடர முடியுமா?

இந்த விவாதத்தின் மையப்புள்ளியாகவே பிரதமர் மோடியின் ‘தங்கம் வாங்க வேண்டாம்’ என்ற கோரிக்கை பார்க்கப்படுகிறது.

இறக்குமதிச் செலவைக் குறைத்து, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (CAD) கட்டுப்படுத்துவதுதான் ஒரு நாட்டின் ஜிடிபி (GDP) வளர்ச்சியை நிலையானதாக மாற்றும்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிப்பதை உறுதிசெய்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதை மேலும் வலுப்படுத்தவே பிரதமர் தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி கூறும் ‘தற்சார்பு இந்தியா’ என்பது வெறும் அரசியல் கோஷம் அல்ல; அது நாட்டின் அந்நியச் செலவாணியைப் பாதுகாக்கும் மந்திரச் சொல். நாம் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும் நமது ரூபாயின் மதிப்பைக் குறைத்து, டாலரின் கரங்களை வலுப்படுத்துகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே ‘தேவையின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்’ எனப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நாட்டின் தங்க இறக்குமதி

உலக அளவில் தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24 சதவீதம் அதிகரித்து, 71.98 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 58 பில்லியன் டாலராக இருந்தது. சர்வதேச சந்தையில் உருவான விலை உயர்வால், 2025-26-ல் 757.09 டன்னாக இருந்த இறக்குமதி எடை, 2026-27-ல் 721.03 டன்னாகக் குறைந்தது. இருந்தபோதிலும், பண மதிப்பு ரீதியாக இறக்குமதி செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2020-ல் 28.20 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி, 2026-ல் 71.98 பில்லியன் டாலராகக் கடுமையான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.

இறக்குமதியைக் குறைக்க வேண்டுமா?

இந்தியாவின் தங்கத்தின் தேவையில் 90 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவதன் மூலமே நிறைவேற்றப்படுகிறது. இதற்கான தொகையை அமெரிக்க டாலரில் மட்டுமே செலுத்த வேண்டியுள்ளதால், நம் நாட்டின் மதிப்பிற்குரிய அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்து அவசரகால நிதிப் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது.

தங்கம் இறக்குமதி செய்யும்போது வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரிக்கிறது. 2025-26-ம் ஆண்டில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 333.20 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், தங்கம் இறக்குமதிதான். இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கமே அதிகம் இறக்குமதி ஆகிறது.

வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்றால், தங்கதின் இறக்குமதியைக் குறைப்பது கட்டாயமாகும்.

ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.10 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 2.9 பில்லியன் டாலராக இருந்தது.

வர்த்தகப் பற்றாக்குறையும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 85.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 68.90 பில்லியன் டாலராகத்தான் இருந்தது.

இந்தியாவில் தங்கம் இறக்குமதி, கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. அதன் விவரம்:

> 2020-ல் 28.20 பில்லியன் டாலர்

> 2021-ல் 34.62 பில்லியன் டாலர்

> 2022-ல் 46.14 பில்லியன் டாலர்

> 2023-ல் 35 பில்லியன் டாலர்

> 2024-ல் 45.54 பில்லியன் டாலர்

> 2025-ல் 58 பில்லியன் டாலர்

> 2026-ல் 71.98 பில்லியன் டாலர்

டாலருக்கான தேவை அதிகரிக்கும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் செலவும் பணவீக்கமும் உயர்கின்றன.

தங்கத்தில் செய்யப்படும் முதலீடு என்பது வீடுகளிலும் லாக்கர்களிலும் முடங்கிக் கிடக்கும் ‘உற்பத்தி சாரா முதலீடு’ ஆகும். அந்தப் பணத்தைப் பங்குச்சந்தை, வங்கிச் சேமிப்பு அல்லது தொழில்துறைகளில் முதலீடு செய்தால் புதிய வேலைவாய்ப்புகளும் பொருளாதார சுழற்சியும் உருவாகும்.

ஓர் ஆண்டு தங்கம் இறக்குமதி நிறுத்தினால்?

1. இந்தியாவுக்கு ஏறக்குறைய 7,200 முதல் 7,500 கோடி டாலர் (சுமார் ரூ.7 லட்சம் கோடி) வரை அந்நியச் செலவாணி சேமிக்கப்படும்.

2. நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பெருமளவில் குறைந்து நிதி நிலைமை வலுப்பெறும்.

3. டாலருக்கான தேவை குறைந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக வலுவடையும்.

4. கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் இறக்குமதி செலவுகள் குறைந்து உள்நாட்டுப் பணவீக்கம் கட்டுக்குள் வரும்.

5. ரூ.7 லட்சம் கோடி தொழில் துறைக்கு திரும்பி, புதிய தொழில்முனைவோரையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

6. நாட்டின் டாலர் கையிருப்பு அதிகரித்து, சர்வதேச நிதி நெருக்கடிகளை எளிதாக எதிர்கொள்ள உதவும்.

இருமுனை கூரானக் கத்தி

தங்கத்தின் இறக்குமதியை முழுமையாக நிறுத்துவது ‘இருமுனைக் கூரானக் கத்தி’ போன்றது. மேக்ரோ பொருளாதார ரீதியாக ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற நன்மைகள் கிடைத்தாலும், மைக்ரோ பொருளாதார ரீதியாக உள்நாட்டில் நகைத் தொழில் முடக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் கள்ளச்சந்தை ஊடுருவல் அதிகரிக்கும்.

7.8 சதவீதம் ஜிடிபி வளர்ச்சியை எட்டியுள்ள இந்தியாவுக்கு இப்போதையத் தேவை ஆபரணத் தங்கம் இல்லை. உள்நாட்டுத் தயாரிப்புகளும், தொழில்முனைவோரும், நிலையான பொருளாதார வளர்ச்சியும்தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

‘தங்கம் வாங்காதீர்’ என மக்களிடம் பிரதமர் மோடி கோருவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை
ஈரான் - அமெரிக்கா போர்: 6 மாத நிறைவில் கிட்டிய ‘முடிவு’தான் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in