

சொந்த வீடு கட்டுவது என்பது அனைவருக்கும் கனவு. அது நனவாகும் வரை வாடகை வீட்டில்தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் நடுத்தரக் குடும்பத்தினரும், கீழ் நடுத்தரக் குடும்பத்தினருக்கும் இருக்கிறார்கள். ஆனால், சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வாடகைக்கு குடியிருப்போர், வீட்டின் உரிமையாளர் மூலம் பல்வேறு சவால்களையும், நெருக்கடிகளையும், கட்டுப்பாடுகளையும் சந்திக்கிறார்கள்.
வாடகைக்கு குடியிருப்போரின் சவால்கள்
குறிப்பாக, வீட்டு வாடகை திடீரென உயர்த்துதல், குடிநீர் கட்டணம், மின் கட்டணம் வசூலித்தலில் கெடுபிடி, உறவினர்கள், விருந்தினர்கள் திடீரென வந்துவிட்டால் வீட்டு உரிமையாளரிடம் இருந்து குடைச்சல்கள், முன்பணம் அதிகமாகக் கேட்டல், பராமரிப்புச் செலவு, மதம் ரீதியான சிக்கல்கள், உணவு பழக்கங்கள் ரீதியான கெடுபிடிகள், செல்லப் பிராணிகள் வளர்க்க அனுமதி, குழந்தைகள் அதிகம் இருந்தால் தண்ணீர் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு என பல்வேறு கிடுக்கிப்பிடிகளை வாடகைக்கு குடியிருப்போர் எதிர்கொள்கிறார்கள்.
அதிலும் குழாயில் ஏதேனும் அடைப்பு, பழுதுநீக்குதல், வீட்டின் பராமரிப்பு செலவு, மாநகராட்சி ஊழியர்களுக்கு ஏதேனும் பணம் கொடுத்தால்கூட அதிலும் வாடகை தாரர்களிடமிருந்து வசூலிக்கும் நிலைமை ஏற்படுகிறது.
தொடரும் குழப்பமும் கேள்வியும்
உண்மையில், வீட்டின் பராமரிப்பு செலவு, பழுதுநீக்கும் செலவு யாருடையது, வீட்டை பயன்படுத்தும் வாடகைதாரருடையதா அல்லது உரிமையாளருக்கு பொறுப்பா என்ற கேள்வி இரு தரப்புக்கும் இடையே பெரிய நீண்டநாளாக இருந்து வருகிறது.
மத்திய அரசின் புதிய சட்டம்
இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு 2021, இந்திய குத்தகை மாதிரிச் சட்டத்தை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வாடகைக்கு குடியிருப்போர், உரிமையாளர்களுக்கு இடையே நிலவும் பல்வேறு பிரச்சினைகள், குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இரு தரப்பினரும் வாடகை ஒப்பந்தங்களை எழுத்துப்பூர்வமாக செயல்படுத்துவதன் மூலம் பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்க முடியும், வாடகை விவகாரங்களில் கூடுதல் தெளிவையும் பொறுப்புகளையும் கொண்டுவர இச்சட்டம் முயல்கிறது.
இந்தச் சட்டம் நாடு முழுவதும் சீராக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இதில் கூறப்பட்டுள்ள விதிகள் இருதரப்பினருக்கும் சுமுகமான வழிகாட்டுதலை வழங்குகின்றன.
பழுதுபார்க்கும் செலவு யாருடையது?
வீட்டின் பழுதுநீக்கும் செலவு, குழாய் சீரமைப்பு, வண்ணம் பூசுதல் உள்ளிட்டவை எப்போதுமே வீட்டின் உரிமையாளருக்கு பொறுப்பு என்ற பொதுவான கண்ணோட்டம் நிலவுகிறது. ஆனால், இந்தப் புதிய மாதிரி குத்தகைச் சட்டம், இருதரப்புக்கும் இடையே சமநிலையான போக்கை கடைபிடிக்க உதவுகிறது.
வீட்டை வாடகைக்கு விடும்போதும், வாடகைதாரர் வீட்டை காலி செய்து ஒப்படைக்கும்போதும், வீட்டை ஒரே நிலையில் பராமரிப்பதில் வாடகைக்கு குடியிருப்போரும், வீட்டின் உரிமையாளருக்கும் சமமான பொறுப்பு இருக்க வேண்டும்.
இதற்கு வாடகை ஒப்பந்தம் முக்கிய பங்காற்றுகிறது. அந்த ஒப்பந்தத்தில் வாடகைக்கு குடியிருப்போருக்கு என்ன பொறுப்புகள், எதை செய்யலாம், செய்யக்கூடாது, பழுது நீக்கும் செலவு யாருடையது, உரிமையாளருக்கு என்ன கடமை, பொறுப்பு என்பது தெளிவாக வரையரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
புதிய சட்டத்தின்படி, வீட்டின் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணிகளை வீட்டு உரிமையாளர் அல்லது சொத்தின் உரிமையாளரே மேற்கொள்ள வேண்டும். இதில் கட்டமைப்பு சார்ந்த பழுதுபார்ப்புகள் அல்லது முக்கிய பராமரிப்புப் பணிகளும் அடங்கும்.
பழுதுநீக்கும் செலவை ஏற்க வீட்டின் உரிமையாளர் மறுத்தால்?
மழைக் காலத்தில் வீடு ஒழுகுதல், குழாய் பழுதுநீக்குதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை வீட்டின் உரிமையாளர் செய்யத் தவறும் பட்சத்தில் அதற்குரிய பொறுப்பு வாடகைதாரருக்கு இருக்கிறது.
இந்தச் சட்டத்தின்படி, வாடகைக்கு குடியிருப்போர் வீட்டின் பராமரிப்பு, பழுதுநீக்குதல்களை தங்களின் சொந்த செலவில் செய்துவிட்டு, அதற்குரிய பணத்தை எதிர்காலத்தில் செலுத்தும் வாடகையில் இருந்து கழித்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் கட்டுப்பாடு இருக்கிறது. அந்த கழிக்கும் தொகை மாத வாடகையில் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒருவேளை வீடு வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறும் பட்சத்தில், வீட்டின் உரிமையாளர் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை செய்யத் தவறும் பட்சத்தில் 15 நாட்கள் முன்அறிவிப்பு நோட்டீஸ் அளித்து வாடகைதாரர் வீட்டை காலி செய்யலாம் என்ற வசதிகளையும் சட்டம் வழங்குகிறது.
வாடகைக்கு குடியிருப்போரின் பொறுப்புகள் என்ன?
இந்தப் புதிய சட்டம் வீட்டின் உரிமையாளருக்கு மட்டும் பொறுப்புகளை வழங்கவில்லை; வாடகைக்கு குடியிருப்போருக்கும் சில கடமைகளை வகுத்துள்ளது.
வாடகைக்கு குடியிருப்போர் தன்னுடைய வீடு இல்லையே என்பதற்காக பராமரிக்காமல் இருக்கக் கூடாது, வீட்டை நியாயமான வகையில் அவ்வப்போது கவனத்துடன் பராமரிக்க வேண்டும். குறிப்பாக வீட்டை சேதப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏதேனும் தவறாக வீட்டில் நடந்துவிட்டால் அது குறித்து உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு வாடகைக்கு குடியிருப்போருக்கு இருக்கிறது.
வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வீட்டில் உள்ள மின்சாதனங்கள், குழாய்கள், பொருட்களை சேதமடையாமல் பராமரிக்க வேண்டியதும், வீட்டை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பயன்படுத்துவது வாடகைக்கு குடியிருப்போரின் கடமையாகும்.
வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வாடகைதாரர் செய்ய வேண்டிய வீட்டின் பராமரிப்பு பணிகளை செய்யத் தவறும்பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் அந்தப் பணியைச் செய்து அதற்குரிய தொகையை வாடகை வைப்புத் தொகையில் இருந்து கழித்துக்கொள்ளலாம். ஒருவேளை பராமரிப்புச் செலவு, டெபாசிட் தொகையைவிட அதிகமாக இருக்கும்பட்சத்தில், வாடகைதாரருக்கு ஒரு மாதம் நோட்டீஸ் அளித்து, மீதத்தொகையை உரிமையாளர் வசூலிக்கலாம்.
இயற்கை சீற்றங்கள், தீவிபத்து நேரிட்டால் யார் பொறுப்பு?
இயற்கை சீற்றங்களான புயல், தொடர் மழையால் வெள்ளம் வீட்டுக்குள் புகுதல், திடீர் தீ விபத்து, நிலநடுக்கம் ஆகியவை ஏற்படும்போது, வீட்டில் தற்காலிகமாக வசிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
இதுபோன்ற சூழலில், வீட்டின் உரிமையாளர், வாடகைதாரரிடம் இருந்து வாடகை ஏதும் வசூலிக்கக் கூடாது. குறிப்பாக வீட்டில் பராமரிப்பு பணிகள் முடிந்து, வாழத் தகுதியானதாக மாறும் வரை வாடகை ஏதும் வசூலிக்கக் கூடாது. ஒருவேளை வீட்டை பராமரிக்க நீண்டகாலம் தேவைப்படும் அல்லது பெரிய மாற்றம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால், வாடகைதாரரிடம் வாடகை அட்வான்ஸ் தொகை அல்லது டெபாசிட் தொகையை உரிமையாளர் திருப்பி வழங்க வேண்டும். 15 நாட்கள் நோட்டீஸ் காலத்துக்குள் இந்தத் தொகையை உரிமையாளர் தர வேண்டும்.
விரிவான வாடகை ஒப்பந்தம் ஏன் தேவை?
தெளிவற்ற ஒப்பந்தங்கள் மற்றும் வாய்மொழி உத்தரவாதத்தால்தான் வாடகை தொடர்பான பல சர்ச்சைகள் ஏற்படுகின்றன, சட்டங்கள் இல்லாததால் அல்ல. வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன் ரிப்பேர் மற்றும் பராமரிப்பு, அட்வான்ஸ் அல்லது டெபாசிட், நோட்டீஸ் காலம் போன்ற அம்சங்களில் வாடகைதாரரும், வீட்டு உரிமையாளரும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய வாடகை மாதிரிச் சட்டம் தெளிவாகக் கூறுவது என்னவென்றால், பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டால், சிறிய பிரச்சினைகள் பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிடுகிறது. ஆதலால், அனைத்து அம்சங்களையும் ஒப்பந்தத்தில் எழுத்துப்பூர்வமாக குறிப்பிட வேண்டும்.
எதில் கவனம் செலுத்த வேண்டும்?
வாடகை ஒப்பந்தத்தில் கீழ்கண்ட அம்சங்களுக்கு இரு தரப்பினரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்:
1. வாடகை தொகை எவ்வளவு, வாடகை செலுத்தும் தேதி
2. வாடகை அட்வான்ஸ் எவ்வளவு, திருப்பி வழங்கும் முறை
3. வாடகை தொகையை திருத்தி அல்லது மாற்றி அமைக்கும் காலம் குறித்த வரையறை
4. பழுதுநீக்கும் மற்றும் பராமரிப்பு குறித்த பொறுப்புகள் யாருக்கானது என்பது குறித்த தெளிவான விளக்கம்
5. வீட்டு உரிமையாளருக்கான உரிமைகள் குறித்த வரையறை
6. சிக்கல்கள், பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்க்கும் வழிமுறை.